மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்

வியாபாரத்தை முடித்துவிட்டு அன்று சீக்கிரமே தோட்டத்துக்கு வந்துவிட்டார், ‘காய்கறி’ கண்ணம்மா. மதிய நேரம் நெருங்கிவிட... ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் கை கால்களை கழுவி விட்டு வர, இருவரும் தாங்கள் கொண்டு வந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். ஓய்வூதியர் சங்கக் கூட்டத்துக்குச் சென்றிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்து விட, அன்றைய மாநாடு ஆரம்பித்தது.
முதலில் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தவர் வாத்தியார். “வான்பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி-னு பட்டினப்பாலையில காவிரி ஆறு குறித்து எழுதியிருக்காங்க. அதாவது, வானம் கூட பொய்த்து மழை பெய்யாமப் போகலாம். ஆனா, எப்போதும் வற்றாமல் தண்ணீர் பாயக்கூடியது காவிரி ஆறுனு அர்த்தம். ஆனா, இப்போ காவிரி ஆறே வத்திப் போய் கிடக்குது. கர்நாடக மாநிலத்தில காவிரி ஆறு பாயுறதால எப்பவும் செழிப்பா இருக்குற மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள்ல கடுமையான வறட்சி நிலவிட்டுருக்கு. இந்தியாவுல இருக்குற பெரும்பாலான அணைகள்ல தண்ணி வத்திடுச்சாம். குறிப்பா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு மாநிலங்கள்ல கடுமையான வறட்சி. அதனால, ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால… எல்லாத்தையும் வித்துக்கிட்டு இருக்குறாங்க விவசாயிகள். இந்த வருஷம் பருவமழை பெரிய அளவுல கிடைச்சாதான் விவசாயம் செய்ய முடியுங்கிற சூழ்நிலை உருவாகியிருக்கு. இயற்கை என்ன செய்யப்போகுதுனு தெரியலை” என்று கவலை பொங்கக் சொன்னார் வாத்தியார்.
அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையாட்டிய ஏரோட்டி, “சித்திரையில வழக்கமா பெய்ற கோடை மழை கூட இந்த வருஷம் சரியா கிடைக்கலியே. சில இடங்கள்ல மட்டும்தான் கிடைச்சுருக்கு. அதுவும் குறைவாத்தான் கிடைச்சது. கோடை உழவு செய்றதுக்காக மழை கிடைக்கும்னு விவசாயிகள் காத்திட்டுருக்காங்க” என்றார்.
“ஆமாய்யா, வெயில் கொளுத்துது. காலை நேரத்துலயே ரோட்டுல மனுசங்க நடமாட முடியலை” என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நுங்குகளை எடுத்து இருவருக்கும் கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி. “தமிழ்நாடு முழுக்க நெல் கொள்முதல் மையங்கள்ல இன்னும் பிரச்னையாவே இருக்கு. பல இடங்கள்ல தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் செய்ய மாட்டேங்குறாங்க. அறுவடையான நெல்லை வெச்சுக்கிட்டு விவசாயிகள் அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்காங்க.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற விளாம்பட்டியில் 5 ஆயிரம் டன் நெல் அறுவடையாகிக் கிடக்கு. ஆனா, இன்னும் அரசு கொள்முதலை ஆரம்பிக்கவேயில்லை. இதனால நெல்லுல ஈரப்பதம் குறைஞ்சுக்கிட்டே இருக்கு. அதனால எடை நிக்காதாம். விவசாயிகளோட இந்தப் பிரச்னையை வெச்சு தனியார் வியாபாரிகள், புரோக்கர்கள் 75 கிலோ மூட்டையை 800 ரூபாய்னு வாங்கிகிட்டு இருக்காங்களாம். அரசாங்கம் கொள்முதல் செய்தா, ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் 40 காசுங்கிற விலையில ஒரு மூட்டைக்கு 1,155 ரூபாய் கிடைக்கும். ஆனா, அவசரமாக பணம் தேவைப்படுற விவசாயிகள் புரோக்கர்கள்கிட்ட சிக்கி நஷ்டப்பட்டுட்டுகிருக்காங்க, பாவம்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்துலயும் இதேமாதிரி பிரச்னை. அங்க, கொள்முதல் மையத்துக்கு விவசாயிகள் கொண்டு போன நெல்லை ஒரு மாசத்துக்கு மேலாகியும் எடை போட மாட்டேங்குறாங்களாம். நெல் மூட்டைகள் பாதுகாப்பில்லாம வெட்ட வெளியில கிடக்குதாம். அதனால, தினமும் விவசாயிகள் கொள்முதல் மையத்துக்கு போய், நம்ம நெல் இருக்குதானு பார்த்துட்டு வர வேண்டியிருக்குதாம்” என்றார் வேதனையாக!
“தேர்தலுக்கும் நெல் கொள்முதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குனே தெரியலை. நெல் கொள்முதல்ங்கிறது வருஷா வருஷம் வழக்கமா நடக்கிற விஷயம். அதைத் தள்ளி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதே மாதிரிதான் பல ஊர்கள்ல மானியத்துல கொடுக்கிற விதை, உரங்களைக் கூட நிறுத்தி வெச்சிருக்காங்களாம். காலம் கடந்து அதைக் கொடுத்தா என்ன புண்ணியம்” என்று கவலைப்பட்ட வாத்தியார், அடுத்த செய்தியைதான் ஆரம்பித்தார்.
“பொள்ளாச்சி, திப்பம்பட்டியில் இளநீர் ஏல மையம் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. வெயில் காலம் ஆரம்பிச்சதும், இளநீருக்கு அதிகத் தேவை வந்ததால வியாபாரிகள் போட்டி போட்டுக்கிட்டு தோப்புலேயே போய் விலை பேசி வாங்க ஆரம்பிச்சதுல... ரெண்டு மாசமா ஏல மையத்துக்கு இளநீர் வரத்தே இல்லை. அதனால அங்க, கொப்பரையை ஏலம் விட்டுட்டு இருந்தாங்க. சுத்து வட்டார விவசாயிகள் இங்க கொப்பரையைக் கொண்டு வந்து விற்பனை செய்துட்டு இருந்தாங்க. இப்போ, கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வரத்து அதிகரிச்சுட்டு இருக்குதாம். அங்க ஒரு இளநீர் 20 ரூபாய் வரைக்கும் ஏலம் போய்கிட்டு இருக்குதாம்” என்றார்.
“என்கிட்டயும் தேங்காய் குறித்த செய்தி இருக்கு” என்ற ஏரோட்டி, “பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் கொப்பரை ஏலம் நடக்கும். தேங்காய்க்கு விலை இல்லாததால... பெரும்பாலான விவசாயிகள், இளநீராவோ அல்லது கொப்பரையாவோத்தான் விற்பனை செய்துட்டு இருக்குறாங்க. இளநீருக்கு தேவை அதிகமாயிட்டதால கடுமையான தட்டுப்பாடா இருக்குதாம். கொஞ்சூண்டு தண்ணி இருந்தா கூட போதும்னு சரியா வளர்ச்சி அடையாத இளநீர்களைக் கூட வியாபாரிகள் வாங்கிட்டுப் போயிடுறாங்களாம். இங்க இளநீர் 21 ரூபாய் வரைக்கும் விலை போகுது. கொப்பரைக்கும் இப்போ விலை அதிகரிச்சுருக்குதாம். கிலோ 55 ரூபாய் வரை விற்பனையாகுதாம்” என்றார். அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
மருத்துவ தாவரங்களுக்கான கையேடு
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 20-ம் தேதி... ‘இயற்கைசார் உணவு மற்றும் மருத்துவ தாவரங்களின் மருந்தியல் மதிப்பீடு செய்முறைகள்’ எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தாவரவியல் துறை பேராசிரியர் பரிமேலழகன் எழுதிய இந்நூலை, துணைவேந்தர் கணபதி வெளியிட்டார். அதை, பி.எஸ்.ஜி மருந்தியல் கல்லூரி முதல்வர் ராமநாதன் பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய துணைவேந்தர் கணபதி, “அறிவியல் வளர்ச்சியின் வாயிலாக உலக நாடுகள் அனைத்தும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் மருத்துவ தாவரங்களை நாட ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் தாவரங்களின் மருத்துவப் பயன்பாடுகளை அறிந்து அவற்றை அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அந்த வகையில் மருத்துவத்துக்கு பயன்படும் தாவரங்களின் அனைத்து தகவல்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. தவிர, மருத்துவ தாவரங்களின் பயன்பாடு மற்றும் அவற்றை ஆவணப்படுத்தும் முறை, மருத்துவ தாவரங்களின் செயல்திறன் மூலக்கூறுகளை அளவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடிப்படை கையேடாக இருக்கும்” என்றார்.