மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 4 ஏக்கர் நிலத்தில் சந்தனக் கன்றுகளை நடவு செய்தேன். அவை சரியாக வளரவே இல்லை. அதனால், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை செய்து பார்த்தோம். மண் மற்றும் நீர், சந்தன மர சாகுபடிக்கு ஏற்றதல்ல என்று சொன்னார்கள். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?'

ஜி.எஸ். ராணி, சிவகாசி.

புதுக்கோட்டை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் 'மரம்’ தங்கசாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை
##~##

''விஞ்ஞானம் சிலசமயம் வழிகாட்டும், சிலசமயம் தடுமாற வைக்கும். அந்த நேரத்தில் அனுபவம்தான் கை கொடுக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய நிலத்தில் சந்தன மரத்தை நடவு செய்ய விரும்பி, நானும் மண் மற்றும் நீர்ப் பரிசோதனை செய்தேன். 'இந்த நிலம் சந்தனம் பயிரிட ஏற்றது அல்ல’ என்றுதான் முடிவு வந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சந்தனக் கன்றுகளை நடவு செய்தேன். பலரும் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

எனது அனுபவத்தில், வேப்பமரம் வளரும் இடங்களில் எல்லாம் சந்தன மரமும் நன்றாக வளரும் என்பதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். சந்தனம் ஒட்டுண்ணித் தாவர வகை என்பதால், அதைத் தனிப்

நீங்கள் கேட்டவை

பயிராக சாகுபடி செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் வளர்ச்சி சரி வர இருக்காது. சந்தனக் கன்றுகளின் அருகில் வேம்பு, நாவல், நெல்லி... போன்ற மரங்களைப் பரவலாக நடவு செய்யுங்கள். இந்த மரங்களிடம் இருந்துதான் சத்துக்களை எடுத்து சந்தன மரம் வளரும். அதனால்தான் அதை ஒட்டுண்ணி மரம் என்று சொல்கிறோம்.

சந்தன மரத்தின் அருகில் வேறு மர வகை இல்லை என்றால், சுத்தமாக வளராது. இப்போது உடனடியாக சந்தனக் கன்றுகளுக்கு சத்துக்கள் தேவை. எனவே, தட்டைப்பயறு, உளுந்து, துவரை... போன்ற பயறு வகைப் பயிர்களை விதைத்து விடுங்கள். இவை உயிர்மூடாக்காகவும் இருக்கும். காற்றில் இருந்து தழைச்சத்துக்களை கிரகித்து, மண்ணை வளப்படுத்தும் வேலையையும் செய்யும். இவற்றைச் செய்தால், கூடிய விரைவில் சந்தனக் கன்றுகள் தழைத்து வளரத் தொடங்கும்.''

தொடர்புக்கு, அலைபேசி (செல்போன்): 97866-04177.

''ஸ்பைருலீனா பாசி வளர்க்க அரசு அமைப்புகள் பயிற்சி கொடுக்கின்றனவா? விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?''

பி. சுரேஷ்குமார், ஒலையாம்புத்தூர்.

காட்டுப்பாக்கம், கால்நடை ஆராய்ச்சி மையத்தின் மீன் வளப்பிரிவு பேராசிரியர் டாக்டர். மணிகண்டவேலு பதில் சொல்கிறார்.

''கால்நடை, மீன், மனிதர்கள்... என்று எல்லோருக்கும் ஸ்பைரூலீனா பாசி முக்கிய உணவாக பயன்பட்டு வருகிறது. முன்பெல்லாம், ஸ்பைருலீனா வளர்ப்பு என்பது, மிகவும் கடினமான விஷயம். அதை கற்றுக் கொள்ள ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டுங்கள் என்று சொல்வார்கள். உண்மையில், விவசாயத்தில் விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானலும், இந்தப் பாசி வளர்ப்பில் ஈடுபடலாம். தரையில் கீரை சாகுபடி செய்வது போல, தண்ணீரில் ஸ்பைருலீனா என்ற பாசியை வளர்க்கலாம். அவ்வளவுதான் விஷயம். சுமார் 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இருந்து பாசி வளர்ப்பைத் தொடரலாம். எங்கள் ஆராய்ச்சி மையத்தில் கொடுக்கப்படும், இரண்டு நாள் பயிற்சியே பாசி வளர்ப்புக்கு போதுமானது. மதிய உணவு, தேநீர், கையேடு... போன்றவைகளுக்காக 500 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கிறோம். பயிற்சியின் முடிவில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாசியின் தாய் வித்துக்களையும் கொடுத்துவிடுகிறோம்.

நீங்கள் கேட்டவை

பயிற்சி தேவைப்படும் விவசாயிகள் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட எண்ணிக்கை சேர்ந்தவுடன் பயிற்சியை நடத்தி வருகிறோம். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்குகிறோம். வங்கிக் கடன், ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற இந்தச் சான்றிதழ் உதவியாக அமையும். கடந்த காலங்களில் பாசியை வளர்த்து வைத்துவிட்டு, விற்பனை செய்யக் கஷ்டப்படுவார்கள். ஆனால், இப்போது, கிலோ ரூ.500 முதல் ரூ.3,000 ஆயிரம் வரை விற்பனை செய்யும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும், அலங்கார மீன் வளர்ப்பு, கால்நடைத் தீவனம்... போன்றவை

நீங்கள் கேட்டவை

தயாரிக்க இந்தப் பாசியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஸ்பைருலீனா பாசியைப் பயன்படுத்தி, குளிர்பானம், முறுக்கு, மிட்டாய், சாக்லெட்... என்று பல விதமான தின்பண்டங்களை தயாரிக்கலாம். இதை ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் சாப்பிட தோன்றும். சுயஉதவிக் குழு பெண்கள் இதுபோன்ற தின்பண்டங்கள் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார்கள். இந்தப் பாசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாசியை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், வழிகாட்டி வருகிறோம்.''

தொடர்புக்கு, கால்நடை ஆராய்ச்சி மையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி: 044-27452224.

''பங்காளிகளான 6 நபர்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் 5 நபர்களிடமிருந்து 10 ஏக்கர் நிலத்தை, விலைக்கு வாங்கிவிட்டேன். 6-ம் நபருக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலம் மட்டும் மத்தியில் உள்ளது. அவர் என் நிலத்தின் வழியாக பாதை உரிமை கோருகிறார். இப்படி கேட்க சட்டப்படி அவருக்கு உரிமை உண்டா?''

ராஜ், திருச்சி.

நீங்கள் கேட்டவை

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என். ரமேஷ் பதில் சொல்கிறார்.

''பொதுவாகப் பங்காளிகளிடம் இருந்து நிலம் வாங்கும்போது இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும். அவருக்குப் பாதை கேட்க சட்டப்படி உரிமை உண்டு. அவர் இதற்கு முன்பு தன்னுடைய நிலத்துக்குச் சென்று வந்த பாதை தற்போது உங்கள் வசம் இருந்தாலும், அந்தப் பாதையைப் பயன்படுத்த அவருக்குப் பயன்பாட்டு உரிமை உண்டு. ஆனால், அதை அவர் சொந்தம் கொண்டாட முடியாது. விவசாய வேலைகளுக்காகத் தோட்டத்துக்குச் சென்று வரவும் விவசாய இயந்திரங்களைக் கொண்டு செல்லவும் நீங்கள் சுமூக அடிப்படையில் அவருக்கு வழி கொடுத்து விடுங்கள். அந்த நபரோடு, உணர்ச்சிவசப்பட்டு வாய்ச்சண்டையில் ஈடுபடாமல், முன்கூட்டியே சட்ட ஆலோசனை கேட்க வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.''

''மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாமா?''

பேரா. லி. முகுந்தன், குயவர்பாளையம்.

நாமக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின், உணவியல் துறைத் தலைவர் டாக்டர். சந்திரசேகரன் பதில் சொல்கிறார்.

''முன்பு கால்நடைத் தீவனமாக, புளியங்கொட்டையை பயன்படுத்தலாமா? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். புளியங்கொட்டை குறித்து ஆய்வு செய்து, அதில் புரதச் சத்து உள்ளது என்று சொன்னோம். அதன் பிறகு புளியங்கொட்டைக்கு மவுசு கூடியது. தினமும் 100 கிராம் புளியங்கொட்டையை வறுத்து, ஊற வைத்து கொடுப்பதால், மாடுகள் ஆரோக்கியமாக வளரும். இந்த விஷயம் வேகமாக பரவியவுடன், புளியங்கொட்டையைத் தேடி விவசாயிகள் ஓடினார்கள்.

நீங்கள் கேட்டவை

இப்போது, புளியங்கொட்டையை, நிறமூட்டவும், பசை தயாரிக்கவும் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கும் விலையில் அவை கிடைப்பதில்லை. எனவே, தற்போது மாங்கொட்டையை கால்நடைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் பரவி வருகிறது. 10 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகளுக்கு அடர்தீவனம் 4 கிலோ கொடுக்க வேண்டும் என்பது கணக்கு. இதில், 5% அதாவது கால் கிலோ அளவுக்கு மாங்கொட்டைப் பருப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், தினமும் கால் கிலோ அளவுக்கு அடர் தீவனச்செலவை மிச்சப்படுத்த முடியும்.

இந்தப் பருப்புக்களை நன்றாகக் காய வைத்து அரைத்து கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். மாங்கொட்டைப் பருப்பில் 14% புரதச்சத்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து கொடுக்கும்போது, கறவை மாடுகள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பால் உற்பத்தியும் கூடும். அதேசமயம் தீவனச் செலவு குறைகிறது என்று சரியாகக் காய வைக்கப்படாத பருப்புக்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால், பருப்புடன் ஒட்டி வளர்ந்திருக்கும் பூஞ்சைகளினால் மாடுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எச்சரிக்கையாகப் பயன்படுத்தவும்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், உணவியல் துறை, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி, நாமக்கல்-637 002. தொலைபேசி: 04286-266491.

 ''சாண எரிவாயுக்கலன் அமைக்க விரும்புகிறேன். யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

 எம்.வீரப்பன், செங்கமேடு.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், சாண எரிவாயுக்கலன் அமைக்கப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் Pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA(Space) உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.