மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!

மரத்தடி மாநாடு: காபி செடிகள்...  விறகாகும் அவலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: காபி செடிகள்...  விறகாகும் அவலம்!

திகாலையிலேயே ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தோடு, தோட்டத்துக்கு வந்துவிட்ட, ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி நாளிதழ்களில் மூழ்க, ஏரோட்டி, தோட்ட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். காலை வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்த பிறகு, அன்றைய மாநாடு ஆரம்பமானது!

“வெயில் ஏறுறதுக்குள்ள வந்துடலாம்னு பார்த்தா... ஓட்டு கேட்க ஊருக்குள்ள ஆளுங்க வந்துட்டாங்க. தாரை தப்பட்டை அடிச்சுக்கிட்டு ஒரே ஆரவாரம். வழியை அடைச்சுக்கிட்டு கூட்டம் நின்னதால நகர முடியலை. அவங்க போறவரைக்கும் நிக்க வேண்டியதா போச்சு” என்றார், காய்கறி.
“அவங்களுக்குப் பயந்துதான் கண்ணம்மா, நானும் காலையிலே இங்க வந்து உக்காந்துட்டேன். ரெண்டு கட்சி வேட்பாளர்களும் தெரிஞ்சவங்களா போயிட்டாங்க. நீங்க எங்கூட வந்து ஊருக்குள்ள ஓட்டுக் கேளுங்கனு ஒருத்தன் கூப்பிடுறான். இன்னொருத்தன் ‘எங்கூடத்தான் வரணும்ங்கிறான். ரெண்டு பேர்கிட்டயும் இருந்து தப்பிக்கத்தான் செல்போனை அணைச்சு வெச்சுட்டு இங்க வந்துட்டேன்” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொன்னார்.  

“இந்த வருஷம் மே மாசம் 31-ம் தேதியில இருந்து ஜூன் மாசம் 4-ம் தேதிக்குள்ள கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஆரம்பிச்சுடும்னு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணிச்சு சொல்லியிருக்கு. வழக்கமா பெய்ற அளவு அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமா மழை இருக்கும்னு கணிச்சிருக்காங்க. நமக்கு நல்லபடியா மழை கிடைச்சா மகிழ்ச்சிதான்” என்றார், வாத்தியார்.

“ஆமாய்யா, எல்லா பக்கமும் கடுமையான வறட்சி. கடுமையா வெயில் அடிக்கிறதால விவசாயிகள் எல்லாம் நொந்து போய்க் கிடக்கிறாங்க” என்ற ஏரோட்டி,

“திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில், கீழ் மலைப்பகுதியில தாண்டிக்குடி மலை இருக்கு. இந்தப் பகுதியில காபி, ஆரஞ்சு, மிளகு, வாழை, ஏலக்காய்ப் பயிர்கள் அதிகமா விளையும். இந்த வருஷம் மழை இல்லாததால மலையில கடும் வறட்சி நிலவிக்கிட்டு இருக்கு. கிட்டத்தட்ட அஞ்சு மாசமா மழையே இல்லை. கடுமையான வெயில் அடிச்சுக்கிட்டு இருக்குதாம். அதனால, எல்லா பயிர்களும் காய்ஞ்சு போய் கிடக்குதாம். குறிப்பா, காபி செடிகள் எல்லாம் சுத்தமா கருகிப் போச்சாம். ஆண்டுக்கணக்குல பலன் கொடுக்கிற காபி செடிகளை வேரோட தோண்டி அடுப்பு எரிக்கிறதுக்காக விற்பனை செய்துட்டு இருக்கிறாங்களாம்” என்றார் ஏரோட்டி.

“ரொம்ப பாவம்” என்று வருத்தப்பட்ட காய்கறி, தான் கொண்டு வந்திருந்த மாம்பழங்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார், வாத்தியார்.  

“திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்குப் பக்கத்துல புளியரம்பாக்கம்னு ஒரு கிராமம் இருக்கு. இந்த கிராமத்துலதான் அந்தப் பகுதிக்கான நேரடி கொள்முதல் நிலையத்தை நுகர்பொருள் வாணிபக்கழகம் அமைச்சிருக்கு. ரெண்டு மாசமா இங்க விவசாயிகள் நெல்லை விற்பனை செய்துட்டு இருக்காங்க. சுத்துப்பட்டுல இருக்கிற நூறு கிராமங்கள்ல இருந்து இங்க நெல் வரத்து இருக்கிறதால… விவசாயிகளுக்கு டோக்கன் கொடுத்துடுறாங்க. வரிசையா ஒவ்வொரு டோக்கன் நம்பரையா சொல்லிக் கூப்பிட்டு எடை போட்டு பணம் கொடுத்துட்டு இருக்காங்க.

விக்னேஸ்வரன்கிற விவசாயியும் அங்க நெல் மூட்டையை வெச்சிட்டு டோக்கன் போட்டிருக்கார். அவர் நெல்லை வெச்சிட்டு ஒரு வாரம் கழிச்சு கொள்முதல் நிலையம் போனப்போ அவருக்கு பின்னாடி வந்தவங்க நெல்லை எல்லாம் எடை போட்டுட்டு இருந்திருக்காங்க. உடனே விக்னேஸ்வரன், கொள்முதல் நிலைய ஊழியர்கள்ட்ட, தன்னோட நெல்லை எடை போடச்சொல்லிக் கேட்டிருக்கார். அந்த ஊழியர்கள், ‘நேத்தே உங்க பேரைச் சொல்லி பல முறை கூப்பிட்டோம். நீங்க வரலை. அதனால, கொஞ்ச நேரம் பொறுங்க’னு சொல்லியிருக்காங்க. அது அப்படியே வாக்குவாதமாகியிருக்கு. ஒரு வாரமா காத்திருந்த விக்னேஸ்வரன் விரக்தியாகி… பெட்ரோலை ஊத்தி தீ வெச்சுக்க பார்த்திருக்கார். உடனே அங்க இருந்தவங்க அவரை சமாதானப்படுத்தி இருக்காங்க. அதுக்கப்பறம்தான் அவரோட நெல்லை எடை போட்டாங்களாம்” என்றார்.

“ஒவ்வொரு வருஷமும் நெல் கொள்முதல் நிலையங்கள்ல பிரச்னைகள் அதிகமாயிட்டேதான் இருக்கு. ஆனா, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குதே” என்று வருத்தப்பட்டார், காய்கறி.

“கொள்முதல் நிலையத்துல இருக்கிற ஊழியர்களும் தரகர்களும் சேர்ந்துக்கிட்டு பண்ற வேலைதான், இதெல்லாம்” என்ற ஏரோட்டி அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.  

“பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயம் அதிகமா நடக்கிற பகுதி. அந்தப் பகுதியோட சீதோஷ்ண நிலைக்கு தென்னை ரொம்ப நல்லா வரும். காய்கள் நல்லா பெருசா இருக்கும். அதனாலதான் அங்க நிறைய விவசாயிகள் தென்னை சாகுபடி பண்றாங்க. இந்த வருஷம் இந்தப் பகுதியில கடுமையான வறட்சியால தென்னை மரங்களை காப்பாத்துறதுக்காக விவசாயிகள் படாதபாடு பட்டுட்டு இருக்கிறாங்க. அதேநேரத்துல தேங்காய்க்கு விலை கிடைக்கிறதேயில்லை. பல வருஷமா தேங்காய் விலை அதல பாதாளத்துலதான் இருக்கு. கொப்பரைக்கும் இதே நிலைமைதான். சில சமயம் கொப்பரைக்கு நல்ல விலை கிடைச்சாலும் கொஞ்ச நாள் கூட அது நீடிக்காது. தேங்காய், கொப்பரை வியாபாரத்துல இடைத்தரகர்கள் அதிகமா புகுந்ததுதான் விலை கிடைக்காமப் போனதுக்கு காரணம். கலப்பட தேங்காய் எண்ணெய் சந்தையில விற்பனையாகிறதும் விலை இல்லாததுக்கு ஒரு காரணம்.

கொள்முதல்ல இடைத்தரகர்களோட ஆதிக்கத்தை விவசாயிகளால சமாளிக்க முடியலை. அதனால, அரசாங்கமே நல்ல விலை கொடுத்து கொப்பரையை கொள்முதல் செய்யணும்றது, தென்னை விவசாயிகளோட நீண்ட நாள் கோரிக்கையா இருக்கு. பல வருஷமா விவசாயிகள் கேட்டும் எந்த அரசாங்கமும் இதுக்கு காது கொடுக்கலை. அதனால விவசாயிகள் எல்லாம் விரக்தியில் இருக்கிறாங்களாம். இதனால, ஓட்டு கேட்டு வர்ற வேட்பாளர்களை கொஞ்சம் கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டேங்கிறாங்களாம் விவசாயிகள்” என்ற ஏரோட்டி,

“வெயில் உச்சிக்கு ஏறிடுச்சு. மாடுகளை அவுத்து தண்ணி காட்டி நிழல்ல கட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக் கிளம்ப, மாநாடும் முடிவுக்கு வந்தது.