மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!

மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!

மீபத்துல, பாரம்பர்ய கட்டடக்கலை நிபுணர் ஒருத்தரைச் சந்திச்சேன். ‘‘அந்த காலத்துலயெல்லாம் தமிழ்நாட்டுல வீடு கட்டின விவரம் தெரிஞ்ச ஆட்கள், வீடுங்க தெற்குப் பக்கம் வாசல் உள்ள மாதிரிதான் வீடுங்கள கட்டியிருப்பாங்க. ஆனா, இப்போ, வாஸ்து சாஸ்திரப்படி குபேர திசைனு சொல்லி, வடக்குப் பக்கம் வாசல் வைச்சு வீடு கட்டுற பழக்கம் உருவாகியிருக்கு. வடக்குப் பக்கம் வாசல் வெச்சா, வாடைக் காத்துதான் வீசும். இதை எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலைனு’’ சொல்லி வருத்தப்பட்டாரு.

வடக்கு திசையில இருந்து வாடைக் காத்து வீசும். அந்தக் காத்து பட்டால், திடமான ஆளுக்கு கூட, சுவாசக் கோளாறு வரும். இதை பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே கண்டுபுடிச்சு நம்ம முன்னோருங்க வாழ்ந்தாங்க. மேற்குப் பக்கம், படுக்கை அறை இருக்க கூடாதுங்கிறது இயற்கை விதி. காரணம், மேற்கு பக்கம் சூரியன் மறையும் போது, அடிக்கும் வெப்பம், மேற்கு பக்க சுவத்துல இருக்கும். இது இரவு முழுக்க அந்த அறையில இருக்கும். அதனாலதான், மேற்கு திசையில படுக்கை அறை இருக்கக் கூடாதுன்னு சொல்லி வைச்சாங்க. வாஸ்து சாஸ்திரம்ங்கிறதே ஒரு தொழில்நுட்ப அறிவியல்தான். ஆனா, அதைப் பத்தின முழுமையான அறிவு இல்லாதவங்க, எளிய மக்களை கண்டபடி வீடு கட்ட வைச்சு, சிரமப்படுத்துறாங்க.

காற்றியக்கவியல் (Aerodynamics) குறித்த அறிவு இருந்தாதான், வீடு கட்டுறது தொடங்கி விவசாயம், கடல் பயணம், வெளியூர் பயணம்னு எல்லாத்தையும் சிக்கல் இல்லாம, முடிக்க முடியும். நம்ம முன்னோருங்க காத்தை நான்கு வகையா பிரிச்சு வைச்சாங்க.

தெற்கேயிருந்து வீசினா, தென்றல் காத்து

வடக்கேயிருந்து வீசினா, வாடைக் காத்து

கிழக்கேயிருந்து வீசினா, கொண்டல் காத்து

மேற்கேயிருந்து வந்தா, மேலைக் காத்து


மேற்குத் திசையில இருந்து வீசும் காத்துக்கு நம்ம முன்னோர் வெச்ச பேரு குடகு. இதுக்கு மேலைக் காத்துனும் இன்னொரு பேரு உண்டு.

இந்த காத்துதான், கோடை காலத்துல வீசக்கூடிய மேல்திசைக் காத்து. இது மழைக்காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன வரை வீசும். நாலு வகை காத்துல வேகமா வீசி மணலை அள்ளி, மலை போல குவிக்கக்கூடிய திறனும் இதுக்கு உண்டு. ஆடிக்காத்துல அம்மியே பறக்கும்னு சொல்வாங்க இல்லையா?

கொண்டல்ங்கிறது கிழக்குத் திசையில் இருந்து வீசுற காத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்.  இதை மழைக் காத்துனும் சொல்லுவாங்க. தமிழ்நாட்டோட, புவியியல் அமைப்புப்படி வங்கக் கடல், கிழக்கு திசையில இருக்கு. கிழக்கு திசையில இருந்து, வீசக் கூடிய காத்து, மழை மேகத்தை, சுமந்தபடி வந்து, மழையைக் கொட்டும்.

வடதிசை வாடைக் காத்துக்கு, மனிதர்கள் மட்டுமல்ல, மரம், செடி, கொடிகளையும் கூட வாட வைக்கக்கூடிய தன்மை உண்டு. இதை ஊதக் காத்துனும் சொல்லுவாங்க. ரொம்பவும் குளிர்ச்சியான காத்து இது. உடலை நடுநடுங்கச் செய்யும் பனிக்காத்து.  வாடைக் காத்து வீசும் போது மென்மையான மலர்களின் இதழ் ஓரங்கள் சுருண்டுடும். விலங்குகளும் பறவைகளும் சுருண்டு படுக்கும். ‘வாடுதல்’, ‘வாட்டுதல்’ங்கிற சொல்லின் பயன்பாடு வாடைக் காத்தின் சுருண்டு கொள்ளச் செய்யும் இத் தன்மையில் இருந்தே தோன்றி இருக்கலாம்னு தமிழ் இலக்கியம், இந்த பேருக்கு விளக்கம் சொல்லுது.

தெற்குத் திசையில இருந்து வீசும் தென்றல், இதமான காத்து. உடம்பு மேல பட்டா சுகமா இருக்கும். இதுக்காகத்தான் வீடுகள தெற்குப் பக்கம் வாசல் வெச்சு கட்டினாங்க. இனியாவது, இந்த நுட்பங்களைக் கெட்டியா பிடிச்சுக்குவோம்.

காற்று வீசக்கூடிய வேகத்தை வெச்சும், அதுக்கு துணை பேரும் வைச்சிருக்காங்க. அந்த காலத்துல மைல்னு சொன்னதை, இந்த காலத்துக்கு தக்கப்படி கிலோ மீட்டர் வேகம்னு பிரிச்சு சொல்லிக்கலாம்.

6 கி.மீ வேகத்தில வீசுற காத்து ‘மென்காத்து’

6-11 கி.மீ வேகத்தில வீசுற காத்து ‘இளந்தென்றல்’

12-19 கி.மீ வேகத்தில  வீசுற காத்து ‘தென்றல்’

20-29 கி.மீ வேகத்தில வீசுற காத்து ‘புழுதிக்காத்து’

30-39 கி.மீ வேகத்தில வீசுற காத்து ‘ஆடிக்காத்து’

100 கி.மீ வேகத்தில வீசுற காத்து ‘கடுங்காத்து’


இந்த நுட்பம் அத்தனையையும், பல நூறு வருஷங்களுக்கு முன்னாடியே, இயற்கையை உணர்ந்து கண்டுபுடிச்சாங்க. வானிலை அறிக்கையில் ‘‘இன்று 12 கிலோ மீட்டர் வேகத்தில் காத்து வீசும், இது தென்றல் காத்து...னு’’ பிரிச்சு சொன்னா நல்லாதான் இருக்கும். ஆனா, இந்த நுட்பம் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துல இருந்தாதானே, அதை சொல்லுவாங்க..?