
ஓவியம்: ஹரன்

கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், மோட்டாரை ஓடவிட்டு மோட்டார் கொட்டகை அருகேயே அமர்ந்திருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். தானும் அங்கேயே அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சற்றுநேரத்தில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் வந்துவிட, அங்கேயே அன்றைய மாநாடு துவங்கியது.
“ஒரு வழியா தேர்தல் முடிஞ்சு அந்தம்மாவே முதலமைச்சர் ஆகிட்டாங்க பாருங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்தா டாஸ்மாக்கை மூடுவாங்க, என் வீட்டுக்காரர் ஒழுங்கா இருப்பார்னு பார்த்தேன். அவர் திருந்துறதுக்கு வழியில்லை போலனு எங்க தெருவுல ஒரு அம்மா புலம்பித் தீர்க்க ஆரம்பிச்சுடுச்சு” என்றார், காய்கறி.
“அதெல்லாம் சும்மா பேச்சு. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதெல்லாம் நடக்காது. அதில்லாம யார் ஆட்சிக்கு வந்தாலும், நம்மளை மாதிரி பொதுசனங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போறதில்லை. எல்லா மட்டையும் ஒரே குட்டையில ஊறுன மட்டைதான். இதுல நல்ல மட்டை எங்க இருக்கப் போகுது…” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
“மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ரொம்ப குறைஞ்சு போயிடுச்சாம். அதனால அணையில நீர்மட்டமும் ரொம்ப குறைஞ்சுடுச்சாம். இந்த அணையில் எப்பவும் தண்ணி இருக்குங்கிறதால கட்லா, ரோகு, கெளுத்தி, திலேப்பியா...னு வருஷத்துக்கு 30 லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு வளர்ப்பாங்க. தினமும் அணையில் ஒரு டன் அளவுக்கு மீன் பிடிச்சு விற்பனை செய்வாங்க. நீர்மட்டம் ரொம்ப குறைஞ்சிட்டதால, சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாம... வீரனூர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏகப்பட்ட மீன்கள் மயங்கி மிதக்க ஆரம்பிச்சிடுச்சாம். சின்ன மீன்ல இருந்து 2 கிலோ அளவு மீன் வரை இப்படி மிதந்திருக்கு. தகவல் தெரிஞ்சதும் ஊர்க்காரங்க எல்லாம் மூட்டை மூட்டையா மயங்கிக் கிடந்த மீன்களை அள்ளிகிட்டுப் போயிட்டாங்களாம். அது போக, கிட்டத்தட்ட 10 ஆயிரம் கிலோ அளவு மீன்கள் செத்து மிதந்திருக்கு.
தண்ணீர் குறைவாயிருக்கிறதுதான் காரணம்னு சொன்னாலும், கர்நாடககா ரங்க காவிரி ஆத்துல சாக்கடைக் கழிவு, தொழிற்சாலைக் கழிவுநீரையெல்லாம் கலந்து விடுறதும் ஒரு காரணம்னும் சொல்றாங்க” என்றார்.
‘அட, அநியாயமே... என்று சீறிய காய்கறி, ஆளுக்கு இரண்டு நாட்டு வாழைப்பழங்களைக் கூடையில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு... “வீட்டுவாசல்ல ஒரு வாழை மரம் வெச்சிருந்தேன். அதுல கிடைச்ச பழம் இது. நல்லசுவையா இருக்கும் சாப்பிடுங்க” என்றார்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே வாழைப்பழம் குறித்த ஒரு செய்தியை ஆரம்பித்தார், ஏரோட்டி.
“போன மாசத்துக்கு முன்னாடி வாழைத்தார் விலை ரொம்ப சரிஞ்சு கிடந்துச்சு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விலை ஏற ஆரம்பிச்சுச்சு. இப்போதான் வாழைத்தார் ஏலம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இப்போ, செவ்வாழை ரகம் ஒரு தார் 300 ரூபாய்ல இருந்து 900 ரூபாய் வரை விற்பனையாகுதாம். பூவன் ரகத்துல ஒரு தார், 100 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரையும், கற்பூரவல்லி 150 ரூபாய்ல இருந்து 450 ரூபாய் வரையிலும் விற்பனையாகுதாம். நேந்திரன் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், கேரளா ரஸ்தாளி (கதளி) கிலோ 26 ரூபாய்க்கும் விற்பனையாகுதாம். இனி, வாழைக்கு நல்ல விலை கிடைக்கும்னு சொல்றாங்க” என்றார்.
“ஆனா, இது நிரந்தரமா நீடிக்கிறது இல்லையே என்று வருத்தக்குரலில் சொன்ன வாத்தியார், “டெல்டா மாவட்டங்கள்ல கோடை மழை நல்லா பெய்திருக்காம். அதனால, ஆறு, வாய்க்கால்கள்லாம் நல்லா ஈரமாகி இருக்கிறதால உடனடியா தூர் வாருற வேலைகளை ஆரம்பிக்கணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருக்காங்க. இப்போ, வேலைகளை ஆரம்பிச்சா மேட்டூர் அணை திறக்கிறதுக்கு முன்னாடி வேலைகளை முடிச்சுட முடியுமாம். ஆறுகள், வாய்க்கால்ல இருக்கிற ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றிவிட்டு உள்ள கிடக்கிற குப்பைகளை எடுத்தாலே ஓரளவுக்கு சரியாகிடுமாம். விவசாயிகள் அதிகாரிகள்கிட்ட கேட்டுகிட்டு இருக்கிறாங்க. ஆனா, புது அமைச்சர்கள்லாம் நியமிக்கப்பட்ட பிறகுதான் வேலைகளை ஆரம்பிப்பாங்க போல” என்றார்.
“ஆமா, இனிமே அமைச்சருங்க பதவி ஏத்துகிட்டு அவங்க வந்து உத்தரவு போட்டுட்டா மட்டும் உடனடியா நடந்துடப் போகுதா..?” என்று வெறுப்புடன் சொன்னார் ஏரோட்டி.
“சொல்ல மறந்துட்டேன். இன்னொரு முக்கியமான சேதிய்யா” என்று ஆரம்பித்த வாத்தியார், “முன்னெல்லாம் இன்ஜினீயரிங், டாக்டர்னுதான் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆசைப்படுவாங்க. இப்போ, விவசாயப் படிப்புக்கும், வணிகத்துறை படிப்புக்கும் மவுசு கூடிகிட்டு இருக்குதாம். குறிப்பா, தனியார் விவசாயக் கல்லூரிகள்ல சேர்க்கைக்குக் கூட்டம் அலை மோதுதாம். ஒரு சீட்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை பல இடங்கள்ல கல்லா கட்டுறாங்களாம்” என்றார்.
“ஆமா, அப்பறம் கோடிக்கணக்குல காசு கொடுத்து காலேஜ் நடத்த அனுமதி வாங்கினவங்க இலவசமாவா சேர்த்துக்குவாங்க” என்ற ஏரோட்டி, ஒரு செய்தியை ஆரம்பித்தார்.
“வேளாண்மைத்துறை மூலமா விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துல ‘பேட்டரி ஸ்பிரேயர்’ கொடுத்துட்டு இருக்கிறாங்க. இதை மானியம் போக 2 ஆயிரத்து 900 ரூபாய் கட்டி வாங்கணுமாம். ஆனா, வெளி மார்க்கெட்ல ஸ்பிரேயரோட விலையே 3 ஆயிரத்து 200 ரூபாய்தானாம். மானியம் கொடுக்கிறோம்ங்கிற பேர்ல விலையை அதிகரிச்சு கொள்முதல் பண்ணி துறை அதிகாரிங்க நல்லா சம்பாதிச்சிருக்காங்களாம். ஒரு வேளாண்மை உதவி அலுவலருக்கு 6 ஸ்பிரேயர் வரை கொடுத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய சொல்றாங்களாம். விவரம் தெரிஞ்ச விவசாயிகள் இதை வாங்கிறதில்லையாம். ஆனா, அப்பாவி விவசாயிகளை ஏமாத்தி, அவங்ககிட்ட 250 ரூபாய் கமிஷனும் வாங்கிகிட்டு அவங்க தலையில கட்டி விடுறாங்களாம், வேளாண்மை அலுவலர்கள்” என்ற ஏரோட்டி,
“தண்ணியை மடை மாத்திட்டு வந்துடுறேன்” என்று சொல்லி எழுந்து செல்ல, மாநாடும் முடிவுக்கு வந்தது.
மீன்வளப் படிப்புக்குக் கூடுதல் இடங்கள்!
நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையின் அங்கமாக சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியில், அரசு மீன் வளக்கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு இளநிலை மீன்வளப் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டு வரை இக்கல்லூரியில் 40 மாணவர்களை மட்டுமே சேர்க்கும் நிலை இருந்தது. இந்தக் கல்வி ஆண்டில், 60 மாணவர்கள் படிக்கும் அளவுக்கு சேர்க்கை இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தப் படிப்பில் சேர, ‘ஆன் லைன்’ வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 20-ம் தேதி விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள். www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் இது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
நபார்டு வங்கிக்கு புதிய முதன்மைப் பொதுமேலாளர்!

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மைப் பொது மேலாளராக எஸ்.நாகூர் அலி ஜின்னா பொறுப்பேற்றுள்ளார். இவர், திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகளாக வங்கித் துறையில் பணியாற்றி வருகிறார். நபார்டு வங்கியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், மும்பையிலுள்ள நபார்டு வங்கித் தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு நிதித் துறையிலும், கர்நாடக மண்டல அலுவலகத்தின் முதன்மைப் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியம், சார்க் நாடுகள் நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிலும் இந்தியா சார்பிலான வங்கியாளர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.