
புறா பாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார், ரமேஷ் கந்தசாமி

‘‘இ.எம். திரவத்தை விவசாயம் மற்றும் பண்ணையைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்துவது எப்படி?’’
முகேஷ், திருச்சி.
ஆரோவில் பகுதியில் உள்ள ஈகோ-புரோ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லூக்காஸ் பதில் சொல்கிறார்.

எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). ‘‘இதைத் தமிழில், ‘திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கிறார்கள். இத்திரவத்தில் நுண்ணுயிரிகள், உறக்க நிலையில் இருக்கும். இந்தத் திரவம், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. 50 மில்லி இ.எம். திரவத்தை, 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வந்தால்... நல்ல பலனைக் காண முடியும். இந்த இ.எம். திரவம், இயற்கை உர விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்.
ஒரு கிலோ வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்காத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒருமுறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில், இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவை மற்றும் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
பண்ணைக் குப்பை மற்றும் காய்கறிக் கழிவுகள் மீது இதைத் தெளித்தால் சீக்கிரமாக மட்கி உரமாக மாறும். துர்நாற்றம் வீசும் கழிவுகளின் மீதும் குளியலறைகளிலும் நீருடன் கலந்து இதைத் தெளிக்கலாம். துணிகளைத் துவைக்கவும் பயன்படுத்தலாம்.
இ.எம். திரவத்தை மையமாக வைத்து, 5 பொருட்களைக் கலந்து ‘இ.எம்-5’ என்கிற திரவமும் தயாரிக்கப்படுகிறது. இது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சண நோய்கள் மற்றும் சிலவகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையது.

ஒரு கிலோ வெல்லத்தை சமபங்கு நீரில் நன்கு கரைத்துக் கொண்டு, அதில், ஒரு லிட்டர் காடி (வினிகர்), ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40% ஆல்கஹால்), 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம். ஆகியவற்றைச் சேர்த்து, காற்றுப் புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைத்தால், இ.எம்-5 கரைசல் தயார்.
இதிலும் தினமும் ஒரு வினாடி மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றி வர வேண்டும். தயாரான திரவத்தைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம்.-5 திரவத்துடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம் (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும்வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம்.
இந்த இ.எம். தொழில்நுட்பத்தை முதன்முதலாக ஜப்பான் நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா... ஆகிய நாடுகள் இ.எம். பயன்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன.’’
தொடர்புக்கு, தொலைபேசி: 0413-2622469.
(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)
‘‘எங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் கம்பளிப் புழுத் தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’
பொ.விமலா, ராணிப்பேட்டை.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி, பாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
‘‘முருங்கையைக் குறித்து Trees For Life (ட்ரீஸ் ஃபார் லைப்) எனும் அமெரிக்க அமைப்பு பிரமாதமாக சொல்லியிருக்கிறது. முருங்கை இலையில் பாலாடையைவிட 2 பங்கு புரோட்டின், ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின்-சி’, வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின்-ஏ, பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளதாம். ‘முருங்கையைத் தின்னா முன்னூறு வராது’ என்பது கிராமத்து மொழி. முருங்கையைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்துவோருக்கு 300 வகை வியாதிகள் அண்டவே அண்டாது என்பதுதான் இதன்பொருள். இவ்வளவு சிறப்பான முருங்கை இலையைக் கடித்துக் குதறுவதுதான் கம்பளிப்புழு.

புதுத் துளிர் விடும்போதுதான் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும். இவை, இரவு நேரத்தில் மரங்களில் உள்ள இலைகளைத் தின்னும். காலையில் வெயில் பட்டவுடன் அடிமரத்தில் வந்து கூட்டமாக சேர்ந்துவிடும். இந்த நேரத்தில் அவற்றைச் சேகரித்து, தீயிட்டு அழித்துவிடலாம். மண்ணெண்ணெய் அல்லது துணிசோப்புக் கரைசலை அவற்றின் மீது ஊற்றினால் இறந்து விடும். நான்கு பங்கு சாம்பலுடன் ஒரு பங்கு மிளகாய்த் தூள் கலந்தும் தூவி விடலாம். பூண்டு, இஞ்சி, மிளகாய்க் கரைசல் தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.
தேவைப்படும் பொருட்கள்: ஒரு கிலோ பூண்டு, அரைகிலோ இஞ்சி, அரைகிலோ பச்சை மிளகாய். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து, 7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேளையில் பயிருக்குத் தெளிக்கலாம். பூண்டில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளை கட்டுப்படுத்தும். பூஞ்சணங்களை வளர விடாது – பயிருக்கு சத்துப்பொருளாகவும் பயன்படும். இஞ்சி, மிளகாய் தாவரப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.’’
‘‘சண்டைக் கோழி வளர்க்க விரும்புகிறோம். சண்டைக்கு மட்டும்தான் இவை பயன்படுமா? என்ன விலையில் இவை கிடைக்கும்?’’
எம்.ரகுபதி, நெல்லிக்குப்பம்.
சண்டைக்கோழி வளர்த்து வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த து.தெய்வமணி பதில் சொல்கிறார்.
‘‘இந்த மண்ணின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் சண்டைக்கோழி விளையாட்டும் ஒன்று. செங்கறுப்பு, மயில், கீரி, பேடு, வல்லூறு... என இருபது சண்டைக்கோழி ரகங்கள் உள்ளன. என்னுடைய அனுபவத்தின் மூலம் மயில் ரகக் கோழிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் பகுதியில் இருந்து, இந்த ரக கோழிகளை வாங்கி வந்தேன். பெட்டைக்கோழி அதிகபட்சம் மூன்று கிலோ வரை வரும். சேவல், 7 கிலோ வரை வளரும். சண்டைக்கோழிகளை 6 மாதங்கள் வளர்த்து மூன்று கிலோ எடை வந்தவுடன் ஒரு கோழி ஆயிரம் ரூபாய் என விற்று விடுகிறோம். ‘கோழி விற்பனைக்கு உள்ளது’ என்று தெரிந்தால், வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

சண்டைக்கோழிகளுக்கு கம்பு, சோளம், ஆட்டு ஈரல் போன்றவற்றை தீவனமாகக் கொடுக்க வேண்டும். மூச்சுப்பயிற்சிக்காக தினமும் தண்ணீரில் நீந்த விட வேண்டும். இப்படி சண்டைக்கோழிகளைப் பழக்குவது தனிக்கலை. நன்கு பழக்கப்பட்ட கோழி, திறமையைப் பொறுத்து 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை கூட விலை போகும்.
சண்டைக்கோழிகள், விளையாட்டுக்கு மட்டும் பயன்படும் என்று சிலர் நினைக்கலாம். தோட்டத்தில் 5 கோழிகள் இருந்தால் போதும். அவை, நிலத்தில் வாழை, தென்னை... என எந்தப் பயிராக இருந்தாலும், சிறிய களைகளைக் கூட விட்டு வைக்காமல் மேய்ந்து விடும். இவற்றின் கால்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால், கால்களாலேயே களைகளைக் கிளறி விடும். 5 ஆட்கள் வைத்து களையெடுக்கும் வேலையை, 5 சண்டைக்கோழிகள் செய்து விடும். களைகளை வேர் வரை பறித்து உண்டு விடுவதால், மீண்டும் முளைப்பதில்லை என்பது அனுபவ உண்மை.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.