மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்...  தவிப்பில் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்...  தவிப்பில் விவசாயிகள்!

காலையில் இருந்தே லேசான மழைத்தூறல் இருந்ததால், சீக்கிரமே வியாபாரத்தை முடித்துவிட்டு தோட்டத்துக்கு வந்துவிட்டார், ‘காய்கறி’ கண்ணம்மா. உழவுசெய்ய டிராக்டரை வாடகைக்கு எடுத்து வந்துகொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வழியில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியைப் பார்த்தவுடன் அவரையும் டிராக்டரில் ஏற்றிக்கொண்டார். தோட்டத்துக்கு வந்தவுடன், தூறல் சற்று வலுக்க... மூவரும் கொட்டகைக்கு இடம் மாற,  ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டைத் துவக்கினார், வாத்தியார்.

‘‘ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில வீசுன பயங்கர சூறாவளிக் காத்துல கிட்டத்தட்ட ஐயாயிரம் வாழைமரங்கள் அடியோட சாய்ஞ்சு போச்சாம். எல்லாமே, நேந்திரன், ஜி-9, கதலி...னு பத்து நாள்ல அறுவடை செய்ற தருணத்துல இருந்த வாழை மரங்களாம். அதே ஏரியாவுல இருக்கிற பனையம்பள்ளி பகுதியில கொஞ்சநாளைக்கு முன்னால யானைகள் வந்து ஆயிரக்கணக்கான வாழைகளைச் சேதப்படுத்திட்டு போனதுக. இப்போ, சூறாவளியால சேதமாகவும் விவசாயிகள் சோகத்துல இருக்காங்க.

இதேமாதிரிதான் கடலூர் மாவட்டம் வழிசோதனைப்பாளையம், எஸ்.புதூர், ராமாபுரம், அன்னவல்லி, கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம், குமளங்குளம், கீரப்பாளையம்...னு பத்து, பதினஞ்சு கிராமங்கள்ல சூறாவளிக் காத்தால, கிட்டத்தட்ட 350 ஏக்கர் நிலத்துல இருந்த வாழைமரங்கள் சாய்ஞ்சு போச்சாம். அதோட அம்பது ஏக்கர் நிலத்துல சோளம் உள்ளிட்ட மத்த  பயிர்களும் காலியாகிடுச்சாம். இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசாங்கத்துக்கிட்ட இழப்பீடு எதிர்பார்த்துகிட்டு இருக்கிறாங்க’’ என்றார், வாத்தியார்.

‘‘மானியத்துக்கு மனு கொடுத்தாலே வருஷக் கணக்குல காத்துக் கிடக்கணும். இதுல இழப்பீடை உடனே கொடுக்கப் போறாங்களாக்கும்’’ என்ற ஏரோட்டி,  தான் ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். ‘‘விவசாயத்தை ஊக்குவிக்கிறதுக்காகவும், விவசாயப் பரப்பை அதிகரிக்கிறதுக்காகவும்தான் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறைகள்ல மத்திய, மாநில அரசுகள் சார்பா பல்வேறு மானியத்திட்டங்களை அறிவிச்சிருக்காங்க.

முன்னாடியெல்லாம், மானியத்தை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு காசோலையா கொடுத்துடுவாங்க. அதுல நிறைய முறைகேடுகள் நடக்குதுனு புகார் வரவும், 2015-ம் வருஷம் அந்த நடைமுறையை மாத்தினாங்க. கருவூலத்துல இருந்து விவசாயிகளோட வங்கிக் கணக்குல நேரடியாவே மானியத்தை வரவு வைக்கிற மாதிரியான திட்டத்தைக் கொண்டு வந்தாங்க. ஆனா, அதுல என்ன குளறுபடியோ... தெரியலை. மானியம் சரிவர விவசாயிகளுக்குக் கிடைக்க மாட்டேங்குது. 

பசுமைக்குடில், பசுந்தாள் உரம், நாற்றுகள், டிராக்டர், பவர் டில்லர், கோகோ சாகுபடி, சொட்டுநீர்ப் பாசனம், நிழல்வலை...னு நிறைய திட்டங்களுக்கு மானியம் கேட்டு தமிழ்நாட்டுல ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்துகிட்டு இருக்குறாங்களாம். இவங்ககிட்ட எல்லாம் சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டாங்களாம். ஆனாலும் 2015-ம் வருஷம் ஜனவரி மாசம் மானியம் விண்ணப்பிச்சவங்களுக்குக்கூட இதுவரை மானியம் வந்து சேரலையாம்.

2015 ஜனவரி மாசத்துல இருந்து ஆகஸ்ட் மாசம் வரைக்கும் அப்பப்போ ஒண்ணு ரெண்டு விவசாயிகளுக்கு மட்டும் மானியம் கிடைச்சுகிட்டு இருந்திருக்கு. ஆகஸ்டு மாசத்துக்கு மேல மானியத்துக்கு அரசாங்கமே நிதி ஒதுக்கலையாம். அதனால, மானியம் கொடுக்கிறதை சுத்தமா நிப்பாட்டிட்டாங்களாம். இதனால கடன் வாங்கி விவசாயம் பண்ற விவசாயிகள் மானியம் கிடைக்காததால ரொம்ப கஷ்டப்படுறாங்களாம். மாவட்ட அளவுல இருக்கிற அதிகாரிகள், விவசாயிகளுக்கு ஒழுங்கா பதிலும் சொல்றதில்லைங்கிறதால மனஉளைச்சல்ல இருக்கிறாங்க, விவசாயிகள்” என்றார், ஏரோட்டி.

‘‘இப்படியே போனா விவசாயிங்க எப்படி விவசாயம் செய்றது?’’ என்று கவலைப்பட்ட காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார். ‘‘கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, காரமடை பகுதிகள்ல தென்னைக்கு அடுத்த பிரதான விவசாயம் நிலக்கடலைதான். ஆனா, ரெண்டு மூணு போகமா விதை நிலக்கடலை விலை ஏறிட்டதால அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்துச்சாம். அதில்லாம, சரியான மழை இல்லாததால விளைச்சலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம். அதனால சமீபகாலமா இந்தப்பகுதி விவசாயிகள் நிலக்கடலையை கைவிட்டுட்டு மக்காச்சோளத்துக்கு மாறிகிட்டு இருக்கிறாங்களாம். அஞ்சு வருஷத்துல கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பு அளவுக்கு நிலக்கடலை சாகுபடி குறைஞ்சுடுச்சாம். தேவை அதிகமிருந்தும் உற்பத்தி குறைவா இருக்கிறதால வெளிமாநிலங்கள்ல இருந்து நிலக்கடலை வாங்க வேண்டியிருக்குதாம்.

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல இருக்கிற மரபு மற்றும் இனப்பெருக்க மைய விஞ்ஞானிகள், நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துகிட்டு இருக்கிறாங்களாம். சீக்கிரமே வறட்சியிலும் அதிக விளைச்சல் கொடுக்கிற புதிய ரகத்தை வெளியிடப் போறாங்களாம். அநேகமா பல்கலைக்கழகம் சார்பா, ‘உழவர் தின விழா’ கொண்டாடுறப்போ வெளியிடுவாங்க போல தெரியுது’’ என்று வாத்தியார் சொல்ல,

‘‘ம்க்கும் கண்கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்னு சொல்றமாதிரி பிரச்னை பெருசான பிறகுதான் நடவடிக்கை எடுப்பாங்கபோல” என்று சொன்னார் காய்கறி.

‘‘பிரச்னை வந்த பிறகுதான தீர்வை யோசிக்க முடியும். பல்கலைக்கழகம் அஞ்சு வருஷமா ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சிருக்காங்க’’ என்ற வாத்தியார், அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

‘‘கிராமப் பகுதிகளில் உள்ள கால்நடைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கு அவசர கால சிகிச்சைக்காக,  ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்படும்னு போன வருஷம் செப்டம்பர் மாசம் சட்டசபையில் முதல்வர் அறிவிச்சிருந்தாங்க. இதுவரை அது நடைமுறைக்கு வரலை.

செல்போன்ல கூப்பிட்டா உடனே சம்பந்தப்பட்ட விவசாயியோட தோட்டத்துக்கே மருத்துவ வாகனத்துல போய் வாகனத்துல இருக்கிற மருத்துவக்குழு சிகிச்சை கொடுக்கிறதுதான் திட்டம். ஆனா, நிறைய மாவட்டங்கள்ல இந்தத் திட்டத்துக்காக வாகனங்கள் வாங்கின பிறகும் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இந்தச் சேவையை எதிர்பார்த்து நிறைய விவசாயிகள் காத்துகிட்டு இருக்கிறாங்க” என்றார்.

அந்த நேரத்தில், மழைத்தூறல் சற்று குறையவும்... ‘‘உழவு செய்ய முடியுமானு ஓட்டிப் பார்த்துட்டு வர்றேன்’’ என்ற ஏரோட்டி டிராக்டரில் தாவி ஏற... அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

அரசாங்கமே கொப்பரை கொள்முதல் செய்யும்... முதல்வர் அறிவிப்பு! 

ஜூன் 15-ம் தேதி முதல் தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும்’ என்று அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் ஜெயலலிதா.

‘‘கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷணகிரி, வேலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை இணையம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் கிராம தொடக்கவேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொப்பரை நேரடி கொள்முதல் செய்யப்படும்.

ஒரு கிலோ உடையாத பந்துக்கொப்பரை  62 ரூபாய் 40 காசு என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். ஒரு கிலோ அரவைக் கொப்பரை 59 ரூபாய் 50 காசு என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும்’’ என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார் முதல்வர்.