
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

ராமானுஜரின் வரலாறு’ வைணவ மதத்துக்குச் சொந்தமானது மட்டுமில்லீங்க... அது தமிழ்நாட்டோட வரலாறும்தான்! ராமானுஜர் பிறந்து ஆயிரம் வருஷம் ஆகப் போகுது. ராமானுஜர் சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்ரீபெரும்புதூர்லதான் பொறந்தாரு. நாடு முழுக்க வைணவ சம்பிரதாயத்தை பரப்ப பயணம் செய்தாரு. தமிழ்நாட்டுல இருக்கிற முக்கியமான கோயிலான, ரங்கத்துல இருக்கிற, ரங்கநாதர் கோயில் நிர்வாகம் இப்படித்தான் நடக்கணும்ங்கிற செயல் திட்டத்தையே இவர்தான் வகுத்துக் கொடுத்திருக்கிறாரு. அதுசம்பந்தமா, ‘ஸ்ரீராமானுஜ ஆச்சார்ய திவ்ய சரிதை’யில பெரிய பட்டியலே இருக்கு. அதுல கோயிலில் உள்ள கடவுள்களுக்குக் கண்டருளப் பண்ணுவதற்கான (நிவேதனத்துக்குரிய) நெல் ரகங்கள் பத்தின விவரங்களையும் தெளிவா சொல்லியிருக்காங்க.
‘இப்பால் களஞ்சியங்களினருகே திருவரங்கனுக்குத் தகுதியாகத் திருவரங்கன் என்கிற நெல்லும், ரங்கராஜர் போகத் தளிகைக்குத் தகுதியான ராஜாந்த நெல்லும், நம்பெருமாளுக்குத் தகுதியான சம்பா நெல்லும், என் திருமகள் சேர் மார்பனுக்குத் தகுதியான சீரார் செந்நெல்லும், சேஷசாயிக்குத் தகுதியான வரம்புற்ற கதிர்ச் செந்நெல்லான செஞ்சாலி நெல்லும், மற்றும் பகவத் போக்யமான பஹுவ்ரீஹி வர்க ஸமூஹங்கள் (பலவகைப் பட்ட நெல் வகைகளும்) அளந்து களஞ்சியங்களிலே சொரியும்படி நியமித்து...’னு எழுதியிருக்காங்க.
ராமானுஜரோட வாழ்க்கை வரலாற்றுல சொல்லியிருக்கிற செஞ்சாலிநெல், திருவரங்கன் நெல்லு...னு கோயிலுக்கு மட்டுமே இத்தனை ரகம்னா, மக்களோட பயன்பாட்டுல எத்தனை ரகம் இருந்திருக்கும்...! கால ஓட்டத்துல அந்த ரகம் எல்லாம் மறைஞ்சு போயிருக்கு. நெல் ரகம் மாறினாலும், ஸ்ரீரங்கம் கோயில்ல உள்ள மடப்பள்ளி உணவுத் தயாரிப்பு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த நடைமுறையிலேயே நடக்குது.
அரங்கன் ‘வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்’னு சொல்றாங்க. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை அரங்கன் அணிய மாட்டாராம். பித்தளை, வெண்கலம்... போன்ற பாத்திரங்களைத் தளிகைக்குக்கூட (சமையலுக்கு) உபயோகிக்க மாட்டார்களாம். அரங்கனுக்கு ‘ஸ்வர்ண பாத்திரம்’ மூலம்தான் சமையல் நடக்குமாம். ஸ்வர்ணம்னு சொன்னவுடனே, தங்கம்னு நினைச்சிடாதீங்க. மண்பானையைத்தான் ஸ்வர்ண பாத்திரம்னு சொல்றாங்க. அதாவது, தினமும் புது மண்பாத்திரத்துலத்தான் அரங்கனுக்கு சமையல் நடக்குது. இதனாலதான், மடப்பள்ளி உணவுங்க, ஐந்து நட்சத்திர ஹோட்டல் சுவையைக்காட்டிலும் தூக்கலாவே இருக்குது.

அரங்கனுக்கு காலையில் பொங்கல், மதியம் சாதம், பருப்பு, கறியமுது (பொரியல்) நெகிழ்கறியமுது (குழம்பு), சாற்றமுது (ரசம்) திருக்கண்ணமுது (பாயசம்) மாலை ஷீரான்னம் (ஷீரா என்றால் பால், அன்னம் என்றால் சோறு), கறுப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரசம். இரவு அரவணையோடு பால்னு அரங்கனுக்கான ஒரு நாள் உணவுப் பட்டியல் நீளமானது. வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்து புளியோதரையும் தோசையும் செய்வார்களாம். அந்த தோசைக்கு ‘புழாப்பு தோசை’னு பேரு.
ஏகாதசி, அமாவாசை, ரேவதி நட்சத்திரம் வர்ற நாட்களில் தோசையும் அரிசி வடையும் உண்டாம். அரங்கன் கோயில் பிரசாதத்தில சர்க்கரை, முந்திரிப்பருப்பு, மிளகாய் வற்றல்... சேர்க்கறதில்லை. நெய் தவிர வேறு எண்ணெய் வகை எதற்குமே சேர்ப்பதில்லை. இன்றளவும் அரங்கனுக்கு தளிகை (சமையல்) செய்யப்படும் உணவுகள் அத்தனையும் விறகு அடுப்பில்தான் நடக்குது. மிளகாய் சேர்க்காம, எப்படி சமையல் நடக்கும்னுதானே கேட்கிறீங்க. மிளகைத்தான் காரத்துக்குப் பயன்படுத்துறாங்க.
ராமனுஜர் காலத்துல, வெள்ளைச் சர்க்கரை, மிளகாய் வற்றல், முந்திரிப்பருப்பு... வகையறாக்கள் கிடையாது. ஆமாங்க. வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள வந்த பிறகுதான் இதுகளும் வந்துச்சு. இந்த வெள்ளைச் சர்க்கரை, மிளகாய்... வஸ்துக்கள் வந்து சுமாரா சில வருஷம்தான் ஆகியிருக்கும்.
ஸ்ரீரங்கத்துல மட்டுமில்லீங்க, காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் (இட்லிக்கு பெயர் பெற்றது), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்லயும்கூட ஏறத்தாழ இதே நடைமுறைதான். ‘மூட நெய்பெய்து முழங்கை வழிவார…’னு அக்கார அடிசல் பத்தி அழகா பாடி வெச்சிருக்கார் ஆண்டாள். (அக்காரம் என்றால், கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரைனு பொருள். அடிசில்னா சோறு.) அதாவது, அக்கார அடிசில் கையிலிருந்து வாய்க்குப் போவதற்குள் வேகமாக முழங்கைவரை நெய் வழியும். இதேமாதிரி பார்த்தசாரதி கோயில் சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டவங்களுக்கு, அதோட சுவை வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கும்.
தமிழ்நாட்டில் இருந்த பாரம்பர்ய நெல் ரகங்கள் பத்தின விவரங்களும், பாரம்பர்ய சமையல் பத்தின தகவல்களும் நம்ம இலக்கியத்துலயும், நம்ம ஊர் கோயில்களையும் நிறையவே கொட்டிக் கிடக்குது!