மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

புறா பாண்டி, ரமேஷ் கந்தசாமி

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

ஆப்பிள் மரம் வளர்க்க விரும்புகிறோம். இதில் ‘வாட்டர் ஆப்பிள்’ என்ற ரகம் சமவெளியில் விளையும் என்கிறார்கள். இது உண்மையா..?

ச.பிரபாகரன், காலகம்,தஞ்சாவூர் மாவட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின்

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். சரஸ்வதி பதில் சொல்கிறார்.

‘‘கடல்மட்டத்தில் இருந்து, 2,000 மீட்டர் உயரம் உள்ள இடத்தில்தான் ஆப்பிள் மரம் வளரும். இந்த மரத்துக்கு ஆண்டொன்றுக்கு 75 மணி நேரம் உறைபனி இருக்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘சில்லிங் ஹவர்ஸ்’ என்று சொல்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரேதசங்களில், விளையும் வண்ணம் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக ‘கே.கே.எல்-1’ என்ற ஆப்பிள் ரகத்தை வெளியிட்டுள்ளோம். மே-ஜூன் மாதங்களில் இந்த ரகம் விளைச்சலுக்கு வரும்.

காஷ்மீர் ஆப்பிள் ரகம் மற்றும் தமிழ்நாட்டில் விளையும் ரகம் இரண்டிலும், நிறம், மணம், சுவை... போன்றவை வேறுபடுகின்றன. அடிப்படையில் ஆப்பிள் மரம், பனிப்பொழியும் பகுதிகளில் மட்டுமே வளரும்தன்மை கொண்டது. கொடைக்கானல் மலையின் மேல் பகுதியிலும், ஊட்டியிலும் மட்டுமே ஆப்பிள் விளையும் அளவுக்கு பனிப்பொழிவு உண்டு. ஏலகிரி, ஏற்காடு... போன்ற உயரம் குறைந்த பகுதிகளில், ஆப்பிள் மரங்கள் வளர்ந்தாலும், காய்ப்புத்திறனும், சுவையும் வித்தியாசப்படும்.

ஆனால், ‘வாட்டர் ஆப்பிள்’ என்பது தண்ணீர்ச் சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். தமிழ்நாட்டில் 1,500 அடிகளுக்கு மேல் உள்ள ஏலகிரி, ஏற்காடு... போன்ற மலைப்பகுதிகளில் காய்ப்புக்கு வருகின்றன. பெயர் வாட்டர் ஆப்பிள் என்றாலும், தாவரவியல்ரீதியாக ஆப்பிளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இந்தப் பழத்தில், 93 சதவிகித நீர்ச்சத்துக்கள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன. மித வெப்பநிலையில் வளரும் வாட்டர் ஆப்பிள் மரங்கள், தரைப்பகுதியில் வளருவதில்லை. அப்படியே வளர்ந்தாலும், ஒப்பீட்டளவில், மலைப்பகுதியைக் காட்டிலும் வளர்ச்சி குறைவாகவே இருக்கும்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 04542-240931

‘‘சாண எரிவாயு, காய்கறிக்கழிவு எரிவாயு ஆகியவற்றுக்கு மானியம் எவ்வளவு? இந்த வாயுவை

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

சிலிண்டரில் அடைத்து பயன்படுத்த முடியுமா..?’’

அ.சுவாமிநாதன், நாகப்பட்டினம்.

கன்னியாகுமரியிலிருக்கும் விவேகானந்தா கேந்திரத்தின் ‘இயற்கை அபிவிருத்தித் திட்டத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

“நகர்ப்புறப் பகுதிகளில்கூட பயன்படுத்தும் வகையில் ‘சக்தி சொரூபி’ என்ற சிறிய சாண எரிவாயுக் கலன் கிடைக்கிறது. இதில் சாணம் மட்டுமில்லாமல் காய்கறிக் கழிவுகள், அரிசி களைந்த நீர் போன்றவற்றை ஊற்றியும், எரிவாயு தயாரிக்க முடியும். வழக்கமாக சாண எரிவாயுக்கலன் அமைக்க, பெரிய இடம் தேவைப்படும். குழி எடுத்து அதிக செலவு செய்தால்தான் எரிவாயு கிடைக்கும். இந்தப் புதிய முறையிலான எரிவாயுக் கலனுக்கு அதிக இடம் எல்லாம் தேவையில்லை. சமையல் அறையின் உள்ளேயே கூட வைத்துக்கொள்ளமுடியும். இதற்கு
19 ஆயிரம் ரூபாய் செலவாகும். மானியமாக `5,500 ரூபாய் அரசு கொடுக்கிறது. 

சாண எரிவாயுக் கலன் அமைப்பவர்களுக்கு, இரண்டு மாடுகள் கட்டாயம் தேவை. சராசரியாக 25 கிலோ சாணம், 25 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதும்.  இதன் மூலம் ஒரு கனமீட்டர் அளவில் சாண எரிவாயுவை உற்பத்தி செய்யமுடியும். இதற்கான அமைப்புக்கு (கலனுக்கு)
25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதற்கும் 5 ஆயிரம் ரூபாய் வரை மானியமும் கிடைக்கிறது. சாணத்துடன் உள்ள தீவனக் கழிவுகளை அப்புறப்படுத்தினால்தான் அதிக எரிவாயு உற்பத்தியாகும்.

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?


எரிவாயுத் தொட்டிக்கு அருகில் துணி துவைக்கும் நீர், குளியலறைக் கழிவுநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். சோப்பில் உள்ள ரசாயனங்கள், எரிவாயு எடுத்தபின் கிடைக்கும் கழிவில் உள்ள நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும். சாண எரிவாயு அமைப்பது, அதை முறையாகப் பயன்படுத்துவது தொடர்பாக எங்கள் நிலையத்தில் தொடர்ந்து பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். சாணத்திலிருந்தும், காய்கறிக்கழிவுகள் மூலமும் கிடைக்கும் மீத்தேன் வாயுவைத்தான், எரிவாயுவாகப் பயன்படுத்துகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மீத்தேன் வாயுவை, சிலிண்டரில் அடைத்துப் பிடித்து, ஆராய்ச்சி அடிப்படையில் பரிசோதித்துப் பார்த்தோம். இதற்கு குறைந்தபட்சம் 50 லட்ச ரூபாய் முதலீடு தேவை. காரணம், மீத்தேன் வாயுவுடன், கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாக கலந்துவிட்டால், சிலிண்டர் வெடித்துச் சிதறிவிடும்.  அண்மையில் கூட, தமிழ்நாட்டில் ஒரு விவசாயி, சிலிண்டரில் மீத்தேன் வாயுவை அடைத்தபோது, விபத்துக்குள்ளானார். மீத்தேன் வாயுவை சிலிண்டரில் அடைப்பதற்கு அரசு முதலீடும், மானியமும் வழங்கினால், இது வணிக ரீதியாக வெற்றிபெறும்.

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

வடஇந்தியாவில் சில அமைப்புகள் மீத்தேன் வாயுவை சிலிண்டரில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன.”

தொடர்புக்கு, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தி நிலையம் (நார்டெப்), விவேகானந்தபுரம், கன்னியாகுமரி, தொலைபேசி: 04652-246296.

‘‘எங்கள் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் பயிர்களை அவை சேதம் செய்கின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’

கே.திருவாசகம், நாமக்கல்.

சென்னை கிண்டியிலுள்ள வன உயிரின பூங்காவின் வன அலுவலர் எடிசன் பதில் சொல்கிறார்.


‘‘சிலசமயம் காட்டுப்பகுதிகளில் உள்ள வனவிலங்கான குரங்குகள் ஊர்ப்பகுதிகளுக்கு வந்துவிடுவதுண்டு. அப்போது, அவற்றுக்குத் தேவையான உணவுக்காக வயல்வெளிகளில் உள்ள காய்கறிகள், பழங்களைப் பறித்து உண்டு சேதம் ஏற்படுத்தும். இப்படி குரங்குகள் மூலம் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். வன அலுவலர்கள், அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து, ஆய்வு செய்வார்கள்.

நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..?

வனத்துறையில் ‘தொல்லைத் தரும் விலங்குகளை அப்புறப்படுத்துதல்’ என்ற திட்டம் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கோயம்புத்தூர், நீலகிரி... மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குரங்குகளைப் பிடிக்க பயிற்சி பெற்றவர், கூண்டுகளுடன் வருவர். சில நாட்கள் தங்கி இருந்து, குரங்குகளைப் பிடித்துக்கொண்டுபோய், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விட்டுவிடுவர்.

ஒருவேளை உங்கள் மாவட்டத்தில், இந்தத் திட்டம் செயல்படவில்லை என்றால், ‘குரங்கு களைப் பிடிப்பதற்கு உண்டான செலவுகளை பகுதிமக்களே ஏற்றுக் கொள்கிறோம்...’ என்று வனச்சரகர் அல்லது மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதன் பேரில் வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

குரங்குகள், பயிர்களைச் சேதம் செய்கின்றன என்று அடித்து, துன்புறுத்துவதும், குரங்குகளின் உயிருக்கு உலை வைக்கும் செயல்களைச் செய்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆகையால், முறைப்படி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.