
ஓவியம்: ஹரன், படம்: தி.விஜய்

நெல் மூட்டைகளை விற்பனை செய்திருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியிடம் அதன் கணக்குவழக்குகளைச் சொல்லிக்கொண்டிருக்க... ‘அதை பசுமை விகடன் வேளாண் வழிகாட்டி’யில் இருக்கும் நாட்குறிப்பு பகுதியில் எழுதிக்கொண்டிருந்தார், வாத்தியார். இருவரும் கணக்குப் பார்த்து முடிக்கும்போது சரியாக வந்துசேர்ந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. தென்மேற்குப் பருவமழையின் உபயத்தால் சாரல்மழை பெய்ய ஆரம்பிக்க, அங்கேயே அன்றைய மாநாடு துவங்கியது.
முதலில் ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்த வாத்தியார், ‘‘ஜூன் 12-ம் தேதி, குறுவைப் பாசனத்துக்காக மேட்டுர் அணையைத் திறப்பாங்கனு விவசாயிகள் எதிர்பார்த்தாங்க. ஆனா, தண்ணீர்ப் பற்றாக்குறையால அணையைத் திறக்கலை. அதனால, டெல்டா மாவட்டங்கள்ல ஆற்றுப் பாசனம் மூலமா நெல் விவசாயத்துக்கு சாத்தியம் இல்லாமப் போயிடுச்சு. அதனால நிலத்தடி நீராதாரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்ற மாதிரி குறுவைத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் அறிவிச்சாங்க. அதன்படி நெல் விவசாயிகளுக்கு இப்போ மானியம் கொடுத்துட்டு இருக்கிறாங்க. இந்தத் திட்டம் ஒழுங்கா செயல்படுதானு கண்காணிக்க ஒரு குழு அமைச்சிருக்காங்க. அந்தக் குழு டெல்டா மாவட்டங்கள்ல இப்போ ஆய்வு செய்யப்போறாங்களாம். அந்தக் குழுவுக்கு வேளாண் துறை இயக்குநர் ராஜேந்திரன்தான் தலைவராம். அதனால, அதிகாரிகளெல்லாம் பம்பரமா சுத்தி வேலை செய்துகிட்டு இருக்கிறாங்களாம்’’ என்றார்.
‘‘என்னத்த ஆய்வுபண்ணி என்ன பண்ண? அங்க கரன்ட் ஒழுங்கா வந்தாத்தான விவசாயம் செய்ய முடியும்?’’ என்று இழுத்த ஏரோட்டி, ‘‘குறுவைத்தொகுப்புத் திட்டத்துல சாகுபடி செய்ற விவசாயிகளுக்காக பன்னெண்டு மணி நேரம் ‘மூணு ஃபேஸ்’ கரன்ட் கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா, பல இடங்கள்ல ரெண்டு மணி நேரம் கூட கரன்ட் கிடைக்கிறதில்லையாம். பல இடங்கள்ல குறைந்த அழுத்த கரன்ட்தான் வருதாம். அதனால மோட்டார் ஸ்டார்ட் ஆகவே மாட்டேங்குதாம். இதைப்பத்தி, மின் வாரியத்துக்கும் வேளாண் துறைக்கும் ஏகப்பட்ட புகார்கள் வந்துக்கிட்டே இருக்குதாம். ஆனா, அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்கிறதில்லையாம். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துலயும் விவசாயிகள் புகார் கொடுத்திருக்காங்க. ஆனாலும், இன்னமும் பிரச்னை முடியலையாம். அதனால கரன்ட்டுக்காக போராட்டம் நடத்த டெல்டா விவசாயிகள் தயாராகிட்டு இருக்காங்களாம்’’ என்றார்.
‘‘விவசாயிகளுக்குப் போராட்டமே வாழ்க்கையாகிடுச்சு’’ என்று கவலைப்பட்ட காய்கறி, கூடையிலிருந்து வீரிய ரக நாவல் பழங்களை எடுத்து ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு, அவரும் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார்.
‘‘தமிழ்நாட்டுல நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல அதிகளவுல கேரட் சாகுபடி நடக்குது. அதில்லாம கர்நாடகா மாநிலத்துல இருந்தும், தமிழ்நாட்டுக்கு கேரட் வருது. ஆனா, ஏப்ரல் மாசத்துல கர்நாடகாவுல கேரட் விளைச்சல் இல்லாம போனதால தமிழ்நாட்டுல இருந்து கேரட் அதிக அளவுல கர்நாடகாவுக்குப் போய்க்கிட்டு இருந்துச்சு. அதனால, இங்க கேரட் விலை அதிகரிச்சிருந்துச்சு. ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மேல விற்பனையாச்சு. அதனால, கேரட் விவசாயிகள் சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கலை. இப்போ, கர்நாடகாவுல கேரட் அதிகமா விளைய ஆரம்பிச்சுடுச்சாம். தமிழ்நாட்டுலயும் அதிகமா விளையுறதால திடீர்னு விலை இறங்கிடுச்சு. இப்போ, கிலோ 20 ரூபாய்னுதான் விற்பனையாகுது. அடுத்த மாசம் இன்னமும் வரத்து அதிகமாகும்னு சொல்றாங்க. அதனால இன்னமும் விலை குறைய வாய்ப்பிருக்குனு மார்க்கெட்ல பேசிக்கிட்டாங்க’’ என்றார்.

‘‘இப்படித்தான் தக்காளி, முருங்கை விலையும் உச்சத்துக்குப் போச்சு. அப்படியே சர்ருனு இறங்க ஆரம்பிச்சுடுச்சு’’ என்றார், ஏரோட்டி.
‘‘இன்னொரு முக்கியமான சேதிய்யா’’ என்று ஆரம்பித்த வாத்தியார், ‘‘வேளாண்மைத் துறைக்குக் கீழ வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மண் வளத்துறைனு பல சார்புத் துறைகள் இருக்கு. ஆனா, இந்த சார்புத் துறைகள்ல வேலை செய்றதுக்கு பலரும் விரும்புறதில்லையாம். சொந்த ஊர்லயே வேலை பார்க்கணும்னு நினைக்கிறவங்க அல்லது மனைவி வேலை செய்ற ஊர்ல இருக்கணும்னு நினைக்கிறவங்கதான் இந்த சார்பு துறைகளைத் தேர்ந்தெடுத்துக்குவாங்களாம். வேளாண்மை அலுவலரா இருக்கிறவங்க சுழற்சி முறையில் எல்லா துறைகள்லயும் வேலை செய்யணுங்கிறதுதான் விதி. ஆனா, பெரும்பாலானவங்க வேளாண்மைத்துறையில் மட்டுமேதான் வேலை செய்வாங்களாம். மாற்றல் ஆனாலும், மேலிடத்துல பணத்தைக் கொடுத்து சரிபண்ணி மாற்றுப்பணினு பழைய இடத்துக்கே வந்துடுவாங்களாம்.
வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறையில் நேரடியா வேலை செய்தாத்தான் பல வழிகள்ல கல்லா கட்ட முடியுமாம். அதுக்கு ஆப்பு வெக்கிற மாதிரி இப்போ, வேளாண்மைத்துறை இயக்குநர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவு போட்டிருக்கார். மூணு வருஷத்துக்கு மேல ஒரே இடத்துல வேலை செய்ற வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை சார்புத் துறைக்கு இடம் மாற்றம் செய்யணும்னு உத்தரவு போட்டிருக்கார். இப்போ, அதுக்கான கணக்கெடுப்பு நடந்துகிட்டிருக்காம். சீக்கிரம் வேளாண்மைத்துறையில் ஏகப்பட்ட பேருக்கு இடமாற்றம் கிடைக்கப் போகுது’’ என்றார்.
‘‘அவர்களுக்கு வேணும்னா இடமாற்றம் கிடைக்கலாம்... ஆனா, விவசாயிகளுக்கு ஒரு மாற்றமும் வரப்போறதில்லை’’ என்றார், காய்கறி.
‘‘சரியா சொன்ன, கண்ணம்மா... இந்தா பாரு, கொப்பரை கொள்முதல் ஆரம்பிச்சும் இன்னமும் தென்னை விவசாயிகளுக்குப் பிரச்னை தீர்ந்தபாடில்லை’’ என்ற ஏரோட்டி, தொடர்ந்தார்.
‘‘தேங்காய்க்கு சரியான விலை கிடைக்காததால நிறைய விவசாயிகள் கொப்பரையா மாத்தி விற்பனை செய்வாங்க. ஆனா, பல ஊர்கள்ல அரசு கொள்முதல் மையம் இல்லைங்கிறதால கொப்பரையை விற்பனை செய்ய முடியாம அவதிப்பட்டாங்க. விவசாயிகள், தொடர்ந்து கோரிக்கை வெச்சதுல எல்லா மாவட்டங்கள்லயும் கூட்டுறவுத்துறை மூலமா கொப்பரைக் கொள்முதல் செய்ய சொல்லி, சமீபத்துல முதலமைச்சர் உத்தரவு போட்டாங்க. அதன்படி பல மாவட்டங்கள்ல கொப்பரைக் கொள்முதல் நடக்குது. ஒரு கிலோ அரவைக் கொப்பரைக்கு 59 ரூபாய் 50 காசுனும் ஒரு கிலோ பந்துக் கொப்பரைக்கு62 ரூபாய் 40 காசுனும் கொள்முதல் விலை நிர்ணயிச்சிருக்காங்க. இந்த விலை ரொம்ப குறைவா இருக்குதுனு ஒரு பக்கம் விவசாயிகள் புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க.
இந்தக் கொடுமை இப்படினா, கொப்பரையை கூட்டுறவு மையங்கள்ல விற்பனை செய்றதுக்குள்ள விவசாயிகளுக்கு தாவு தீந்துடுதாம். கொப்பரை விற்பனை செய்ய வர்ற விவசாயி, தென்னை சாகுபடி செய்றார்னு வருவாய் துறை வழங்கும் பட்டா; சிட்டா; வேளாண்மை உதவி அலுவலர், உதவி இயக்குநர் கொடுக்கிற சாகுபடி பயிர் விவரம், எவ்வளவு உற்பத்தியாகுதுங்கிற சான்று எல்லாத்தையும் கொண்டு வரணுமாம். அதில்லாம கொப்பரையோட ஈரப்பதத்துக்கும் சான்று வாங்கிட்டு வரணுமாம். அப்பதான் கூட்டுறவு மையங்கள்ல கொள்முதல் செய்வாங்களாம். இத்தனை சான்றிதழையும் வாங்குறதுக்குள்ள விவசாயிகளுக்குப் போதும் போதும்னு ஆயிடுதாம். குறிப்பா குத்தகை விவசாயிகளுக்குதான் ஏகப்பட்ட பிரச்னைகளாம்’’ என்றார்.
அந்த நேரத்தில் மழை சற்றுக்குறைய, ‘‘இன்னும் நாலஞ்சு வீடு பாக்கியிருக்கு. காய் கொடுக்கணும், நான் கிளம்பறேன்’’ என்று சொல்லிக்கொண்டே காய்கறி கூடையைத் தூக்க, அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.