மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!

மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!

யிர் செய்யவேண்டிய அவசியமில்லாமல் தானாகவே விளையும் உணவுப்பயிர்கள் (Uncultivated food) பத்தி, மக்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாங்க, தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ஜகீராபாத் தாலூகா பகுதி பெண் விவசாயிங்க. சிறுதானிய சாகுபடியில, வெற்றிக்கொடி கட்டிய, இந்தப் பெண்விவசாயிங்க பயிர் செய்யாமல் தானாகவே வளர்ந்து பலனளிக்கும் உணவுப்பயிர்கள் பத்தி பெரிய ஆராய்ச்சியே செய்திருக்காங்க.

வறட்சியான அந்த நிலத்துல, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷம்னு எதையும் தெளிக்காம, சிறுதானிய விளைச்சல் கொழிச்சுக்கிட்டிருக்கு.

ஒருமுறை அங்கப் போயிருந்தப்ப ராயப்பள்ளி கிராமத்துல சோள வயலுக்குக் களையெடுத்துக்கிட்டிருந்த பெண் விவசாயிங்க, மடி நிறைய கீரைகளைப் பறிச்சி வெச்சிருந்தாங்க. ‘எதுக்கு இதைப் பறிச்சி வெக்கிறீங்கனு கேட்டேன்,

‘‘இந்தக் கீரைக்கு பொன்னாகான்டி ஆக்கூரா (Ponnaganti Aakoora- பொன்னாங்கண்ணிக் கீரை) னு பேரு. இது இந்தத் தோட்டத்தில் இயற்கையாவே வளர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு பருவத்துக்கும், விதவிதமான கீரைகள் கிடைக்கும். கடந்த முறை களையெடுத்த சமயத்துல டோகாலி ஆக்கூரா (Doggali Aakoora - குப்பைக் கீரை) கிடைத்தது. இப்படி சராசரியா ஏழு வகையான கீரைகள், நாங்கள் பயிர் செய்யாமலே வளர்ந்து பலன் கொடுக்கிறது. இதை வெளி ஆட்கள் பார்த்தால், சோளப்பயிரில் உள்ள களைகள் மாதிரி தெரியும். ஆனால், எங்களுக்குச் சத்தான உணவு...’’னு அந்தப் பெண் விவசாயி சுந்தரத் தெலுங்கில் பேசிவிட்டு,

‘‘இன்று இரவு எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வாருங்கள்...’’என அழைப்பும் விடுத்தார்.

சோளதோசை, கம்பு முறுக்கு, தினை அதிரசம், காலையில் பறித்த பொன்னாங்கண்ணி கீரைக் கூட்டு...னு சிறுதானிய விருந்து கொடுத்து அசத்துனாங்க. இந்தப் பெண்களுக்கு வழிகாட்டி வரும் டி.டி.எஸ் (Deccan development society) அமைப்போட, களப்பணியாளர்,

‘‘தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டும், பாசன வசதி உள்ள நிலத்தில் 36 வகைகளும், மானாவாரி நிலத்தில் 41 வகைகளும் பயிர் செய்யப்படாத உணவுப் பயிர்கள் வளர்கின்றன. இவை சிறுதானியங்களுடன் வளர்வதுதான் முக்கியமானது. ரசாயன உரங்கள் பயன்படுத்தாவிட்டால், எல்லா பயிர்களிலும்கூட சத்து நிறைந்த கீரைகள் பயிர் செய்யப்படாமல் வளரும்...’’னு சொல்லிவிட்டு, தினை அதிரசத்தை சுவைக்க ஆரம்பித்தார்.

பயிர்ல வளர்ந்து நிக்கிற களைனு நினைச்சுக்கிட்டிருக்கிற ஒவ்வொரு செடியும், இந்த மக்களுக்கு உணவாகுது. இதனாலதான், இந்தப் பெண் விவசாயிகளை ஐக்கிய நாடுகள் சபையில கூப்பிட்டுப் பேச வைக்கிறாங்க.

நம்ம ஊர் தோட்டத்துலயும்கூட, ஏராளமான கீரைகள் வளர்ந்து கிடக்குது. இன்னும் சில கிராமங்கள்ல களை எடுக்குற பெண்கள், தும்பைக் கீரை, பண்ணைக் கீரை வகைகளை, சேகரிச்சு சமைக்கிறாங்க. சத்தான இந்தக் கீரைகளை எவ்வளவு பணம் கொடுத்தாலும், சந்தையில வாங்க முடியாது.

பயிர் செய்யாத பயிர்ங்கிற வகையில எல்லாருக்கும் அறிமுகமான செடி ஒண்ணு உண்டு. சுண்டைக்காய்ச் செடி.... வீட்டுக் கொல்லைப்புறத்துலயும், காட்டு, மேட்டுலயும் இயற்கையாவே வளர்ந்து நிக்குது. இந்தச் செடிக்கு யாரும் உரமோ, தண்ணியோ கூட கொடுக்கிறதில்ல. ஆனாலும், கொத்து, கொத்தாக காய்ச்சுக் குலுங்கும்.

‘‘சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாகப் பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுகசப்புச் சுவை உடையது. இதை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமிகள், மூலக் கிருமிகள் போன்றவை அகலும்.

வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும். பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் அதிகமாகச் சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்திகொண்டது’’ னு சித்த மருத்துவம் சுண்டைக்காயின் மருத்துவ குணத்தைப் பெருமையா பேசுது.

மலையில விளையுற, காட்டுச்சுண்டைக்கும், சமவெளியில விளையுற நாட்டுச்சுண்டைக்கும் மருத்துவ ரீதியா கொஞ்சம் வித்தியாசம் உண்டு. இதனால, காட்டுச் சுண்டையைத்தான் பெரும்பாலும் மருந்துக்குப் பயன்படுத்துவாங்க. ஒரு முறை சத்தியமங்கலம் மலைப்பகுதியில தங்கி இருந்தப்போ, மலைவாழ் மக்கள் காட்டுச் சுண்டையைப் பறிச்சுக்கிட்டிருந்தாங்க. என்ன விலை?னு கேட்டேன். இங்கேய வாங்குனா, கிலோ 5 ரூபாய், சத்தியமங்கலத்துல வாங்குனா 20 ரூபாய்னு சொன்னாங்க. எதனால, விலை வித்தியாசம்னு கேட்டேன்.

‘‘அய்யா, சுண்டைக்காய் கால் பணம்தான். மலைப்பகுதியில இருந்து கஷ்டப்பட்டு பறிச்சு தூக்கி வர்ற சுமைக்கூலிதான் முக்கால் பணம்...’’னு சொன்னார். அப்போதான், நாம அடிக்கடி பயன்படுதுற பழமொழியோட அர்த்தம் பளீர்னு விளங்குச்சு.