
நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..!
‘‘வறட்சியான எங்கள் பகுதியில், சுமார் 1,000 அடி வரை கூட ஆழ்துளைக் கிணறு எடுத்தோம். ஆனால்,

நீர் கிடைக்கவில்லை. இப்போது, நீர்வளத்தைக் கணிக்கும் நவீனக் கருவி மூலம் 2,000 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நீர்மட்டத்தைக்கூட அறியமுடியும் என்கிறார்கள், இந்த கருவியைப் பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறு எடுக்க முடியுமா..?’’
மலர்கொடி, திருவண்ணாமலை.
திண்டுக்கல் வேளாண்மைப் பொறியாளர், பிரிட்டோ ராஜ் பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாட்டின் நிலவியல் அடிப்படையில், ‘நீர்த்தாங்கிகள்’ என்று அழைக்கப்படும் நீர்மட்டம் சுமார் 150-250 மீட்டர் ஆழம் வரையே உள்ளது. இதை அதிகபட்சமாக 800 அடி எனக் கொள்ளலாம். எனவே, 800 அடி ஆழத்துக்கும் அதிகமாக ஆழ்துளைக் கிணறு தோண்டினால், நீர் வரக்கூடும் ஆனால் மறுநாள் அந்த ஆழ்துளைக் கிணற்றில் நீர் இருக்காது. இதற்கு காரணம், 800 அடிக்கு கீழ் உள்ள பாறைகள், கடினதன்மை

இல்லாத, பிளவு பாறைகள். இதனால், 500 அடியில் தண்ணீர் கிடைத்தும், மேலும் தண்ணீர் கிடைக்கும் என்ற ஆசையில், 800 அடிக்கு கீழே செல்லும்போது, பிளவுப்பாறைகள் வழியாக, அந்த நீர் கீழே சென்றுவிடும். ஏறத்தாழ ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி வைப்பது போலத்தான். எனவே, அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டி பண விரயத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம்.
உங்கள் நிலத்தின் அருகில் ஒன்றை கிலோ மீட்டர் முதல் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் நீர் இருந்தால் மட்டுமே, செறிவூட்டப்பட்ட ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் நிலத்தடி நீர் கிடைக்கும். எனவே, தங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தால், விவசாயத்துக்குத் தேவையான நீர் நிச்சயம் கிடைக்கும். மேலும் விவசாய நிலத்தில் 25 சென்ட் நிலத்தில் பண்ணைக்குட்டை வெட்டி, மழைநீரைச் சேமிக்கலாம். இதற்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும்.
பண்ணைக்குட்டையில் உள்ள நீர், நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். பண்ணைக்குட்டை அமைக்க, எங்கள் துறை மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் செய்து வருகிறோம். ஆகையால், அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு வெட்டி நஷ்டப்படுவதை விட, குறைந்த செலவில் பண்ணைக்குட்டை வெட்டி பலன் பெறுங்கள்.’’
தொடர்புக்கு, செல்போன்: 99444-50552.

‘‘பாரம்பர்ய நெல் சாகுபடி செய்து வருகிறோம். விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பத்தைச் சொல்லுங்கள்..?’’
ஆர்.சபாபதி, சிதம்பரம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர்.தேவநாதன் பதில்

சொல்கிறார்.
‘‘விதைக்காக நெல்லைச் சேமிக்கும்போது, அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். ஈரப்பதம் கூடினாலும், குறைந்தாலும், விதையின் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால், விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்போது, விஞ்ஞான வளர்ச்சியால், மின்னணுக் கருவி மூலம் ஈரப்பதத்தை எளிதாக அறிந்து விடுகிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர், எந்தக் கருவியும் இல்லாமல் ஈரப்பதத்தை அறிந்து செயல்பட்டதைப் பாராட்டத்தான் வேண்டும். இன்றளவும், அந்த நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.
விதைநெல்லை சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. நமக்கு வசதியான நேரத்தில் விதைநெல்லைக் காய வைக்கக்கூடாது. காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் களத்தில் கொட்டி, மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை, கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது, சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளிவைத்து திருகிப் பார்த்தால், எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்துக் கடித்தால், ‘கடுக்’கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்து, நெல் 12 % ஈரப்பதத்துடன் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். இந்தளவு ஈரப்பதம் இருந்தால்... விதையின் முளைப்புத்திறன் 80% அளவுக்கு இருக்கும்.

இப்படி உலர்த்தி சேமிக்கப்பட்ட விதையை, அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் விதைத்து விட வேண்டும். காலம் கடந்தால், முளைப்புத்திறன் குறையும். சிலசமயம், தொடர்மழையின் காரணமாக, விதைநெல்லின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும். எனவே, அந்த சமயத்தில், நன்றாக சூரியஒளி அடிக்க தொடங்கியவுடன், ஏற்கெனவே சொன்னதுபோல காலை அல்லது மாலை நேரத்தில் உலர்த்த வேண்டும்.
சேமிக்கும்போது, வேப்பிலை, வசம்புத்தூள் (ஒரு கிலோ விதைக்கு 5 கிராம்) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், பூச்சிகள் தாக்காது. விதை மூட்டைகளை நேரடியாகத் தரையில் வைத்தால், பூமியின் ஈரப்பதம் விதைகளில் பரவ வாய்ப்பு உண்டு. பலகை, கற்கள் ஆகியவற்றின் மீதுதான் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.’’
‘‘எங்கள் நிலத்தில் மருதாணிச் செடியை உயிர்வேலியாக வளர்க்க விரும்புகிறேன். இது வறட்சியைத் தாங்கி வளருமா... எந்த ரகம் ஏற்றது?’’
கே.சின்னதுரை, விருதுநகர்.
மதுரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜகோபால் பதில் சொல்கிறார்.
‘‘மருதாணியில் இரண்டு ரகங்கள் உள்ளன. அதில் முள் உள்ள ரகத்தை வேலிக்காக வளர்க்கலாம். முள் இல்லாத ரகம் தனிப்பயிராக சாகுபடி செய்ய ஏற்றது. மருதாணி நாற்றுகள் வியாபார ரீதியாக விற்பனை செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே, சாகுபடி செய்துள்ளவர்களிடம் இருந்து குச்சிகளைப் பெற்று நீங்களே நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நன்கு வளர்ந்த மருதாணிச் செடியில் பென்சில் அளவு உள்ள குச்சிகளை 9 அங்குல நீளத்துக்கு வெட்டி வைத்துக் கொண்டு... தொழுவுரம், மண் நிரப்பிய பாலிதீன் நாற்றுப் பைகளில் நட்டு, நிழலில் வைத்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். மூன்று மாதங்கள் வளர்ந்த பிறகு, வேலிகளில் நடவு செய்யலாம்.
பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நடவு செய்ய ஏற்றவை. அப்போது, தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால், கன்றுகள் வேர் பிடித்து வளரும். வேலிப்பயிர் என்றாலும், நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என... இருபது ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.
அழகு சாதனப் பொருட்கள், இயற்கைச் சாயம், மருந்துப் பொருட்கள்... எனப் பலவற்றுக்கும் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுகிறது. வறட்சியான நிலத்தில் உயிர்வேலியாக அமைக்க மருதாணி, மிகவும் ஏற்றப் பயிர்.’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.