மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!

மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!

திடீர் திடீரென்று தூறல் மழை பெய்வதால், அன்று சீக்கிரமே வியாபாரத்தை முடித்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்துவிட்டார், ‘காய்கறி’ கண்ணம்மா. அவரோடு மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. மாட்டு வண்டியில் கூட்டுறவு வங்கிக்குச் சென்று திரும்பிய ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், மாடுகளை அவிழ்த்து, மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வந்து இவர்களோடு சேர்ந்துகொள்ள... ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

 ‘‘ஆட்சிக்கு வந்தால், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வேன்னு முதலமைச்சர் சொல்லியிருந்தாங்க இல்லையா... ஒருவழியா அதுக்கான உத்தரவைப் போட்டு, 2016 மார்ச், 31-ம் தேதி வரைக்கும் சிறு, குறு விவசாயிகள் வாங்கியிருக்குற 5 ஆயிரத்து 780 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செஞ்சிட்டாங்க. அதுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருக்காங்க.

அதாவது, மத்தியக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவுக் கடன் சங்கம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இதெல்லாத்துலயும் வாங்கின பயிர்க்கடன்கள் மட்டும்தான் தள்ளுபடியாகுமாம். இதுல குறுகிய காலக் கடன், தங்க நகைகளை அடமானம் வெச்சு வாங்கின குறுகிய காலக் கடன், நடுத்தர காலக் கடனாக மாற்றப்பட்ட குறுகிய காலக் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட கால கடன் எல்லாமே அசல், வட்டியோட தள்ளுபடியாகுமாம். ஆனா, விவசாயி சிறு அல்லது குறு விவசாயியா இருந்தா மட்டும்தான் இந்த சலுகையைப் பெற முடியும். ரெண்டரை ஏக்கர் வரை நிலம் வெச்சிருக்கிறவங்க குறுவிவசாயி. அஞ்சு ஏக்கர் வரை நிலம் வெச்சிருக்கிறவங்க சிறுவிவசாயி. பட்டா, சிட்டா கொடுத்து நகையை அடகு வெச்சு பயிர்க்கடன் வாங்கியிருந்தா, அந்தக் கடனும் தள்ளுபடியாகுமாம். இதுல முக்கியமான இன்னொரு விஷயம் கடன் வாங்கியிருக்கிற விவசாயி, ஏதாவது வழக்கு விசாரணையில் இருந்தாலோ... குற்றவழக்கில் சிக்கியிருந்தாலோ அவருக்கு தள்ளுபடி கிடைக்காதாம்’’ என்றார், வாத்தியார்.

‘‘அய்யோ, அப்போ கடன் வாங்கின விவசாயிகளெல்லாம் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி. ஆபீஸ்னு போய் தடையில்லா சான்று வாங்கிட்டு வந்தாத்தான் தள்ளுபடி சலுகையைப் பெற முடியுமா? அதெல்லாம் லேசுல நடக்கிற காரியமா?’’ என்று கேட்டார், ஏரோட்டி.

‘‘என்ன காரணத்துக்காகவோ அதையும் விதிமுறையில் சேர்த்திருக்காங்க. சொன்ன வாத்தியார், தொடர்ந்தார்.

‘‘போன முறை நாம சந்திச்சப்போ, வேளாண்மைத் துறையில் அதிகாரிகள் மாறுதல் குறித்துப் பேசியிருந்தோம்ல. இது தொடர்பா எனக்குத் தெரிஞ்ச ஒரு அதிகாரி பேசினார். முன்னாடிதான், வழக்கமான பணியில் இருந்து மாற்றுப் பணிக்குப் போக வேளாண் அலுவலர்கள் தயங்கிட்டு இருந்தாங்களாம். இப்போ, மாற்றுப் பணியைத்தான் வேளாண் அலுவலர்கள் அதிகமா விரும்புறாங்களாம். என்ன காரணம்கிறதையும் அவரே சொன்னார். முன்னாடி விவசாயிகளை சுலபமா ஏமாத்தி ரொக்க மானியம், மானிய விதை எல்லாத்தையும் கொடுக்க முடிஞ்சுதாம். ஆனா, இப்போ விவசாயிகளுக்கு எல்லா விவரங்களும் தெரியுறதால சுலபமா ஏமாத்த முடியலையாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா கேட்டு மாட்டி விட்டுடுறாங்களாம். அந்தளவுக்கு விவசாயிகள் மத்தியில விழிப்பு உணர்வு பெருகிக்கிட்டு இருக்குதாம்.

அதில்லாம மாநில அளவுல இருக்கிற உயரதிகாரிகளும் இப்போ கிடுக்கிப் பிடி போடுறாங்களாம். மானிய நிதிக் கணக்குல ஏதாவது குளறுபடி இருந்தா, எத்தனை வருஷம் ஆனாலும், சம்பந்தப்பட்ட அதிகாரி நிம்மதியா ஓய்வு பெற முடியாதாம். இப்போ, தென் மாவட்டத்துல மாவட்ட அளவுல இரண்டாம் கட்டத்துல இருந்த ஒரு அதிகாரியை ஓய்வுபெற்ற அன்னிக்கு பணியிடை நீக்கம் செஞ்சிருக்காங்களாம். அவர் பதவியில் இருந்தப்போ நடந்திருக்கிற கணக்குமுறைகேட்டை சரி பண்ணிக் கொடுத்தாத்தான் அவருக்கு ஓய்வுகால பலன் தொகை, பென்ஷன் எல்லாம் கிடைக்குமாம். அதனால, அதிகாரிகள் ஆடிப்போய்க் கிடக்கிறாங்களாம்.

எப்படியோ வேளாண்மைதுறை ஆணையர் ராஜேந்திரன் நினைச்சதைச் சாதிச்சிட்டார்னு விவசாயத்துறையில பேச்சு ஓடிட்டு இருக்கு. அதாவது, இவ்வளவு நாள் வழக்கமான விவசாய அலுவலர் பணியைச் செய்யாமல், விதைச் சான்றளிப்பு, விற்பனைப் பிரிவு, ஆய்வகம்னு மாறுதல் வாங்கிக்கிட்டு நிம்மதியா பொழைப்பு ஓட்டிக்கிட்டிருந்த அதிகாரிகளை எல்லாம் இப்போ ‘ரெகுலர் டூட்டி’க்கு மாத்திட்டாங்களாம். அதனால, விவசாய அலுவலர்கள் மத்தியில் இன்னும் புகைச்சல் ஓடிகிட்டே இருக்குதாம்’’ என்று சொல்லிக்கொண்டே  வாத்தியார் எழுந்து நிற்க, அன்றைய மாநாடு அத்துடன் முடிவுக்கு வந்தது.

‘சந்தைக்கேற்ற சாகுபடி’, பஞ்சகவ்யா ஆகிய தொடர்கள் இந்த இதழில் இடம் பெறவில்லை.