
புறா பாண்டி
‘‘தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் தொலைநிலைக் கல்வி குறித்த

விவரங்களைச் சொல்லுங்கள்..?’’
ஆர்.சுதா, வேலூர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் அசோகன் பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம், 11 சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள், 15 செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், 22 அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இந்தப் பயிற்சித் திட்டங்களுக்கான சேர்க்கை, ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. பயிற்சித் திட்டங்களில் சேர, வயது வரம்பு கிடையாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் சேரலாம். இவை அனைத்தும் கட்டணப் பயிற்சிகள்.
பால் பண்ணை சம்பந்தமாக கால்நடைப் பண்ணை மேலாளர், பால் பண்ணை உதவியாளர், பால் பதன நிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக் கட்டுப்பாடு உதவியாளர் என நான்கு செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு பயிற்சிக்கும் அதற்கான கல்வித் தகுதியும் கால அளவும் உள்ளது.

பால் பண்ணை உதவியாளர் பயிற்சிக்கு தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. பால் பதன நிலைய உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர் பயிற்சிக்கு 10-ம் வகுப்புத் தேர்ச்சியும், கால்நடைப் பண்ணை மேலாளர் பயிற்சி பெற 12-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பால் பண்ணை உதவியாளர், பால் மற்றும் பால் பொருட்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர் பயிற்சிகளுக்கு ஒரு மாத காலமும், பால் பதன நிலைய உதவியாளர் பயிற்சி ஒன்றரை மாத காலமும், கால்நடைப் பண்ணை மேலாளர் பயிற்சி 3 மாத காலமும் நடத்தப்பட்டு வருகிறது.
இவைத் தவிர, பால் பண்ணைத் தொழில் சார்ந்த சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகளாக கறவை மாட்டுப்

பண்ணையம், பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும் உண்டு. இதில் கறவை மாட்டுப் பண்ணையப் பயிற்சி பெற தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சியில் சேர, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சுயவேலைவாய்ப்புப் பயிற்சி ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது.
பயிற்சிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு புதிதாகத் தொழில் தொடங்கவோ... அல்லது ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுப்படுத்தவோ வங்கிக் கடன் பெற முடியும்.’’
தொடர்புக்கு, தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதிய எண்: 485, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35. தொலைபேசி: 044-24320411 /2140.
‘‘ஜவ்வாது எப்படி தயாரிக்கப்படுகிறது என விளக்கமாகச் சொல்லுங்கள்..?’’

எம்.பாஸ்கர், ஓசூர்.
ஓய்வுபெற்ற தமிழக வனத்துறை உயர்அலுவலர் சி.பத்தரசாமி பதில் சொல்கிறார்.
‘‘புனுகுப்பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை ‘புனுகு’ என்பார்கள். இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது.
வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது ‘சீவெட் காபி’ (Civet coffee) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும். இதனால் இந்தோனேஷியா... போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.’’

‘‘50 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்துள்ளேன். சராசரியாக 3 கிலோ மகசூல் கிடைத்து

வருகிறது. மகசூலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?’’
தேவராஜன், செங்கல்பட்டு.
திண்டுக்கல் மாவட்டம், மெய்ஞானபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.கலைச்செல்வன் பதில் சொல்கிறார்.
‘‘என்னுடைய அனுபவத்தில் சம்பங்கி சாகுபடியை இயற்கை முறையில் செய்தால், விளைச்சல் குறையாது.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சம்பங்கி சாகுபடி செய்யும்போது, பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்களும் சாகுபடி செய்தார்கள். இப்போது, எனது தோட்டத்தில் மட்டுமே, சம்பங்கி உள்ளது. இதற்கு காரணம், இயற்கை உரங்களை முழுயாகக் கொடுப்பதால், நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது. மற்றவர்கள், ரசாயன முறையில் சாகுபடி செய்தார்கள். ஆரம்பத்தில் விளைச்சல் கிடைத்தது, பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் வேறு சாகுபடிக்கு மாறிவிட்டார்கள்.
சம்பங்கி, கிழங்கு மூலம் வளரும் பயிர். இந்தக் கிழங்கு, மண்ணில் உள்ள சத்துக்களை இழுக்க, உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் உதவியாக இருக்கும்.

300 கிலோ மண்புழு உரம் அல்லது தொழுவுரத்துடன் 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, 5 கிலோ வேம் ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். இத்துடன் 1 கிலோ நாட்டுச் சர்க்கரையை தண்ணீரில் கரைத்து, இந்த உரக் கலவையுடன் கலந்து இரண்டு நாட்கள் வைக்கவும். அடுத்த இரண்டு நாட்களில், உயிர் உரங்களில் உள்ள நுண்ணுரியிர்கள் பல்கி பெருகிவிடும். இந்த உரக்கலவையை சம்பங்கிச் செடிகளுக்கு வைத்து நீர்ப் பாசனம் செய்யவும்். ஆண்டுக்கு இரண்டு முறை, இப்படி உயிர் உரங்களைக் கொடுத்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 97877-87432.
See also : தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.