மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!

மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!

நெல் நடவுக்குத் தயார் செய்திருந்த வயலில் சணப்பு விதைகளைத் தெளித்துக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பின் மீது நின்று அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வருவதற்கும, ஏரோட்டி வேலையை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. மூவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மரத்தடியில் அமர்ந்தனர். காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நாவல் பழங்களை ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

‘‘மத்திய அரசு சார்பா ‘கிஸான் சுவைதா’னு ஒரு ஆப்ஸை ஆரம்பிச்சிருக்காங்க. ஆன்ட்ராய்டு செல்போன் வெச்சிருக்கிறவங்க இந்த ஆப்ஸை ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மூலமா டவுன்லோடு பண்ணி செல்போன்ல பதிஞ்சு வைச்சுக்கலாம். அதை வெச்சு... விவசாயத்துக்குத் தேவையான அடிப்படைத் தொழில்நுட்பத் தகவல்கள், பருவநிலை, மழை அளவு, விளைபொருட்களோட விலை விவரம், ஒவ்வொரு சந்தையிலும் கிடைக்கிற விலை எல்லாத்தையும் போன்லயே தெரிஞ்சுக்கமுடியும். ஆனா, இதுக்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் அவசியம். ஆனா, இப்போதைக்கு ஆங்கில மொழியிலதான் தகவல்கள் கிடைக்கும். சீக்கிரம் தமிழ்லயும் தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செஞ்சுகிட்டுருக்காங்களாம்’’ என்றார்.

‘‘ஆக மொத்தம் எல்லாத்துக்கும் இனி செல்போனைத்தான் நம்பியாகணுங்குற நிலைக்கு வந்தாச்சு. இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ’’ என்று கிண்டலாகச் சொன்னார், ஏரோட்டி.

‘‘இதெல்லாத்தையும் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியாதான் பாக்கணும்’’ என்று சொன்ன வாத்தியார் அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘வாணியம்பாடிக்குப் பக்கத்துல புல்லூர்ல பாலாறுக்கு குறுக்க ஆந்திர அரசாங்கம் தடுப்பணை கட்டி விவகாரமாச்சுல்ல. அதோட, பக்கத்துல இருக்குற கனகநாச்சியம்மன் கோவிலையும் ஆக்கிரமிச்சுருச்சு. இப்போ அடுத்ததா, தமிழக எல்லைக்குள்ள இருக்குற ராமசமுத்திரம் ஏரியையும் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுருச்சு, ஆந்திர அரசு. அந்த ஏரியில் இருக்குற மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்றதுக்காக ஆந்திர மாநிலம், புல்லூர் பஞ்சாயத்துல ஏலம் நடந்திருக்குதாம். அதோட ஏரியைச் சுத்தி கட்டடங்கள் கட்டி சுற்றுலா மையமாக்குறதுக்கும் ஆந்திர அரசு ஏற்பாடு பண்ணிட்டிருக்காம். இந்த ராமசமுத்திரம் ஏரிதான் சுத்துப்பட்டுல தமிழ்நாட்டு எல்லைக்குள்ள இருக்கிற 20 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம். அதோட கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு இந்த தண்ணி மூலமாத்தான் பாசனம் நடக்குதாம். அதனால இந்தப்பகுதி கிராம மக்கள், சென்னைக்கு நடந்தே போய் முதல்வரைப் பார்த்து மனு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்காங்க’’

‘‘விட்டா இன்னும் கொஞ்சநாள்ல தமிழ்நாட்டையும் அவங்களே வளைச்சுப் போட்டுடுவாங்கபோல இருக்கு. எப்பவும் நம்ம மாநிலத்துல தும்பை விட்டுட்டு வாலைத்தான பிடிப்பாங்க. இதுல என்ன செய்றாங்கனு பார்ப்போம்’’ என்றார், காய்கறி.

அதைத் தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி அடுத்த செய்தியை ஆரம்பித்தார். ‘‘காரைக்குடிக்கு பக்கத்தில் இருக்கிற செட்டிநாட்டில் 1,906 ஏக்கர் பரப்பில் அரசு கால்நடைப் பண்ணை இருக்கு. அங்க, கால்நடைத் தீவனம், தீவன விதை உற்பத்தி நல்லமுறையில நடந்துகிட்டு இருக்கு. ஆடு, மாடுகளை முன்பதிவு அடிப்படையில் விற்பனையும் செஞ்சுகிட்டுருக்காங்க. வருஷத்துக்கு 160 டன் அளவுக்கு இங்க விதை உற்பத்தி செய்றாங்க. இந்த வருஷம் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மூலமா பல்வேறு பணிகளுக்காக 4 கோடியே 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியிருக்காங்க. அதுல ஒரு பகுதியா, 400 ஏக்கர் பரப்புல தீவனச் சோள விதை உற்பத்தி செய்யப் போறாங்க. அப்படி கிடைக்கிற விதையை 13 ஆயிரம் ஏக்கர் பரப்புல விதைக்க முடியுமாம்’’ என்றார்.

‘‘இதுவரைக்கும் இந்தப் பண்ணைதான் நல்ல முறையில நடந்துகிட்டுருக்கு. விவசாயிகளுக்கு சிறப்பா சேவை பண்ணிட்டு இருக்கிறாங்க. பசுமை விகடன்ல இந்த பண்ணையைப் பத்தி விரிவா எழுதலாம்’’ என்ற வாத்தியார், தொடர்ந்தார்.

‘‘நீலகிரி மலைப்பகுதியில், காட்டெருமை, மான் மாதிரியான விலங்குகளோட நடமாட்டம் அதிகமா இருக்குமாம். குறிப்பா, உருளைக்கிழங்கு, கேரட், முட்டை கோஸ் தோட்டங்கள்ல விலங்குகள் புகுந்து அதிக சேதத்தை ஏற்படுத்துமாம். அப்படி விலங்குகள் வராம தடுக்கிறதுக்காக அந்தப்பகுதிகள்ல ‘குப்ரஸ்’ங்கிற மரத்தை உயிர்வேலியா வளர்த்துட்டு இருக்குறாங்களாம். இந்த மரக்கன்றை ரெண்டு அடி இடைவெளியில் வேலியோரத்துல வரிசையா நடவு செஞ்சுட்டா விலங்குகள் தோட்டத்துக்குள் நுழைய முடியாதாம். இந்த மரத்தோட இலைகளை அலங்காரப் பொருளாவும் பயன்படுத்துறாங்களாம். அதனால விலங்குகளைத் தடுக்குறதோட வேலிப்பயிர் மூலமா ஒரு வருமானமும் பார்த்துட முடியுமாம். இந்த மரக்கன்று இப்போ, தும்மனட்டி, தொட்டபெட்டா, நஞ்சநாடு பகுதிகள்ல இருக்கிற அரசு தோட்டக்கலைப் பண்ணைகள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் எல்லாம் கிடைக்குதாம். ஒன்றரை அடி உயரம் வளர்ந்த நாற்று 50 ரூபாய்னு விற்பனை செய்றாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

தன்பங்குக்கு ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், காய்கறி. ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைக்குப் பக்கத்துல அத்திமரத்தூர்னு ஒரு கிராமம் இருக்குது. இந்த கிராமத்து மக்களுக்கு ஆடு, மாடு, கோழினு கால்நடை வளர்ப்புதான் பிரதான தொழில். போன ஒரு மாசமா இந்தப்பகுதியில ஆடுகள், கோழிகள் அடுத்து நோய் வந்து இறந்துட்டே இருக்குதாம். கிட்டத்தட்ட 200 ஆடு, கோழிகள் இது வரை இறந்துடுச்சாம். இந்த ஊர்ல இருந்து 18 கிலோ மீட்டர் தள்ளிதான் கால்நடை மருத்துவமனை இருக்குதாம். அதனால ஊர் மக்கள் போய் கால்நடை டாக்டர்களை கெஞ்சி அழைச்சுகிட்டு வந்து வைத்தியம் பார்க்கவேண்டிய சூழ்நிலையாம். ஆனா, அப்படி வர்ற டாக்டர்களும் இன்ன நோய்னு சரியா கண்டுபிடிச்சு வைத்தியம் செய்யாம ஏனோதானோனு செய்றாங்களாம். மருந்துகூட இந்த மக்கள் கைக்காசைப் போட்டுதான் வாங்க வேண்டியிருக்காம். அப்படி இருந்தும் இறப்பு கட்டுக்குள்ள வரலையாம். அதனால விவசாயிகள் ரொம்ப நொந்து போய்க் கிடக்குறாங்குளாம். வாடிக்கையா மார்கெட்டுக்கு வர்ற ஒரு விவசாயி என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார்’’ என்றார்.

அந்த நேரத்தில் டிராக்டர் ஓட்டுநர் வாடகை கேட்டு வர... கணக்குப் பார்க்க எழுந்து சென்றார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

பால் உற்பத்தியாளர்களுக்கு 500 கோடி இழப்பு!

சேலத்தில் கடந்த 19-ம் தேதி... தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அச்சந்திப்பின்போது, ‘‘தமிழகத்தில், ஆவின் நிறுவனம், 30 லட்சம் லிட்டருக்கும் குறைவான பாலையே கொள்முதல் செய்கிறது. தமிழக கிராம கூட்டுறவு சங்கங்களில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் 14 மாதங்களாக, உறுப்பினர்கள் கொண்டு வரும் மொத்த பாலையும் கொள்முதல் செய்யாமலே திருப்பி அனுப்பி வருகிறார்கள். இந்த 17 ஒன்றியங்களில் மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு மொத்தம் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலம், வேலூர், விழுப்புரம், திருச்சி ஒன்றியங்களில் உள்ள உற்பத்தியாளர்கள்தான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தவுள்ளோம். வரும் 28-ம் தேதி சேலம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிடில், அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எங்களின் போராட்டத்துக்கு, தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கேட்டுள்ளோம்’’ என்றனர்.