
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

ராமநாதபுரத்திலிருந்து, ராமேஸ்வரம் போறதுக்காக பேருந்துல ஏறி உக்காந்தேன். பஞ்சகச்ச வேட்டி, துண்டு போட்டுக்கிட்டு, நெத்தி நிறைய திருநீறு பூசிக்கிட்டு ஒரு பெரியவர் வந்து பக்கத்துல உக்காந்தார்.
‘‘என்ன, ராமேஸ்வரம் போறீங்களா?’’னு அவர் கேட்க,
‘‘தங்கச்சிமடம் வரையிலும்...’’னு சொன்னேன்.
‘‘அடடே, தங்கச்சிமடம்தான் போறீங்களா? குண்டுமல்லிகைப்பூ நாத்துக்கு பேர் விளங்கின ஊர். ‘தங்கச்சிமடம் குண்டுமல்லி நாத்து’னு சொன்னா, இந்தியாவுல பல மாநிலங்கள்லயும் தெரியும். ஆனா, அந்த ஊர்ல இருக்கிறவங்கள்ல பலருக்கும் அந்தப் பெருமை அவ்வளவா தெரியறதில்ல. எங்க அப்பா இருந்தவரையிலும் தங்கச்சிமடம் உருவான கதையைச் சொல்லிக்கிட்டே இருப்பார்’’னு சொன்ன பெரியவர், அந்தக் கதையை கடகடனு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு.
“அந்தக் காலத்துல ராமநாதபுரம் பகுதியை ஆண்டவர் விஜயரகுநாத சேதுபதி. இவரோட ரெண்டு பொண்ணுங்களையும் (சீனி நாச்சியார், லெட்சுமி நாச்சியார்) தண்டபாணிங்கிறவர் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை (மண்டபம்) வழியா படகுலதான் போகமுடியும். படகுத்துறை நிர்வாகத்தை தன் மருமகன் தண்டபாணிகிட்ட ஒப்படைச்சிருந்தாரு சேதுபதி. படகுப் போக்குவரத்து இலவசம்னாலும், அதுக்கு பணம் வசூல் பண்ணியிருக்காரு தண்டபாணி. ‘பாம்பன்ல இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் தரமான சாலை அமைக்கறதுக்காகத்தான் இப்படி வசூல் பண்றோம்’னு சொல்லியிருக்காரு தண்டபாணி. ஆனா, இந்த விஷயம் மன்னருக்குத் தெரியாமலே நடந்திருக்கு.
இந்த நிலையில, காசியிலிருந்து நடைபயணமா வந்த பைராகி (நிர்வாண சாமியார்), ராமேஸ்வரம் போறதுக்காக படகுல ஏறியிருக்கார். ‘பணம் கொடுத்தாதான் படகில் ஏத்துவோம்’னு படகுக்காரர் கறாரா சொல்லிட்டாரு. இதனால கோபம் அடைஞ்ச பைராகி, திரும்பி ராமநாதபுரம் அரண்மனைக்குப் போய், ‘முற்றும் துறந்த என்னிடம் பணம் கொடுத்தால்தான், படகில் ஏற்றுவேன் என்று சொல்வது அறம்தானா?’னு சேதுபதிகிட்ட கேட்டிருக்காரு. இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் பணம் விவகாரம் சேதுபதிக்கு தெரிஞ்சிருக்கு.
பொதுப்பணிக்காக வசூல் செய்திருந்தாலும், மன்னருக்கு சொல்லாமலும், முறையான அறிவிப்பு கொடுக்காமலும் வசூல் செய்தது சிவ துரோகம்னு சொல்லி, தண்டபாணியோட தலையைத் துண்டிக்கணும்னு சேதுபதி உத்தரவு போட, அதன்படியே செய்துட்டாங்க. அக்கா, தங்கச்சிங்களான சீனி நாச்சியார், லட்சுமி நாச்சியார் ரெண்டுபேரும் கணவனோடயே உடன்கட்டை ஏறி, உயிரை மாய்ச்சிக்கிட்டாங்க.
ரெண்டு மகள்களோட நினைவா பாம்பன்-ராமேஸ்வரம் வழியில தங்கச்சிமடம், அக்காள்மடம்னு ரெண்டு மடங்களை, பக்தர்கள் தங்கிச் செல்றதுக்காக சேதுபதி கட்டினாரு. இப்ப சாலை விரிவாக்கத்துல அக்காள்மடத்தை இடிச்சுட்டாங்க. தங்கச்சிமடம் மட்டும் அந்த சம்பவங்களுக்கு சாட்சியா நின்னுகிட்டிருக்கு. அப்படிப்பட்ட தங்கச்சிமடத்துல பயிராகிற குண்டுமல்லி நாத்துதான் இந்தியா முழுக்க போகுது’’ உணர்ச்சிகரமா சொல்லி முடிச்சார் அந்தப் பெரியவர்.
கொஞ்சநேரத்துலயே ‘‘தங்கச்சிமடம் இறங்குங்க’’னு பேருந்து நடத்துநர் குரல் கொடுக்க, பெரியவருக்கு நன்றி சொல்லி, டப்புனு இறங்கிட்டேன்.
இப்ப மதுரை குண்டுமல்லிப் பூவுக்கு அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ‘புவிசார் குறியீடு’ அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கு. ஆனா, இது தங்கச்சிமடம் நாத்துல உருவான குண்டுமல்லிதான். ராமநாதபுரமும் ஒரு காலத்துல மதுரை ஜில்லாவுல இருந்ததால, இதுக்கு மதுரை குண்டுமல்லினு பேர் வந்துடுச்சு. ‘புவிசார் குறியீடு’ தமிழகத்தில் உள்ள மலர் வகையில முதல்முறையா மதுரை மல்லிக்குத்தான் கொடுத்திருக்காங்க. அதாவது, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கைனு ஐந்து மாவட்டங்கள்ல விளையறதுதான், மதுரை மல்லின்னு புவிசார் குறியீடு கொடுத்திருக்காங்க. ஆனா, இந்த நாத்து விளையுற ராமநாதபுரம் மாவட்டத்தை (தங்கச்சிமடம்) இந்த பட்டியல்ல சேர்க்காம விட்டுட்டாங்க.
கடற்கரையோர மண்ணுல விளையுற, இந்த மல்லி நாத்துங்களுக்கு, சுமார் பத்து வருஷம்கூட மகசூல் கொடுக்கிற தன்மை இருக்கு. தமிழ்நாடு மட்டுமில்லாம ஆந்திரா, கர்நாடகானு இந்தியாவுல இருக்கிற பல மாநில விவசாயிங்களும் இந்த நாத்தை வாங்கிட்டுப் போய் சாகுபடி செய்யுறாங்க. ஆனா, மதுரையை சுத்தியுள்ள, இந்த மாவட்டங்கள்ல விளையுற மல்லியில மட்டும்தான் அதிக வாசனை வருது.
நாத்துக்களை உற்பத்தி செய்து கொடுக்கிற தாய் வீடான தங்கச்சி மடத்தோட பேரு, புவிசார் குறியீடு பட்டியல்ல இல்லனாலும், மக்கள் மனசுல எப்பவும் மணம் வீசிக்கிட்டுத்தான் இருக்கும்!