மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

புறா பாண்டி, படங்கள்: தி.விஜய், ம.பி.சித்தார்த்

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

‘‘எங்கள் நெல் வயலில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள்?’’

எம்.ஆறுமுகம், மயிலாடுதுறை.

திருச்சி மாவட்டம், பூவாளூரைச் சேர்ந்த வேளாண் துறையின் ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலர் வெ.ரெங்கசாமி, பதில் சொல்கிறார்.

‘‘இருபது எலிகள் ஒன்று சேர்ந்தால்,  ஒரு ஏக்கர் நெல் வயலில் 50% அளவுக்குக்கூட நஷ்டத்தை உண்டுபண்ணிவிடும். பொதுவாக நெல் வயலின் வரப்புகளில்தான் எலிகள் வளை தோண்டி தங்கியிருக்கும். ஆகையால், வரப்புகளின் அகலத்தைக் குறைத்தால், எலிகள் வயலில் தங்க முடியாத நிலை உருவாகும். எனவேதான், வரப்புகளின் உயரம் ஓர் அடியாகவும், அகலம் ஒரு  சாணாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் எலிகளைப் பிடிக்க வசதி அளிக்கும் வகையில்,

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

வயல்களில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மட்டைக் குச்சிகளை ‘T ’ வடிவில் ஊன்றி வைக்க வேண்டும். இந்தக் குச்சிகள் ஆறு அடி உயரம் உள்ளவையாக இருக்க வேண்டும். மேலும், கரும்புத் தோட்டங்களுக்கு அருகில், நெல் சாகுபடி செய்தால், எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், கரும்புத் தோட்டத்தில் வளைகள் தோண்டி எலிகள் தங்கிக் கொள்ளும், உணவுக்காக மட்டும் நெல் வயலுக்குள் வந்து சேதம் செய்யும். ஆகையால், கரும்பு வயலுக்கு அருகில் நெல் சாகுபடி செய்தால், எலிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை வேகமாகச் செய்யவேண்டும்.

எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் புதினா நடவு செய்தால், அந்த வாசனைக்கு வயலில் எலிகள் இறங்காது. நொச்சி மற்றும் எருக்கன் இலைச் செடிகளை வயலைச் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை இருக்காது. மற்றபடி ரசாயன விஷத்தை வைத்து, எலிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், எலிகளை விட, பயிருக்கு நன்மை செய்யும் பல உயிர்கள்தான் அதிகம் பலியாகும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 95786-69455

‘‘மரப்பயிர்கள் சாகுபடி செய்துள்ளோம். இதற்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என மின்வாரிய அதிகாரிகள் சொல்கிறார்கள். இது சரியா..?’’

ஆர்.தேவி, நார்த்தாமலை.

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

‘‘மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவ்வப்போது சந்திக்கும் முக்கியமான பிரச்னை இது. இலவச மின்சாரம் அறிவித்தது முதல் நெல், கரும்பு, வாழை மாதிரியான வேளாண்மைப் பயிர்களுக்கு மட்டும்தான் இலவச மின்சாரம். மரப்பயிர்களுக்குக் கிடையாது என்று தமிழக மின்வாரியம் தொடர்ந்து கெடுபிடி காட்டிவந்தது. எங்கள் சங்கத்தின் மூலம் 2013-ம் ஆண்டு அப்போதைய வனத்துறையின் செயலர் இறையன்பு அவர்களின், கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றோம். உடனே துறை ரீதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குக் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக ‘வேளாண்மை மற்றும் இதரப் பயிர்களுக்கும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்று சட்டத்தில் இருக்கிறது. இதரப்பயிர்கள் என்கிற அடிப்படையில், 10 ஹெச்.பிக்கு குறைவாக இருக்கும் மின் இணைப்புகள் மூலம் மர சாகுபடி செய்யும் விவசாயிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி பாசனம் செய்துகொள்ளலாம்’ என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். இதன் அடிப்படையில், புதிய மின் இணைப்பு வாங்கும்போது, மரம் வளர்ப்புக்கு என்று குறிப்பிட்டுக் கேட்டே இலவச மின்சார இணைப்பை வாங்க முடியும். 

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

விவசாயத்துக்காக இலவச மின்இணைப்பை ஏற்கெனவே வைத்திருக்கும் விவசாயிகள், மரப்பயிர்களுக்கு மாறும்போது சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலகத்தை அணுகி, எளிதில் மாற்றிக் கொள்ளமுடியும். ஆகையால், மரப்பயிர்களுக்கு தாராளமாக இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.’’ மரப்பயிர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என மின்வாரிய அலுவலர்கள் கூறினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் கடிதத்தை காட்டவும். அல்லது அந்தப் பகுதி கண்காணிப்பு பொறியாளரிடம் புகார் கொடுக்கவும்

தொடர்புக்கு, செல்போன்: 94433-84746.

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

மரப்பயிர்கள் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்து குறித்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் கடிதத்தை, https://www.vikatan.com/other/free-tneb-letter/index.php விகடன் இணைய தளத்தில் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திக் கொள்ளவும்.
 
‘‘தென்னை உற்பத்தியாளர் அமைப்பு தொடங்குவது எப்படி? மண்புழு உரம் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் மானியம் கிடைக்குமா?’’

க.பழனிச்சாமி, திருமூர்த்திமலை.

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல இயக்குநர் டி.பாலசுதாகரி பதில் சொல்கிறார்.

‘‘தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பை மூன்று அடுக்காக உருவாக்கியுள்ளது. அதாவது, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் முதல் நிலையாகவும், தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இடைநிலையாகவும், தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் உச்ச நிலையாகவும் கொண்டது.

தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது 40-100 தென்னை விவசாயிகளைக் கொண்டது. குறைந்தபட்சம் 10 சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம். இந்த அமைப்புகள் தொடங்க, தென்னை வளர்ச்சி வாரியம் விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறது. இப்படி குழுவாக செயல்படும் போது, வாரியத்தின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் தென்னை விளைச்சலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

மண்புழு உரம் தயாரிக்கவும் மானியம் உண்டு. தென்னை ஓலைகள், மட்டைகள்... போன்ற பண்ணைக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றி, இயற்கை உரங்களைத் தென்னை மரங்களுக்குக் கொடுப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். தென்னந்தோப்பில் மண்புழுத் தொட்டி அமைப்பதற்கு 100% மானியத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மானியமாக ஒரு தொட்டிக்கு `40,000 அளிக்கப்படுகிறது. 1,200 கன அடி அளவு கொண்ட தொட்டிக்கு அதிகபட்சம் மானியத் தொகையாக `60,000 வழங்கப்படுகிறது. தொட்டியின் அளவைப் பொறுத்து மானியம் மாறுபடும். இந்த மானியம் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாய உற்பத்தியாளர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, இயக்குநர், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம், எண்: 14/20, 25 வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை-600061. தொலைப்பேசி: 044–22673685.

நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.