மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?

மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?

ஓவியம்: ஹரன்

மின்சாரம் விட்டு விட்டு வந்ததால் தண்ணீர் சரியாகப் பாயவில்லை. அதனால், மோட்டாரை நிறுத்திவிட்டு திரும்பினார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்தநேரத்தில் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த நாட்டுக் கோழிகள் நெல் நாற்றங்காலில் புகுந்து விட... குச்சி எடுத்து கோழிகளைத் துரத்தியபடியே ஓடினார். அப்போது, ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் பேசிக்கொண்டே தோட்டத்துக்குள் வர, ஏரோட்டியும்  திரும்பி வந்துவிட மூவரும், நாற்றங்காலுக்கு அருகிலேயே கட்டிலில் அமர்ந்து அன்றைய மாநாட்டைக் கூட்டினர்.

‘‘தமிழ்நாட்டுல, தென்மேற்குப் பருவமழை பெய்யல. இதனால விதைச்ச பயிருக்கு தண்ணியில்லை.... விளைஞ்ச பயிருக்கு விலையில்லை’’ என்று ராகமாகச் சொன்ன காய்கறி ஒரு செய்தியைச் சொன்னார்.

‘‘வெளி மாநிலங்கள்ல இருந்து அதிகமா காய்கறிகள் வரத்தாகிறதலா உள்ளூர்ல விலை சரிஞ்சுக்கிட்டே இருக்கு. தமிழ்நாட்டுல முக்கியமான பெரிய சந்தை கோயம்பேடு.  இங்கே இருக்கிற வியாபாரிகள்தான் தமிழ்நாட்டுல பல பகுதிகள்ல இருக்குற சந்தைகள்ல, கமிஷன் கடைகள்ல  இருந்து காய்கறிகளை கொள்முதல் பண்ணுவாங்க. இப்போ, கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள்ல இருந்து அதிக காய்கறிகள் வந்துகிட்டிருக்கு. அதனால மார்கெட்ல காய் விலை குறைஞ்சிடுச்சு. நம்ம மாநிலத்துல உற்பத்தியாகுற காய்களை கொள்முதல் பண்றது குறைஞ்சதால விலையும் சரிஞ்சு போயிடுச்சாம். மார்க்கெட்ல பேசிக்கிட்டாங்க’’ என்றார்.

மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?

‘‘இது தற்காலிகச் சரிவுதான். கொஞ்சநாள்ல விலை ஏறி சரியாகிடும்’’ என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.

‘‘இயற்கை வள ஆதாரத்தைப் பெருக்குறதுக்காக தனியார் நிலங்கள்ல மரம் வளர்க்கும் திட்டத்தை, வனத்துறை செயல்படுத்திகிட்டு இருக்கு. ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள்ங்கிற கணக்குல அதிகபட்சம் பன்னெண்டரை ஏக்கருக்கு வனத்துறையில் இருந்து இலவசமா மரக்கன்று வாங்கிக்கலாம். தேக்கு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, மகோகனி, இலவு, நாவல், அசோகா...னு 18 வகையான மரக்கன்றுகளை வனத்துறை கொடுத்துகிட்டிருக்கு. இந்த வருஷம் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல, குப்பனுார், பசூர், அன்னூர் மேட்டுப்பாளையம், வடகலுார், முத்துார், கோடங்கிப்பாளையம், நல்லட்டிப்பாளையம், கோவிந்தராஜபுரம், சங்கராயபுரம், சேவூர், பாப்பன்குளம், வடுகப்பாளையம், கருமாப்பாளையம், சின்னேரிப்பாளையம், முறியாண்டம்பாளையம்னு 15 கிராமங்களை மரம் வளர்ப்புக்காக தேர்ந்தெடுத்து இருக்காங்களாம்’’ என்றார்.

‘‘திட்டம்லாம் நல்லாதான் போடுறாங்க. செயல்பாட்டுக்கு வர்றப்போதான் திண்டாட்டமா இருக்கு’’ என்று சிரித்த வாத்தியார்,

‘‘தமிழ்நாட்டுல, வேளாண்துறை மூலமா... பாஸ்போ-பாக்டீரியா, ரைசோபியம், அசோஸ்பைரில்லம் மாதிரியான உயிர் உரங்களைத் தயாரிக்கிறதுக்காக 15 இடங்கள்ல மையங்கள் இருக்கு. தென் மாவட்டங்கள்ல உத்தமப்பாளையம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்கள்ல இந்த மையம் இருக்கு. மையம் அமைச்சு மூணு வருஷம் ஆகியும் உற்பத்திப் பணிகள் பெரியளவுல நடக்கலையாம். இன்னும், 2016-17-ம் வருஷத்துக்கான உற்பத்தி இலக்குக்கான நிதி ஒதுக்கவே இல்லையாம். மூலப்பொருட்கள் வாங்குறதுக்கான அனுமதியும் கொடுக்கலையாம். அதனால, உற்பத்தி தொங்கல்ல இருக்குதாம். இப்படி இருந்தா எப்படி விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் கிடைக்கும்’’ என்று கேட்டார்.

‘‘ஆமா, அது கிடைச்சுட்டாலும்... பேருக்குதான் உயிர் உரம். உண்மையில் பல இடங்கள்ல செத்த உரத்தைத்தான் கொடுக்குறாங்க. அதாவது அவங்க கொடுக்குற உரத்துல நுண்ணுயிரிகள் உயிரோடவே இருக்காது. இந்த மாதிரி உயிர் உரங்களை யெல்லாம் குறிப்பிட்ட காலத்துல விவசாயிகளுக்குக் கொடுக்குறதுல அதிகாரிகள் அக்கறை காட்டுறதேயில்லை. தேவைனு கேட்டுவர்ற விவசாயிகளையும் அலையவிடுவாங்க. ரொம்ப தொந்தரவு செஞ்சா, குடோன்ல தேங்கிக் கிடக்கிற பாக்கெட்டை எடுத்துக்கொடுத்து விடுவாங்க. நான்லாம் நேரடியாவே அனுபவப்பட்டிருக்கேன். மண்புழு உரம்னு சொல்லி மண்ணைக் கெடுக்கிற கொடுமையெல்லாம் நடக்குது’’ என்று ஆதங்கப்பட்டார், ஏரோட்டி.

சிறிது நேரம் மவுனம் நிலவ, கூடையிலிருந்து ஆளுக்கு கொஞ்சம் நாட்டு நாவல் பழங்களை எடுத்துக் கொடுத்தார், காய்கறி. அதை சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.   

‘‘தென்னையைத் தாக்குற பூச்சிகள்ல முக்கியமானது கருந்தலைப்புழு. இந்தப்புழு கடற்கரையோரப் பகுதிகள், ஆத்தோரப் பகுதிகள்ல இருக்கிற தென்னை மரங்களை அதிகமா தாக்குமாம். வருஷம் முழுக்கவே இந்தப்புழு தாக்குதல் இருக்கும்னாலும், வெயில் காலங்கள்ல அதிகமா இருக்குமாம். இந்தப் புழுக்களை ஒட்டுண்ணி மூலமா கட்டுப்படுத்த முடியுமாம். ஆழியாறுல இருக்கிற தென்னை ஆராய்ச்சி நிலையத்துல இந்த ஒட்டுண்ணியை உற்பத்தி செய்து விற்பனை செய்றாங்களாம்.

‘இந்தப்புழு தாக்கினால், கீழ் அடுக்கில் இருக்கிற மட்டைகள் காய்ஞ்சு பழுப்பு நிறமா மாறிடும்.  நடு அடுக்கில் இருக்கிற இளம் மட்டைகள் மட்டும் பாதி காய்ஞ்சு, பாதி பச்சையாகவும் தென்படும். தூரத்துல இருந்து பார்க்கிறப்போ மரம் தீயில கருகினது மாதிரி தெரியும். தென்னை ஓலையில புழுவோட எச்சம் இருக்கும். இந்த அறிகுறிகளை வெச்சு புழுத்தாக்குதலைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் புழுக்கள் ஓலையில் இருக்கிற பச்சையத்தை காலி பண்ணிடும். அதனால மகசூல் குறையும். புழு தாக்கின மரங்கள்ல இருந்து மட்டையை வெட்டி எரிச்சிடணும். இந்தப்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கர் தோப்புக்கு 2 ஆயிரத்து 100 பிராக்கானிட் ஒட்டுண்ணிகளை விடணும். அல்லது, 1,400  பெத்திலிட் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்தலாம். ஒட்டுண்ணிகளை 21 நாட்கள் இடைவெளியில் 5 தடவை விடணும். இப்படி விட்டா புழுக்களை அழிக்க முடியும்‘னு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ராஜமாணிக்கம் சொல்லியிருக்கார்’’ என்றார்.

அந்த நேரத்தில் மீண்டும் கோழிகள் நாற்றங்காலுக்குள் புக... எழுந்து ஓடினார், ஏரோட்டி. மாநாடும் முடிவுக்கு வந்தது.