மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

‘‘சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம், எந்தப் பட்டம் ஏற்றது?’’

கே.மணிகண்டன், திருப்பூர்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி முனைவர் ஆர்.ரவிகேசவன் பதில் சொல்கிறார்.

‘‘இந்தியாவின் சோள உற்பத்தியில், தமிழ்நாடு ஆறாமிடம் வகிக்கிறது.  தீவனம், தீவனப்பயிர் (தட்டை) மற்றும் தானியமாக சோளம் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை சோளம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தின் மொத்த சோள சாகுபடிப் பரப்பில் நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விருதுநகர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் 76 சதவிகிதம் பங்களிக்கின்றன.

தமிழ்நாட்டில் சோளம், ஆடிப் பட்டம் (ஜூலை - செப்டம்பர்), புரட்டாசிப் பட்டம் (அக்டோபர் - டிசம்பர்) மற்றும் கோடைக் காலங்களில் பயிரிடப்படுகிறது. கோ- 30 என்ற ரகம் தீவனத்துக்கும், உணவுக்கும் ஏற்றது. கோ-30, பிற ரக சோளங்களைக் காட்டிலும் 5 முதல் 10 சதவிகிதம் வரை மகசூல் அதிகரிப்பதால், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

சோள சாகுபடியில் முக்கியமான இரண்டு கட்டங்கள் உள்ளன. அதாவது, பூ வைக்கும் போதும், கதிரில் பால் பிடிக்கும் போதும் மழை வந்துவிடக்கூடாது. இதைக் கணித்துச் சாகுபடி செய்வது நல்லது. உதாரணத்துக்கு விதைப்பு செய்த 50-ம் நாள் பூ வைக்கும். 90-ம் நாள் கதிர்களில் பால் பிடிக்கும். இந்த நாட்களில் மழை பெய்துவிட்டால், கதிரில் பூஞ்சணம் பிடித்துவிடும். விளைச்சலும் நன்றாக இருக்காது. ஆகையால், பருவம் பார்த்து சாகுபடி செய்தால்தான், சோளம் சாகுபடியில் நல்ல விளைச்சல் எடுக்க முடியும்.’’

தொடர்புக்கு, சிறுதானியங்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003.

தொலைபேசி: 0422-2450507.

‘‘அரப்பு மோர் கரைசல் தயார் செய்வது எப்படி? இதன் பயன்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

எம்.தாமரைச்செல்வி, புதுச்சேரி.


விழுப்புரம் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயி சுப்பிரமணியம் பதில் சொல்கிறார்.

‘‘இயற்கைத் தொழில்நுட்பங்களில் அரப்பு மோர் கரைசலுக்கு முக்கிய இடம் உண்டு. நமது ஊர்களில் கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான நீர் சேர்த்து, நன்கு அரைக்கவும். தண்ணீர் விட்டு அரைக்கும்போது, சுமார் 5 லிட்டர் கரைசல் கிடைக்கும். அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் 7 நாட்களுக்கு நன்கு புளிக்கவிட வேண்டும். 8-ம் நாள் ஒரு லிட்டருக்குப் பத்துலிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம்.

இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளது.  இதை தெளிக்கும்போது, பூக்கள் அதிகமாக பூக்கும். காய்கறி, பழங்கள் சுவையாக இருக்கும். இதற்கு பூஞ்சாண நோய்களை விரட்டும் திறன் உண்டு. தீமை செய்யும் பூச்சிகளும் கூட, அரப்பு மோர் கரைசல் தெளிக்கும் வயலில் எட்டிப்பார்க்காது. வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அரப்பு மோர் கரைசல் அருமையான வளர்ச்சி ஊக்கி. இதை தெளித்து வந்தால், காய்கறிகளின் விளைச்சல் நன்றாக இருக்கும். சம்பங்கி, முல்லை... போன்ற மலர் வகைப் பயிர்களுக்கும் அரப்பு மோர் கரைசலை தெளித்தால், பூக்கும் திறன் அதிகரிக்கும்.’’

‘‘எங்கள் ஊரில் உள்ள சர்க்கரை ஆலையில் மொலாசஸ் கொடுக்கிறார்கள். இதை கறவை மாடுகளுக்கு தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகிறார்கள். இதனால், பாதிப்பு ஏற்படுமா?’’

எம்.ரவிச்சந்திரன், நெல்லிக்குப்பம்.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த மூத்த கால்நடை மருத்துவர் டாக்டர். ஆறுமுகம் பதில் சொல்கிறார்.

‘‘பெரும்பாலும் சர்க்கரை ஆலைகள் உள்ள பகுதிகளில் மாட்டுத் தீவனங்களுடன் மொலாசஸ் கலந்து கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் வெளியில்

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

தெரியவில்லை. கரும்பு ஆலையில் இருந்து கொடுக்கப்படும் மொலாசஸில் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்து உள்ளன. அதை மாடுகளுக்குக் கொடுப்பதால் அதன் உடல்நிலையில் பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக மொலாசஸ் கலந்த தீவனம் உண்ணும் மாடுகளின் எடை விரைவில் அதிகரிக்கும். இதனால் மாடுகள் சினை பிடிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

இதைத் தீவனத்தில் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே... ‘குளுக்கோஸ்’ என்ற இனிப்புப் பொருளுக்காகத்தான். இதனால், பால் பரிசோதனையின்போது ‘எல்.ஆர்.’ என்று சொல்லப்படும் லேக்ட்டோ மீட்டரின் (Lacto meter) அளவைக் கூட்டிக் காட்டமுடியும். இந்த அளவுகளை வைத்துதான் பாலில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் இதர சத்துக்களின் அளவை அறிய முடியும். தரமான பால் 27 டிகிரி எல்.ஆர் இருக்கவேண்டும் என்பார்கள். இது குறைந்தால் அந்தப் பால் தரத்திலும் குறைந்தது. இதனால் பாலுக்கு விலை குறைவாகவே கொடுக்கப்படும்.  எல்.ஆர் நன்றாக இருந்தால் பால் மணமுடன் இருக்கும். விலையும் கூடுதலாகக் கிடைக்கும்.

தினமும் மாடுகளுக்குக் கொடுக்கப்படும் தீவனத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் அளவுக்கு குளுக்கோஸ் இருக்கவேண்டும். இதற்காக ரசாயனம் கலந்த  சர்க்கரை ஆலையின் மொலாசஸ் பயன்படுத்த வேண்டாம். இயற்கை கொடுத்துள்ள அற்புதமான பரிசான பனைவெல்லம் அல்லது சல்பர் கலக்காத நாட்டுச் சர்க்கரையைத் தீவனத்துடன் கலந்து கொடுக்கலாம். இதனால் தீவனத்தை மாடுகள் நன்றாக சாப்பிடும். பால் சுரப்புத்தன்மையும் கூடும். எல்.ஆர். டிகிரியும் சராசரியாக 27 வரை வரும். கறவை மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.’’

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.