மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!

மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!

பிச்சாவரம்... கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வெளிநாட்டுக்காரங்களுக்கும் இந்த இடத்தோட அருமை பெருமை தெரியுது. அதனாலத்தான், தமிழ்நாட்டு பக்கம் வந்தா, பிச்சாவரம் மண்ணை மிதிச்சுட்டு போறதை பெரும்பாலும் வழக்கமா வெச்சிருக்காங்க வெளிநாட்டுக்காரங்க. இங்க ஓடி வந்து, இதோட இயற்கை அழகை ரசிச்சு பார்க்குறாங்க. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்க வர்ற மக்களுக்கு பாதுகாப்பான படகுகள் மூலமா சுத்தி காட்டுற வேலையை செய்யுது.

பிச்சாவரத்துல  இருக்கிற அலையாத்தி (மாங்குரோவ்) காடுங்கதான், உலகத்திலேயே ரெண்டாவது பெரிய அலையாத்தி காடுன்னு புள்ளிவிவரம் சொல்லுது. கடல் சீற்றம் மூலமா பெரிய அலைகள் உருவானா, அந்த அலைகளோட வேகத்தைக் கட்டுப்படுத்துற வேலையைத்தான் இந்த அலையாத்தி காடுங்க செய்யுது. அலையோட வேகத்தை குறைக்கிறதாலதான், அலையாத்தி காடுனு தமிழ் மொழியில பேரு வெச்சிருக்காங்க. அரிய வகை மீன் இனங்கள் வாழவும், சில வகை மீன்கள் குஞ்சு பொரிக்கவும் அலையாத்தி காடுகளோட வேர்தான் அடைக்கலமா இருக்கு. 
பிச்சாவரம் காட்டுப்பகுதியோட பரப்பளவு 2,800 ஏக்கர். இந்தப் பகுதியில சின்னச் சின்ன தீவுங்க சுமார் 50 உண்டு. 177 வகையான பறவைங்க இந்தப் பகுதியில வந்து போறதா, புள்ளிவிவரம் சொல்லுது. இந்திய அளவுல  சதுப்பு நிலக்காட்டுப் பகுதி சுற்றுலாத் தலமா இருக்குன்னா, அது பிச்சாவரத்துல மட்டும்தாங்க. விதம்விதமான மரம், செடி கொடிங்க, மயில், மீன்கொத்தி, நாரை, பருந்துனு விதவிதமான பறவைகளும், குள்ளநரி, நீர் நாய்... என ஏராளமான உயிரினங்களும் உண்டு. இந்தக் காடு தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்புல இருக்கு. இந்தப் பகுதியில சினிமா படப்பிடிப்பும் நிறைய நடக்குது. படத்துல பார்த்தா, அது எங்கேயோ வெளிநாட்டுல எடுத்தது மாதிரி பசுமையா, பிரமாண்டமா இருக்கும். ஆனா, அத்தனையும் பிச்சாவரம் சதுப்புநிலப்பகுதியில எடுத்ததாத்தான் இருக்கும்.

எம்.ஜி.ஆர் நடிச்ச ‘இதயக்கனி’ திரைப்படத்தோட காட்சியை, இங்க இருக்கிற, ஒரு திட்டுல படம் புடிச்சிருக்காங்க. அதுல இருந்து, அந்த திட்டுக்கு எம்.ஜி.ஆர் திட்டுன்னு பேரு வெச்சு மக்கள் கூப்பிடறாங்க.

இந்த பிச்சாவரத்துக்கும், சிதம்பரம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலோட தலவிருட்சம் ‘தில்லை’ மரம். இந்த மரம் பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில நிறையவே இருக்கு. அதாவது, ஒரு காலத்துல கடற்கரைப் பகுதி சிதம்பரம் நடராஜர் கோயில் வரையிலும் இருந்ததாகவும், காலப்போக்குல கடல் உள்வாங்கி பிச்சாவரம் பகுதியோட இப்போ நிக்குதுன்னும் சொல்றங்க. இதுக்கு ஆதாரமாத்தான், நடராஜர் கோயில்ல இப்பவும், தில்லை மரம் நின்னுக்கிட்டிருக்கு. சிதம்பரத்துக்கு ‘தில்லை’ன்னும் இன்னொரு பேரு உண்டு.

கூடவே, இன்னொரு கதையும் உலா வருது.  முதலாம் பராந்தக சோழ மன்னருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டுச்சாம். பலவிதமான ராஜ மருத்துவம் பார்த்தும் நோய் குணமான மாதிரி தெரியல. கடைசியா சித்தர்கள் வழிகாட்டல் மூலமா 48 நாள் சிதம்பரம் நடராஜர் கோயில தங்கி, தல விருட்சமான தில்லை மர இலையோட தீர்த்தத்தை (தண்ணீர்) குடிச்சாராம். இதுக்குப் பிறகு, பராந்தக சோழனுக்கு தொழுநோய் குணமாயிடுச்சுன்னும் சொல்றாங்க. இந்த முதலாம் பராந்தக சோழன்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் பொன்னாலேயே கூரை செய்து கொடுத்திருக்கார். இவருக்கு ‘பொற்கூரை வேய்ந்த சோழன்’னும் பட்டப் பெயர் உண்டு. பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில உள்ள சுரபுன்னை, தில்லை மரங்களோட மருத்துவக் குணம் அந்த பகுதி தண்ணில கலந்திருக்காம். இதனால, அங்க மீன் பிடிக்குற மீனவர்களுக்கு, தொழுநோயோ, புற்றுநோயோ வரதில்லைன்னும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிங்க ஆய்வு மூலமா கண்டுபிடிச்சிருக்காங்க.

தில்லை மரத்துல ஏராளமான மருத்துவக் குணம் இருந்தாலும், இந்த மரத்துக்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்துக்கணும்னு சொல்றாங்க. ஏன்னா, இந்த மரத்தோட பால் கண்ணுல பட்டா, கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வை குறைபாடு வந்துடுமாம், இதனாலத்தான், குருடாக்கும் மரம்னு (Blinding Tree) இதுக்கு இன்னொரு பேரு வெச்சிருக்காங்க. இனி சிதம்பரம்னு சொன்னா, நடராஜர் மட்டுமில்லீங்க, தில்லை மரமும் கண்ணு முன்னால வந்து நிக்கும்தானே!