மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..!

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..!

புறா பாண்டி

‘‘இ.எம். கலவையைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்த முடியுமா? இதை எப்படித்

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

தயார் செய்வது?’’

ஏ.தயாளன், சிதம்பரம்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள ஈகோ-புரோ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லூக்காஸ் பதில் சொல்கிறார்.

‘‘எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). தமிழில், ‘திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையில் இருக்கும். இது, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

இதை எப்படித் தயாரிப்பது என்பது பற்றிப் பார்ப்போம். ஒரு கிலோ வெல்லத்தைப் பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும்

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒருமுறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில் இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையோடு காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

ஒரு மடங்கு இ.எம். கலவையுடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம் (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும்வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம். இதை பயிர்வளர்ச்சிக்கு என்றால், வாரம் ஒருமுறை தெளிக்கலாம். இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

இந்த இ.எம். தொழில்நுட்பத்தை ஜப்பான் நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் இ.எம். பயன்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன. இந்த நாடுகளில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்து வருகின்றன. இதற்கு மூலக்காரணம் இ.எம். பயன்பாடுதான். இந்தியாவிலும் இதுபோன்ற நிலை உருவாக வேண்டும்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 0413 2622469.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

‘‘கேழ்வரகைப் பயிரிட்டுள்ளோம். எங்கள் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’

த.குமரப்பா, தேன்கனிக்கோட்டை.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், நால்ரோடு தண்டா கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கோபால் பதில் சொல்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் போன்ற பகுதிகளில் கேழ்வரகுப் பயிருடன், துவரையை ஊடுபயிராகச் சாகுபடி செய்வது வழக்கம். நானும்கூடச் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் செய்து வந்தேன். அப்போது, காட்டுப் பன்றிகள் வயலுக்குள் புகுந்துவிடும். ஆனால், இப்போது கேழ்வரகுப் பயிருடன், சணப்பை ஊடுபயிராகச் சாகுபடி செய்து வருகிறோம். இதனால், காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வருவதில்லை.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

இங்கு ஆடிப்பட்டத்தில் கேழ்வரகு விதைப்போம். ‘கெட்டிராகி’ என்ற பாரம்பர்ய ரகம்தான் நல்ல விளைச்சலைக் கொடுத்து வருகிறது. ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். கேழ்வரகுப் பயிருக்கு 5 அடி இடைவெளியில் சணப்பையை விதைக்க வேண்டும். இதற்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். ஐப்பசியில் கேழ்வரகு அறுவடைக்கு வந்துவிடும். சணப்பு, ஐப்பசியில் பூ எடுத்து, மார்கழியில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு கேழ்வரகு 5 மூட்டை (500 கிலோ), சணப்பு 2 மூட்டை (200 கிலோ) மகசூல் கிடைக்கும். எங்கள் பகுதியில் கேழ்வரகு சாகுபடி செய்யும் விவசாயிகள் சணப்பை மறக்காமல் விதைத்து வருகிறார்கள். சணப்பை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதால், காட்டுப்பன்றிகளும் வருவதில்லை. சணப்பு காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்துகிறது. இதனால், கேழ்வரகு விளைச்சலும் நன்றாக உள்ளது. சணப்பு விதைகள் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.’’

‘‘ஆமணக்கு சாகுபடி செய்யவுள்ளோம். இதனுடன் சின்னவெங்காயத்தை ஊடுபயிராகச் சாகுபடி செய்ய முடியுமா? ஆமணக்கு விதைகள் எங்கு கிடைக்கும்?’’

கே.ரவி, சின்னசேலம்.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!



சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செ.மாணிக்கம் பதில் சொல்கிறார்.

‘‘ஆமணக்குப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களில் சின்னவெங்காயமும் ஒன்று. ஆனால், நீர்ப்பாசன வசதி உள்ள நிலங்களில் மட்டுமே ஆமணக்குடன்,சின்ன வெங்காயத்தை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். இப்படிச் சாகுபடி செய்வதால், இரண்டு பயிர்களிலும் பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆமணக்கு மற்றும் சின்ன வெங்காய விதைகளை 1:2 என்ற விகிதத்தில், அதாவது, ஒரு வரிசை ஆமணக்கு, இரண்டு வரிசை வெங்காயம் என வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். ஆமணக்கு விதைகளை விதைக்கும் முன்பு, 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். ஆமணக்கு அறுவடைக்கு வர ஆறு மாதங்கள் பிடிக்கும். மூன்று மாதங்களில் சின்ன வெங்காயம் மகசூல் கொடுத்துவிடும். ஆக, ஒரே நிலத்தில் இரண்டு பயிர்கள் மூலம் வருமானம் பெறலாம்.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

ஆமணக்குடன், சின்ன வெங்காயத்தை விதைக்க, ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. வீரிய ஒட்டு ஆமணக்கு விதை தற்சமயம் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு உள்ளது. ஆமணக்கு விதை தேவைப்படும் விவசாயிகள் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாம். ஆமணக்கு ஓர் ஏக்கருக்கு சராசரியாக 1,000 கிலோ மகசூல் கிடைக்கும்.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் அஞ்சல், ஆத்தூர் வட்டம், சேலம்-636119.

தொலைபேசி: 04282 293526.

நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும்  இ.எம் கரைசல்..!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.