மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’

மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’

தோட்டத்து உயிர்வேலியை சீர் செய்ததில் கழிக்கப்பட்ட செடி, கொடிகளை அகற்றிக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவருடன் பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, மூவரும் மரத்தடி கல்திட்டில் அமர்ந்தனர். ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

‘‘காவிரித் தண்ணீர் கிடைக்காததால, தமிழ்நாடு அரசு சார்பா, டெல்டா விவசாயிகளுக்கு மட்டும் சம்பா தொகுப்புத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிச்சிருந்தாங்க இல்லையா? அதுக்குத் தமிழ்நாடு அரசு சார்பா தனியா நிதி ஒதுக்காம தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமா மத்திய அரசு தந்திருந்த நிதியைத்தான் பயன்படுத்துறாங்களாம். அதாவது, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்துல நெல் சாகுபடியில் இயந்திர நடவுக்காக, ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் ரூபாய் மானியம் தர்றாங்க. இந்தத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கு. டெல்டா மாவட்டங்கள்ல இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சம்பா தொகுப்புத்திட்டத்துக்கு மாத்தி விட்டுட்டு, டெல்டா பகுதி விவசாயிகளை நேரடி நெல் விதைப்புச் செய்யக் கட்டாயப்படுத்துறாங்களாம், வேளாண்மை அதிகாரிகள். இயந்திர நடவுக்கு மானியம் கேக்குற விவசாயிகளுக்கு ‘டெல்டா பகுதியில் அந்தத் திட்டம் இல்லை’னு சொல்லிடுறாங்களாம். அதில்லாம சம்பா தொகுப்புத்திட்டத்துல மானியம் கொடுக்குறதுக்காக, ஆளைப்பொறுத்து 200 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரை லஞ்சமும் கேக்குறாங்களாம், அதிகாரிகள்’’ என்றார், வாத்தியார்.
‘‘என்னமோ தமிழக அரசு நிதியில இருந்து மானியம் கொடுக்குறது மாதிரி அறிவிச்சாங்க... அது பொய்யா?’’ என்று கேட்டார், காய்கறி.

‘‘அதையெல்லாம் நாம கேட்கப்படாது’’ என்ற ஏரோட்டி, ‘‘நமக்கெதுக்கு அந்த வம்பு... நம்ம கதைக்கு வருவோம்’’ என்று ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தீவனப் பற்றாக்குறையைச் சரி செய்றதுக் காகக் கால்நடை பராமரிப்புத்துறை மூலமா, ‘மாநில தீவன அபிவிருத்தித்திட்டம்’ நடைமுறையில இருக்கு. அந்தத்திட்டம் மூலமா, இறவைப் பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால் மாதிரியான தீவன விதைகளை மானியத்துல கொடுக்குறாங்க. மானாவாரி விவசாயிகளுக்குத் தீவனச் சோளம், தட்டைப்பயறு விதைகள் கொடுக்குறாங்க. அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவுல விதைக்கிறதுக்கான விதை கிடைக்கும். மர வகைத் தீவனங்களான முள் முருங்கை, அகத்தி மாதிரியான செடிகளையும் மானியத்துல கொடுக்குறாங்க. இதுபோக புல் வெட்டும் கருவி, அசோலா திடல், ஊறுகாய் புல்லாக மாத்துறதுக்கான பிளாஸ்டிக் பைகள்னு மானியத்துல கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா, இந்த வருஷம் இதுவரை இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கலையாம். ‘ஆடி மாச விதைப்புக்கே தீவன விதை கிடைக்கும்’னு நம்பியிருந்த விவசாயிகள் ஏமாந்துட்டாங்களாம். அடுத்து வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கிறதுக்குள்ளயாவது மானியம் கிடைக்குமானு விவசாயிகள் காத்துட்டு இருக்காங்க. ஆனா, இன்னமும் அதுக்கான அறிகுறியே தென்படலையாம்’’ என்றார், ஏரோட்டி.

‘‘வந்ததுமே கொடுக்கணும்னு நினைச்சேன். பேச்சு சுவாரஸ்யத்துல மறந்துட்டேன்’’ என்ற காய்கறி, கூடையில் இருந்து கொழுக் கட்டைகளை எடுத்து ஆளுக்கு இரண்டாகக் கொடுத்து, ‘‘விநாயகர் சதுர்த்திக்கு செஞ்சது. காலையிலே படையல் போட்டுட்டு உங்களுக்காக எடுத்துட்டு வந்தேன்’’ என்றார்.

அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியை ஆரம்பித்தார், ஏரோட்டி. ‘‘கரூர் மாவட்டத்துல பரவலா இறவை நிலங்கள், மானாவாரி நிலங்கள் ரெண்டுலயும் சேர்த்து 40 ஆயிரம் ஏக்கர் அளவுல நிலக்கடலை சாகுபடி நடக்குது. இப்போ, நெரூர், அச்சமாபுரம், சோமூர், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, அரங்கநாதன்பேட்டை, வாங்கல் உள்ளிட்ட பகுதிகள்ல, நிலக்கடலை அறுவடை நடந்துட்டு இருக்குது.  கடந்த மூணு வருஷமா சரியான மழை இல்லாததால நிலக்கடலை சாகுபடி ரொம்பக் குறைவாத்தான் இருந்ததாம். இந்த வருஷம் ஓரளவுக்கு மழை கிடைச்சிருக்கிறதால அதிகப்பரப்புல நிலக்கடலை விதைச்சிருக்காங்க. கடைசி நேரத்துல கொஞ்சம் மழை கிடைச்சதால நல்ல விளைச்சல் கிடைச்சிருக்காம். அதனால மார்கெட்டுக்கு நிலக்கடலை வரத்து அதிகமாயிருக்குதாம். வரத்து அதிகமா இருந்தாலும் நிலக்கடலைக்குத் தேவை அதிகமா இருக்குறதால நல்ல விலை கிடைச்சுட்டு இருக்குதாம். போன வருஷம் 60 கிலோ நிலக்கடலை மூட்டை 1,900 ரூபாய் வரைதான் விற்பனையாச்சாம். இந்த வருஷம் ஒரு மூட்டை 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையாகுதாம். அதனால விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்குறாங்களாம்’’ என்றார்.

‘‘ஏய்... ஒரு பெருமையான விஷயத்தைச் சொல்ல மறந்திட்டேன்யா” என்று ஆரம்பித்த வாத்தியார், “ஹரியானா மாநிலத்துல இருக்குற ‘தேசிய கால்நடை மரபுவள ஆதார நிறுவனம்’ நம்ம தமிழ்நாட்டுல வளர்க்கப்படுற ‘செவ்வாடு’ங்கிற செம்மறி ஆட்டு ரகத்துக்கும், ‘கொடி ஆடு’ங்கிற வெள்ளாட்டு ரகத்துக்கும் தேசிய அங்கீகாரம் கொடுத்திருக்கு. இரண்டுமே நம்ம மாநிலத்துல வளர்க்கப்படுற நாட்டு ரக ஆடுகள். செவ்வாட்டு ரகத்தைத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்லதான் அதிகமா வளர்க்குறாங்க. அதுலயும் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடுனு ரெண்டு வகை இருக்குது. கொடி ஆடு, தமிழ்நாட்டுல பரவலா எல்லாப் பகுதியிலயுமே இருக்குற வெள்ளாட்டு ரகம். இதை ‘பொறையாடு’னும் சொல்வாங்க. கால் நீளமா இருக்கும். இந்த ரெண்டு ஆடுகள்லயும் தலா ஒன்றரை லட்சம் ஆடுகளுக்கு மேல தமிழ்நாட்டுல வளர்த்துட்டு இருக்குறாங்க. இப்போ, தேசிய அங்கீகாரம் கிடைச்சிருக்கிறதால, இந்த ஆடுகளோட எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசோட நிதியுதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. ரெண்டு ரகமுமே குறைஞ்ச காலத்துல அதிக எடை வரக்கூடிய ரகங்களாம்’’ என்றார்.

அந்த நேரத்தில் உழவு செய்வதற்காக டிராக்டர் வர, எழுந்து சென்றார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

காபி, தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள்!

நீலகிரி மலைப்பகுதியில், முதன்முறையாகத் தேயிலை விவசாயிகளுக்கு, மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதி வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர் பாசன உபகரணங்களும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவிகித மானியத்தில், நுண்ணீர் பாசன உபகரணங்களும் வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், மலைப்பகுதி விவசாயிகளுக்கு இத்திட்டம் இதுவரை சென்றடையவில்லை. தற்போது வறட்சி அதிகரிப்பதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் தேயிலை, காபி விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில், இத்திட்டத்துக்காக 3 கோடியே 92 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 ஏக்கர் பரப்பில் பாசன வசதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் நீலகிரி மாவட்ட தேயிலை, காபி விவசாயிகள், குடும்ப அட்டை நகல், அடங்கல், சிட்டா, நில வரைபடம் போன்றவற்றுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடைப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.