மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல் மருந்து - 1

நல் மருந்து - 1
பிரீமியம் ஸ்டோரி
News
நல் மருந்து - 1

தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! புதிய தொடர் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நல் மருந்து - 1

பூமியில் மனிதன் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தாவரங்கள் தோன்றிவிட்டன. உலகின் மூத்த உயிரினமான தாவரங்களை நம்பித்தான் மனித இனம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் மட்டுமன்றி மருத்துவத்துக்கும் தாவரங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ‘மருந்து’ என்றாலே, அது தாவரம் (மூலிகை) மட்டுமே. அதற்குப்பிறகு, தாவரங்களில் நோய்களைக் குணமாக்கும் மூலப்பொருட்களைப் பிரித்து அவற்றை ஆராயத் தொடங்கினர். பிறகு அம்மூலப்பொருட்களைச் செயற்கையாகத் தயாரித்துப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக, அனைத்துக்கும் மூலம் மூலிகைகள்தான்.

மனிதன் சமைத்து உண்ணப்பழகிய பிறகுதான் நோய்கள் வர ஆரம்பித்தன. அதனால்தான் கடந்த 100 ஆண்டுகளில், குழந்தை பிறப்புகூட மனிதர்களுக்கு மருத்துவமனை சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டது.

மனிதர்கள் தாவரங்களை இனம் காணுவதற்கு முன்பே விலங்குகள் இனங்கண்டு தேவையான மூலிகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது ஒரு தவறான பழமொழி. புலி சில சமயங்களில் புல்லைத் தின்றுவிட்டு, வாந்தி எடுப்பதாகவும், அதில் செரிக்காத உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் புலி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே பழக்கம் நமது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் கூட உண்டு.

பூனைக்கு அருகில் குப்பைமேனிச் செடியின் வேரைக் கொண்டு போனால், பூனை குப்பைமேனி வேரை வணங்குவதை இன்றும் கண்கூடாக செய்து பார்க்கலாம். அதனால்தான் குப்பை மேனிக்குப் பூனைவணங்கி எனும் பெயரே உள்ளது.

அதேபோல யானைகளுக்குச் செரிமானக் கோளாறு ஏற்பட்டால், வெள்ளை நிற மண்ணைத் தேடி உண்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளன. வெள்ளை மண்ணில் ‘அலுமினியம் சிலிக்கேட்’ எனும் பொருள் அதிகமாக இருக்கும். இந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கும் மாத்திரையைத்தான் அலோபதி மருத்துவத்தில் நெஞ்செரிச்சலுக்கும், செரிமானக் கோளாறுகளுக்கும் கொடுத்து வருகிறார்கள்.

மனித இனத்துக்கு மிகவும் நெருக்கமான குரங்கிடம் மூலிகை பற்றிய அறிதல் நிறையவே உள்ளது. கருவுற்ற குரங்குகள் அருகம்புல்லை நிறைய பறித்துத் தின்று கொண்டு இருப்பதை நேரில் பார்த்துள்ளோம். குரங்குகள் ஏதேனும் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டால் ‘சின்னி’ எனும் மூலிகை இலைகளை உண்கின்றன. இந்த மூலிகைதான் ‘காணாக்கடி’க்கு (இன்னவென்று அறியாத விஷக்கடி) கைகண்ட மருந்து. இப்படி அனைத்து உயிரினங்களுக்கும், மூலிகை மருத்துவம் குறித்த இயற்கை சார் புரிதல், மரபணுக்கள் மூலமாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.

அதனால்தான், உலகின் தொல்குடியான தமிழ்ச்சமூகம் கடந்து வந்த வரலாற்றுப் பாதை நெடுகிலும் தாவரங்களைப் பற்றிய அறிவு விஞ்சி நிற்கிறது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலான தாவரங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. வாழ்வியலின் பல்வேறு கட்டங்களைக் குறிக்கும் திணைகள், ஊர்கள், இசைப்பண்கள் என அனைத்துக்கும் தாவரங்களின் பெயர்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நொச்சி, கரந்தை, உழிஞை, வஞ்சி, காஞ்சி... என அனைத்துமே தாவரங்களின் பெயர்கள்தான். சங்க இலக்கியத்தில் மட்டும் சுமார் 216 தாவரங்களின் பெயர்கள் பேசப்படுகின்றன. அவை அனைத்துமே, சிறந்த மருத்துவப் பண்புடைய மூலிகைகள்.

நல் மருந்து - 1

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இந்தத் தாவரம் இந்த வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை.

கிராமங்களில் நெல் வயல்களில் மட்டுமே கிட்டத்தட்ட நாற்பது மூலிகைகள் தானாகவே முளைக்கின்றன. நாம் அவற்றைக் களைச்செடிகளாகத்தான் பார்க்கிறோம். அப்படி முளைப்பவற்றில்... கீழாநெல்லி, மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். கரிசாலை, ஈரலைக் காக்கும். கொடுப்பை, கண்களைக் காக்கும். பொடுதலை, பொடுகை நீக்கும். கரந்தை கரப்பானை குணமாக்கும். நீர் முள்ளி, நீரைப் பெருக்கும். நாயுருவி, பற்களை இறுக்கும். ஆவாரை, சர்க்கரை நோயை அகற்றும். சீந்தில் நலிந்த உடலினைத் தேற்றும். இப்படி ஒவ்வொரு  மூலிகையின் குணத்தையும் கண்டறிய நமது முன்னோர் எவ்வளவு பரிசோதனைகளைச் செய்திருப்பார்கள் என்று ஒருபோதும் நாம் எண்ணிப் பார்த்ததில்லை.

இந்தப் பரிசோதனைகள் அனைத்துமே நேரடியாக மனிதர்களில் நடத்தப்பட்டவை. பரிசோதனையின் முடிவுகளை, பாடல்களாக எழுதி இறைவனுக்கு அர்ப்பணித்துப் பதிவு செய்து வைத்துள்ளனர், முன்னோர். அதோடு, பாமரருக்கும் புரியுமாறு பழமொழிகளாகவும், சொலவடைகளாகவும் சொல்லி வைத்துள்ளனர். இப்படிப் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்த அறிவுச்செய்திகள், கடந்த மூன்று தலைமுறைகளில் தடைப்பட்டுவிட்டன. அதாவது, 1960-ம் ஆண்டுக்குப் பிறகு, முற்றிலுமாகத் தடைப்பட்டுவிட்டது. தற்போது கடந்த 10 ஆண்டுகளில்தான் மீண்டும் மூலிகை அறிவியல் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

காய்ச்சல், சளி போன்ற வியாதிகளுக்கு எல்லாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததில், நோய் பரப்பும் கிருமிகளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான தகவமைப்பைப் பெற ஆரம்பித்துவிட்டன. அதனால்தான், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், டெங்கு... எனப் பலவித காய்ச்சல்களும் படையெடுத்து வருகின்றன. இதுபோன்ற சமயங்களில் கைகொடுத்தவை நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புச்சாறு போன்றவைதான்.

சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வில் இருந்தும் பாடங்கற்று வளர்க்கபபடுவதுதான் மூலிகை மருத்துவத்தின் சிறப்பு. இம்மருத்துவ மரபு முழுக்க, முழுக்கப் பாமர, பாட்டாளி மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. எந்த ஒரு தனிக் கூட்டமோ, தனிக் குழுமமோ, இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. மக்களுக்கான மூலிகை மருத்துவ அறிவியலின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்து... அதே மருந்துகளை மக்களுக்கு அந்நியமான மொழியில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள்தான் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

1980-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஓலைச்சுவடிகளில் இருந்த மருத்துவ நூல்கள் அச்சுக்கு வர ஆரம்பித்தன. அப்படி வரும்போது, தவறான புரிதலால் இடைச்செருகல்களும் பெருக ஆரம்பித்தன. அதனால் பல தவறான மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் மக்களிடையே பரவிவிட்டன. தற்போது அப்படிப்பட்ட மிகையான கருத்துகள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன. ஆனால், மூல நூல்களைக் கொண்டு பெறப்படும் செய்திகளே உண்மையாகவும், அறிவியலுக்கு உட்பட்டும் இருப்பவை. அப்படி மூல நூலில் இருக்கும் விஷயங்களைத்தான் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இங்கு எழுதப்படும் விஷயத்தைக் கொண்டு அனைவருமே சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இவற்றை நடைமுறைப்படுத்த வீட்டுக்கொரு மூலிகைத் தோட்டமும் அஞ்சறைப்பெட்டியும் அவசியம். அடுத்த இதழில் ஆடாதொடை மூலிகை குறித்துப் பார்ப்போம்.

- வளரும்

மைக்கேல் செயராசு

நல் மருந்து - 1திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.