மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!

ம்ம ஊர்ல ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தா போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில முன்னேறிடும்னு சொல்வாங்க. ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் அபரிமிதமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’னு ஏறத்தாழ இதே அறிவுரையைக் கியூபா நாட்டோட முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன்னோட நாட்டு மக்களுக்குச் சொல்லியிருக்காரு. உலக வல்லரசுன்னு சொல்ற அமெரிக்காவுக்குச் சிம்மசொப்பனமா இருந்தவர்தான் கியூபா மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ.

உலக அளவுல இயற்கை விவசாயத்துல கியூபாதான் முன்னணியில நிக்குது. வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுலையும், இவங்கதான் முன்னோடி. ஆனா, இப்போ, கியூபா நாடு முழுக்க வீட்டுக்கு வீடு முருங்கை மரத்தை வளர்க்கச் சொல்லி, அரசாங்கமே அறிவிச்சிக்கிட்டிருக்கு. முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, ஹவான்னாவுல இருக்குற தன்னோட வீட்டுத் தோட்டத்துல முருங்கை மரத்தை சாகுபடி செஞ்சிருக்காரு. தினமும் முருங்கை மரத்தைப் பராமரிக்கிற வேலையும், இவரே செய்யுறாரு. இத்தனைக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு, இந்த ஆகஸ்ட் 13-ம் தேதியோட 90 வயது ஆகுதுங்க. இப்போ இந்திய முருங்கையோட புகழ் பாடுறதுக்குப் பின்னாடி, ஒரு முக்கியச் சம்பவம் இருக்கு.

கியூபாவுக்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவுப் பகுதியில 2010-ம் வருஷம் பெரிய பூகம்பம் ஏற்பட்டுசக்சு. இதனால லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டாங்க. பக்கத்து நாட்டுல நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடனே, ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவுல உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி வெச்சாரு. உதவி செய்யப் போனவங்க, உடனே ஒரு செய்தி அனுப்புனாங்க. அதுல ‘‘இங்க பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் இறந்துட்டாங்க. கூடவே, காலரா நோயும் வேகமா பரவிக்கிட்டிருக்கு’’னு சொன்னாங்க. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவுல உள்ள மருத்துவத் துறைத் தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் வரச் சொல்லி அவசரக் கூட்டம் போட்டிருக்காரு.

மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!

ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய் தாக்காம இருக்க என்ன வகையான மருந்து கொடுக்கலாம்னு மணிக்கணக்குல கூட்டம் போட்டுப் பேசியிருக்காரு.

அப்போ, இந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்ட பின்லே இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) என்கிற மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கு’னு சொல்லியிருக்காங்க.

‘அந்த மருந்துப் பொருள் எங்க இருக்கு, எப்படி வாங்கலாம் சொல்லுங்கன்னு’ கேட்டிருக்காரு. இந்தியாவுல உள்ள முருங்கை இலைக்குத்தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்குற திறனும் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. இந்தியானு பேரைக் கேட்டவுடனே, காஸ்ட்ரோவோட கண்ணுங்க விரிஞ்சிருக்கு. ஏன்னா, அவருக்கு இந்தியா மேல எப்பவும் தனிப் பாசம் உண்டு. டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. காரணம் பல வருஷமா யோகா செஞ்சி பலன் அடைஞ்சிருந்தாங்க. இதனால, இந்தியா மேல, இவங்களுக்கு கூடுதல் பாசம் இருந்துச்சு.

ஆனா, இந்தக் காலகட்டத்துல ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவோட அதிபர் கிடையாது. அதிகாரம் இல்லாம இருந்தா என்ன? உதவி செய்ய மனசு போதுமே. உடனே, டாக்டர் கெம்பா ஹெர்கோவை இந்தியாவுக்கு அனுப்பி வெச்சாரு காஸ்ட்ரோ.

இந்த டாக்டர் அம்மா முதல்ல, தமிழ்நாட்டுக்குத்தான் வந்து இறங்குனாங்க. முருங்கை சாகுபடி, மருத்துவப் பயன்பாடுனு நிறைய தகவல்களை சேகரிச்சாங்க. அடுத்தபடியா, ஆந்திரா, கேரளாவுக்கும் சுற்றுப் பயணம் போயி முருங்கைத் தகவலை அள்ளிக் கிட்டாங்க, கியூபாவுக்குப் போகும்போது இந்திய முருங்கைச் செடிகளையும் மறக்காம எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஹைட்டி தீவு மக்களுக்கு, நோய் தாக்குன மக்களுக்கு முருங்கைக் கீரைகளை இறக்குமதி பண்ணி, கொடுத்திருக்காங்க. காலரா நோயும் கட்டுக்குள்ள வந்திருக்கு. இந்தத் தீவு மக்களுக்கும் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து, கீரை சாப்பிடச் சொல்லியிருக்காங்க.

அந்த டாக்டர் அம்மா எடுத்துக்கிட்டுப் போன முருங்கைச் செடிங்கதான், காஸ்ட்ரோ வீட்டுத்தோட்டம் தொடங்கி, கியூபா முழுக்க வளர்ந்து நிக்குது. ‘‘என்னுடைய ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்புக்கும் இந்திய முருங்கைக் கீரைதான் காரணம்’’னு வாய் நிறையப் புகழ்ந்து சொல்லிக்கிட்டிருக்காரு, இந்த 90 வயசு இளைஞர் ஃபிடல் காஸ்ட்ரோ.