மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!

மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு  தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு  தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!

டிக்கொண்டிருந்த பம்ப்செட் மோட்டார் திடீரென்று நின்றுவிட்டதால் ‘ஸ்விட்ச்’ பெட்டியில் மின் இணைப்பைப் பரிசோதித்துக்கொண்டிருந்தனர், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும். வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, ‘‘என்னய்யா செஞ்சுக்கிட்டு இருக்கீங்க’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

‘‘ஃபியூஸ் போயிடுச்சு போல... அதுதான் சரி பண்ணிட்டு இருக்கோம்’’ என்ற வாத்தியார், சில நிமிடங்களில் ஃபியூஸ் வயரை சரிசெய்ய, மோட்டார் ஓட ஆரம்பித்தது. மூவரும் மோட்டார் அறையின் அருகிலேயே அமர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு தொடங்கியது.

‘‘இந்தக் காவிரி பிரச்னைக்குத் தீர்வே கிடையாதாய்யா?’’ என்று கேட்டார், காய்கறி.

‘‘அரசியல் வியாதிங்கதான் இந்தப் பிரச்னையைப் பெருசுப்படுத்திட்டு இருக்காங்க. இதுல அரசியல் பண்ணுறதை நிறுத்திட்டா பிரச்னை தீர்ந்துடும். 2003-ம் வருஷம் ‘காவிரிக் குடும்பம்’னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சிருந்தாங்க. அந்த அமைப்புல தமிழ்நாடு, கர்நாடகா ரெண்டு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசுத்துறைகள்ல வேலை செஞ்சு ஓய்வுபெற்ற அதிகாரிகள், விவசாயச் சங்க பிரதிநிதிகள்னு நிறைய பேர் உறுப்பினரா இருந்தாங்க. இவங்களே, அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரோட இருப்பைப் பார்த்து, அதுக்கான பயிரை பரிந்துரை செய்வாங்க. அதேமாதிரி அரசியல் குறுக்கீடு இல்லாம தண்ணீரைப் பகிர்ந்துக்கிற   முடிவையும் எடுத்துட்டு இருந்தாங்க. ஆனா அதைக் கொஞ்ச நாள்கூட ரெண்டு மாநில அரசியல்வாதிகளும் நீடிக்கவிடலை. அதுல தலையிட்டு ஒரு வழி பண்ணி விட்டுட்டாங்க. இப்போ கர்நாடக மாநிலத்துல அரசியல்வாதிகள் பண்ற கூத்தைப் பார்த்துட்டு, திரும்பவும் காவிரிக் குடும்பம் அமைப்பை அமைக்கலாம்னு, அந்த மாநில விவசாயிகள் ஆசைப்படுறாங்க.

சர்வோதயா கர்நாடகா கட்சி சார்பா சட்டமன்ற உறுப்பினரா இருக்குற புட்டணய்யா, அந்த மாநில கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவராவும் இருக்கார். அவர் இது சம்பந்தமா கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாகிட்ட பேசினப்போ, அவரும் காவிரிக் குடும்பம் அமைக்கிறதுக்கு ஒப்புதல் கொடுத்துட்டாராம். அதனால சீக்கிரம் அந்த அமைப்பு உருவாகறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்படி அமைஞ்சா இந்தப் பிரச்னை ஓரளவு தீரும்’’ என்றார், வாத்தியார்.

அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, ‘‘ஆகஸ்டு 31-ம் தேதி அன்னிக்கு சட்டசபையில பேரவை விதி 110-ன் கீழ் ‘வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டம்’ குறித்துப் பேசின முதலமைச்சர் சில சலுகைகளை அறிவிச்சிருக்காங்க. நடப்பு ஆண்டுல வேளாண் எந்திரங்களை வாங்குறதுக்காக, 31 கோடியே 6 லட்சம் மானியம் வழங்கப்படும்னு சொல்லியிருக்காங்க. வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படுற இந்தத் திட்டத்துல நெல் நாற்று நடவு செய்யும் எந்திரம், பவர் டில்லர், சுழற்கலப்பை, குழி தோண்டும் கருவி, களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம், தீவனம் வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி, டிராக்டர்ல சேர்த்து இயக்குகிற கருவிகள்னு எல்லாத்துக்கும் மானியம் உண்டு.

சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகள், பெண் விவசாயிகள் அனைவருக்கும் 50 சதவிகித மானியம் உண்டு. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படுற எந்திரங்கள், கருவிகளை வேளாண் பொறியியல் துறை மூலம் அங்கீகாரம் வாங்கியிருக்குற நிறுவனங்கள்ல, அவங்களே தேர்வு செய்துக்க முடியும். மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்துல அதுக்கான விண்ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி  செஞ்சு தேவையான ஆவணங்களோட கொடுத்தா, முன்னுரிமை அடிப்படையில் ஒப்புதல் கொடுப்பாங்க. அதுக்கப்புறம் முழுத்தொகையையும் செலுத்தி கருவியை வாங்கிய பிறகு, விவசாயியோட வங்கிக் கணக்குல மானியத்தை வரவு வைப்பாங்க’’ என்றார்.

கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு சீத்தாப் பழங்களை எடுத்துக்கொடுத்தார், காய்கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“பருவமழை ஆரம்பிக்கிற காலங்கிறதால மத்திய அரசு நிதியுதவி மூலமா, இப்போ ஆடு மாடுகளுக்குக் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்குறாங்க. ஆனா, அந்த ஊசி போட்டும் பிரயோஜனமில்லைனு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கு. அந்தத் தடுப்பூசி மருந்து தரமில்லாம இருக்கறதுதான் காரணமாம். முன்னாடி ‘இந்தியன் இம்யூனோலாஜிகல் லிமிடெட்’ங்கிற கம்பெனிலதான் இந்தத் தடுப்பு மருந்தை வாங்கிட்டு இருந்திருக்காங்க. இந்த வருஷம் அதை நிறுத்திட்டு வேற சில கம்பெனிகள்கிட்ட வாங்கிட்டு இருக்காங்களாம். அந்த மருந்துகள்தான் தரமில்லாம போலி மருந்துகளா இருக்குதாம். அதில்லாம 100 மில்லி இருக்கவேண்டிய பாட்டில்ல 90 மில்லி மருந்துதான் இருக்குதாம். தடுப்பூசி போட்ட ஆடு  மாடுகளுக்கு வேற சில பக்க விளைவுகளும் ஏற்படுதாம். தமிழ்நாட்டுல ஆறு மாசத்துக்கு ஒருமுறை கிட்டதட்ட ஒரு கோடி ஆடு, மாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுதாம். இப்போ அத்தனை ஆடு மாடுகளோட நிலையும் கேள்விக்குறியாகி இருக்குதாம்’’ என்றார்.

அந்த நேரத்தில் மோட்டாரில் இருந்து ‘கரகர’வெனச் சத்தம் கேட்க... “தண்ணி குறைஞ்சுடுச்சு போல. மோட்டாரை நிறுத்திட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து ஓட, அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.  

60 லிட்டர் தயிர் கிடைப்பது எப்படி?

பசுமை விகடன் 25.9.16 தேதியிட்ட இதழில், 28-ம் பக்கம் ‘25 ஏக்கர்... மாதம் ரூ.11 லட்சம் லாபம்’ கட்டுரை இடம் பெற்றிருந்தது. ‘தினமும் 1,000 லிட்டர் பால்’ என்ற பெட்டிச் செய்தியில் ‘‘30 லிட்டர் பால் மூலம் 60 லிட்டர் தயிர் உற்பத்தி செய்கிறோம்’’ என்று வெளியாகி உள்ளது. ஆனால், ‘‘30 லிட்டர் வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், 30 லிட்டர் வெண்ணெய் எடுக்காத பால்னு ரெண்டையும் கலந்து 60 லிட்டர் தயிர் உற்பத்தி பண்றோம்’’ என்பதுதான் சரியான தகவல். தவறான தகவல் இடம் பெற்றமைக்கு வருந்துகிறோம்.

-ஆசிரியர்