குறைந்த விலையில் மரக் கன்றுகளைத் தரும் கிராமங்கள் ! புறா பாண்டி படங்கள்: வீ. சிவகுமார்
##~## |
''நன்னாரி மூலிகை சாகுபடி மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றிய தகவல்கள் கிடைக்குமா?''
டி. லோகநாதன், கோவை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். கே. ராஜாமணி பதில் சொல்கிறார்.
''நன்னாரி மூலிகையை நமக்கு சர்பத் மூலம்தான் தெரியும். ஆயுர்வேதத்தில் நன்னாரியை 'சாரிப' என்று குறிப்பிடுவார்கள். அதிலிருந்து உருவான சொல்தான் 'சர்பத்'. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நன்னாரி, ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ஹெமைடிஸ்மஸ் இன்டிகஸ் (HEMIDESMUS INDICUS)
அதிக குளிர்ச்சித் தன்மையுடையது என்பதால்தான் கோடைக் காலங்களில் நன்னாரி சர்பத் என்ற பெயரில் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் சர்பத்... 'பெரு நன்னாரி’ என்றழைக்கப்படும் மாகாளி கிழங்கிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. வாசனை ஒன்றுபோல இருப்பதாலும், தேவையான அளவுக்கு நன்னாரி மூலிகை கிடைக்காத காரணத்தாலும்தான் பெரு நன்னாரியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நன்னாரியில் உள்ள மருத்துவக் குணம், பெரு நன்னாரியில் கிடையாது.

செம்மண் சார்ந்த மலைப்பகுதிகளில் இயற்கையாக வளர்ந்திருக்கும் நன்னாரி வேரைச் சேகரித்துதான் விற்பனை செய்கிறார்கள். பச்சை நன்னாரி வேர் கிலோ 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. தேவை அதிகம் இருந்தும், இதன் விலை குறைவாக இருப்பதால்... இதை யாரும் தனிப்பயிராக சாகுபடி செய்வதில்லை. குறைந்தபட்சம் கிலோ 50 ரூபாய் அளவிலாவது விற்பனையானால்தான் ஓரளவுக்குக் கட்டுப்படியாகும். ஆனால், எதிர்காலத்தில் இம்மூலிகைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கும். அதனால், இப்போதே நன்னாரி சாகுபடி செய்ய திட்டமிடுவது நல்லது. செம்மண் நிலங்களில் இது நன்றாக வளரும். இது பற்றிய தகவல்களுக்கு எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3 தொலைபேசி: 0422-6611365.
''நல்ல பால் கறவைத்திறன் கொண்ட சாஹிவால், கிர்... போன்ற நாட்டு மாடுகளின் உயிர் அணுக்கள் எங்கு கிடைக்கும்? செயற்கை முறை மூலம் கருவூட்டல் செய்தால், கன்றுகள் நன்றாக வளருமா?''
க. தனராஜ், மசக்காளிப்பட்டி.
நாட்டுமாடு இனங்களுக்கான பாதுகாப்பில் அக்கறை காட்டி வரும் மதுரை சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பி. விவேகானந்தன் பதில் சொல்கிறார்.
''சாஹிவால், கிர், தார்பார்க்கர்... போன்ற நம் நாட்டு இன மாடுகள் தமிழ்நாட்டின் கால நிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டவை. இந்த இன மாடுகள் அதிகபட்சம் 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். இவற்றுக்கு நோய் தொற்றும் ஏற்படாது. இந்த இனங்களின் உயிர் அணுக்களை, தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகளான காங்கேயம், உம்பளாச்சேரி போன்ற பசுக்களில் கருவூட்டல் செய்யலாம். இதன் மூலம் பிறக்கும் கன்றுகளுக்கும் கூடுதல் பால் கொடுக்கும் திறன் இருக்கும். அதிகப்பால் கொடுக்கும் வெளிநாட்டு இனங்களுடனும் கருவூட்டல் செய்து நோய், நொடி தாக்காத வலுவான கன்றுகளை உருவாக்கலாம்.

கேரளாவில் 'கேரளா கால்நடை வளர்ச்சி முகமை’ என்ற அரசு அமைப்பு சாஹிவால், கிர் போன்ற மாடுகளின் உயிர் அணுக்களை ஸ்ட்ரா வடிவில் மிகவும் குறைந்த விலைக்குக் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அவை விலைக்கு கிடைக்கின்றன. ஒரு ஸ்ட்ராவின் விலை 22 ரூபாய்.''
தொடர்புக்கு: கேரளா கால்நடை வளர்ச்சி முகமையின் தமிழ்நாடு முகவர், செல்போன்: 94433-66336.
''மஞ்சுளா என்ற கரும்பு ரகம் முன்பு அதிக அளவுக்கு பயிர் செய்யப்பட்டது. இப்போது அந்த ரகம் கிடைக்குமா? எங்கு கிடைக்கும்?'
ஆர். கணபதி, திருவண்ணாமலை.
கோயம்புத்தூர், கரும்பு இனப்பெருக்கு மையத்தின், பயிர் வளர்ச்சித் துறையின் தலைவர் முனைவர். எம். என். பிரேம்சந்திரன் பதில் சொல்கிறார்.
''மஞ்சுளா என்று அழைக்கப்படும் 'கோசி-671’ ரகம், முன்பு அதிகளவு பயிர் செய்யப்பட்டது. இந்த ரகக்கரும்பு கடினமாக இருப்பதால் எலி, அணில்... போன்றவற்றால் சேதம் ஏற்படாது. அதனால் விவசாயிகள் அதிகளவில் இந்த ரகத்தை சாகுபடி செய்து வந்தார்கள். காலப்போக்கில் இந்த ரகத்தில் 'செவ்வழுகல் நோய்’ மற்றும் வைரஸ் கிருமிகளின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டதால், பல விவசாயிகள் இந்த ரகத்தைக் கைவிட்டனர்.
எங்கள் மையத்தின் மூலம் ஆராய்ச்சிகள் செய்து திசு வளர்ப்பு முறை மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட கரும்புக் கரணைகளும் இந்த நோய்களுக்குத் தப்பவில்லை. ஆனாலும் இந்த நோய்களின் தாக்குதல் ஏற்படாத பகுதிகளில் இருந்து தரமான கரணைகளை வாங்கி பயிர் செய்யலாம். எங்கள் மையத்திலேயே அத்தகையக் கரணைகள் கிடைக்கின்றன.''
தொடர்புக்கு: கரும்பு இனப்பெருக்கு மையம், கோயம்புத்தூர்-641007. தொலைபேசி: 0422-2472621.
''எங்கள் குடும்பத்தில் நடக்கவுள்ள திருமணத்தில் 1,000 மரக்கன்றுகள் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். குறைந்த விலையில் மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?''
தே. கலியபெருமாள், பொன்மலை.
புதுக்கோட்டை மாவட்டம், கல்லக்குடி இருப்பு நர்சரி சங்கத்தைச் சேர்ந்த செல்லையா பதில் சொல்கிறார்.
''எங்கள் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 200 நர்சரிகள் உள்ளன. இங்கு மா, கொய்யா, மாதுளை, பலா, சப்போட்டா... என்று சகலவிதமான மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்து வருகிறோம். மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய ஆகிற செலவை மட்டும்தான் விலையாக வைத்துள்ளோம். இந்தப்பகுதிகளில், ஆச்சரியப்படும் வகையில் குறைந்த விலையில் கன்றுகள் கிடைக்கும். 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரைதான் கன்றுகளின் விலை இருக்கும்.

குறைந்த விலையில் கிடைப்பதால், தரம் இருக்காது என்று நினைக்க வேண்டாம். வனத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகள் இந்தப்பகுதிகளில்தான் கன்றுகளை வாங்குகின்றன. தனியார் நர்சரி உரிமையாளர்கள் எங்களிடம் இருந்து மொத்தமாக கன்றுகளை வாங்கிச் சென்று வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்தும் வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தினரும் எங்கள் கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள்.
தற்சமயம் திருமண வீடுகளில் மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுக்கும் நல்ல பழக்கம் பரவி வருகிறது. எந்தப் பகுதியில் திருமணம் நடக்கிறது என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தபடி கன்றுகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். கிராமப் பகுதியாக இருந்தால் பழக்கன்றுகளையும், நகரம் சார்ந்த பகுதியாக இருந்தால் மலர் செடிகளையும், தூசுகளை இழுக்கும் பலா கன்றுகளையும் வழங்குவது நல்லது.''
தொடர்புக்கு, செல்போன்: 99428-18629.
''மீன் வளர்ப்பு சம்பந்தமான புத்தகம் எங்கு கிடைக்கும்?''
கே. ரமேஷ், திட்டக்குடி.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், மீன் வள விரிவாக்க மையம் சென்னை அருகே உள்ள மாதவரம் பால் பண்ணையில் உள்ளது. இங்கு மீன் வளர்ப்பு குறித்த புத்தகம் கிடைக்கும். பல வகையான மீன் வளர்ப்பு குறித்து பயிற்சிகளும் கொடுத்து வருகிறார்கள்.
தொடர்புக்கு: தொலைபேசி: 044-25556750.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை'
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.