
நேரடி விற்பனையில் நல்ல லாபம்!துரை.நாகராஜன் - படங்கள்: உ.கிரண்குமார்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’.
‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனத்தில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.
ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்... திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையில் உள்ள கெங்காபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும், முன்னோடி பாரம்பர்ய நெல் விவசாயியும், ஓய்வுபெற்ற பேராசிரியரான முனைவர் மணியின் தோட்டத்துக்கு. ஒருநாள் விவசாயிகள் பயற்சி பெற்றது குறித்து, கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழில்...
“நெல் வயலில் எப்படிக் களை எடுக்குறது?” என்று கேட்டார், செல்வக்குமார்.
“உங்களுக்கெல்லாம் அடுத்த பயிற்சி அதுதான்” என்ற மணி அடுத்த வயலுக்கு அழைத்துச் சென்றார். அந்த வயலில் பணியாளர்கள் களையெடுத்துக் கொண்டிருந்தனர். “அவுங்க செய்றதைப் பார்த்து அதே மாதிரி நீங்களும் களையெடுங்க” என்று மணி சொல்லி முடிப்பதற்குள் அனைவரும் வயலுக்குள் இறங்கிவிட்டனர். “சொட்டையில்லாம களை எடுக்கணும். அப்போதான் சத்து முழுசும் நெல்லுக்குப் போகும். இந்தக் களைகளை அப்படியே நிலத்துக்கு உரமாக்கிடலாம்” என்றார், மணி. களையெடுக்கும் பயிற்சி முடிந்தவுடன் ஒரு நாள் விவசாயிகள் சற்று ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.
ஒரு நாள் விவசாயிகளாக வந்திருந்த பெண்கள் அனைவரும் வயலில் கட்டியிருந்த காங்கேயம்

மாடுகளைப் பிடித்து வந்து கொட்டிலில் கட்டினர். அந்தச் சமயத்தில் மணியின் மருமகன் டாக்டர் பாஸ்கர் தோட்டத்துக்கு வந்தார். அவர்தான் பேராசிரியர் மணிக்கு இயற்கை விவசாயத்தில் உதவி வருகிறார். அவர்கள் அனைவரும் உரையாட ஆரம்பிக்க, ஒரு நாள் விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தனர். மணி, பாஸ்கர் இருவரும் சளைக்காமல் பதில் சொன்னார்கள்.
“மாட்டுப்பண்ணையோட சேர்த்து விவசாயம் செய்யப்போறேன். அதுக்கு என்னவெல்லாம் செய்யணும்னு சொல்லுங்கய்யா” என்று கேட்டார், தேவராஜ்.
அதற்கு பதிலளித்த மணி, “கால்நடை வளர்ப்புக்கு நாட்டு மாடுகளா வாங்கிட்டா எந்த விதமான தொல்லையும் இருக்காது. மாடுகளைக் கட்டிப்போட்டு தீவனம் தரக் கூடாது. அப்படியே கட்டிப்போட்டாலும், கயிற்றை கொஞ்சம் நீளமா விட்டுக் கட்டணும். அப்பத்தான் அது நல்லா நடக்க முடியும். நாட்டு மாடு நடந்து மேஞ்சாத்தான் நோய் வராது. நாலு மாடு இருந்தாலே போதும் இயற்கை விவசாயம் செய்யுறது ரொம்ப சுலபமாகிடும்” என்றார்.
அடுத்த கேள்வியை எடுத்து விட்டார், சின்னமுனியாண்டி. “நான் எங்க ஊர்ல இருக்குற நிலத்துல விவசாயம் செய்யலாம்னு இருக்கேன். எப்படி பயிரைத் தேர்வு செய்றது?” என்றார்.
அவருக்கு பதில் சொன்ன பாஸ்கரன், “மண்ணின் தன்மையை ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துட்டு அதுக்கேத்த பயிரை சாகுபடி செய்யலாம். பொதுவா காய்கறிகளைச் சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலத்த பயன்படுத்தியே நல்ல மகசூல் எடுத்துட முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மணி, “முதல்ல மண்ணுல உயிர்ச்சத்தை உண்டாக்கணும். அதுக்கு அப்புறம் விவசாயம் செஞ்சாத்தான் நல்ல பலன் கிடைக்கும். இயற்கை விவசாயத்துல எடுத்த உடனேயே அதிக மகசூல் கிடைச்சுடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மகசூல் அதிகரிக்கும். எந்த விவசாயமா இருந்தாலும் இரண்டு வருஷம் ஈடுபாட்டோட செய்யணும். அதுக்கப்புறம்தான் லாபத்தை எதிர்பார்க்கணும்” என்றார்.
“ஒரு ஏக்கர்ல எவ்வளவு நெல் மகசூலாகும்?” என்று கேட்டார், தேவராஜ்.
“இயற்கை விவசாயத்துல செஞ்சா ஏக்கருக்கு 20 மூட்டை (80 கிலோ) அளவுக்கு மகசூல்

கிடைக்குது. இதன்படி 1,600 கிலோ அரிசி கிடைக்குது. 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். 1,600 கிலோவுக்கு 96,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதில் 50% லாபமா நிக்குது. அதாவது செலவு 48,000 ரூபாய் போக மீதி 48,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இந்த லாபத்துக்கு மூல காரணம், நேரடி விற்பனைதான்” என்று தனது வருமான விவரங்களை விவரித்தார், மணி.
தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நெல் சாகுபடி, இயற்கை விவசாயம், கோழி வளர்ப்பு, மரங்கள் சாகுபடி எனப் பல விஷயங்களை மணியிடமும், பாஸ்கரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டனர், ஒரு நாள் விவசாயிகள்.
கேள்வி நேரம் முடிந்ததும், அனைவரும், தங்கச் சம்பா என்ற பாரம்பர்ய ரக அரிசியில் சமைத்த சாதம், சிறுதானியப் பாயசம், நாட்டு வாழைப்பழம், முட்டைக்கோஸ் கூட்டு, பொறியல்... என மதிய உணவை ருசித்தனர். உண்ட களைப்பில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாலும், ஒரு நாள் விவசாயிகள் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. அனைவருக்கும் பொறுமையாக பதிலளித்தார், மணி.
அடுத்து, பால் கறப்பது குறித்து விளக்கினார், மணி. தொடர்ந்து வெட்டிவேர் சாகுபடி செய்திருந்த நிலத்துக்கு அழைத்துச் சென்று, வெட்டிவேர் குறித்தும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் விளக்கினார்.
அதன் சந்தை வாய்ப்பு குறித்து தேவராஜ் கேட்க, “சந்தையில் வெட்டிவேருக்கு நல்ல கிராக்கி இருக்கு. விற்பனை செய்றதும் சுலபம். ஆர்கானிக் கடைகள்ல கூட இதை வாங்குறாங்க” என்றார்.
அடுத்து சவுக்குத் தோப்புக்கு அழைத்துச் சென்ற மணி, “சவுக்கு மரங்களுக்கு ஆரம்பத்தில் தண்ணி கொடுத்து காப்பாத்திட்டா போதும், அப்புறம் தானாவே வளர்ந்திடும். இதெல்லாம் நாட்டுச் சவுக்கு மரங்கள்” என்றார். அடுத்து அனைவரும் சென்ற இடம் ஆப்ரிக்கன் தேக்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலம்.
“தேக்கு மரத்துக்கு அடியுரம் ரொம்ப முக்கியம். இதில் விழும் இலைகளை அப்படியே மூடாக்காகப் போட்டிருவேன். அதனால மண்ணுல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். ஆப்பிரிக்கன் தேக்கு கிளை விடாமல் நேராக வளரக்கூடியது. இந்த மரங்களை நட்டு வெச்சு பந்தல் விவசாயம் கூட செய்யலாம்” என்றார். அனைத்தையும் சுற்றிப்பார்த்து முடிப்பதற்குள் மாலை நெருங்கிவிட... அனைவருக்கும் தேநீர் கொடுத்தார், மணி. அதைப் பருகிய பிறகு அனைவரும் விடைபெற்றனர்.
தொடர்புக்கு,
முனைவர் மணி,
செல்போன்: 96294 66328.
ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!

சின்ன முனியாண்டி, மனிதவளத்துறை அதிகாரி, சென்னை: “எல்லாமே புதுசா இருந்தது. விவசாயம் பண்ணலாம்ங்குற முடிவுக்கு வந்துருக்கேன். இந்த ஒருநாள் விவசாயி பயணம் ஓர் அருமையான அனுபவம்.”

வைத்தீஸ்வரன், வங்கி அதிகாரி, சென்னை: “இயற்கை விவசாயம் குறித்து நிறைய தகவல்களை நேரடியா தெரிஞ்சுகிட்டேன். இந்த நாள் மிகவும் அருமையான நாளாக அமைந்தது. இதனை ஏற்பாடு செய்த பசுமை விகடனுக்கு மிக்க நன்றி.”

ரக்ஷனா, கல்லூரி மாணவி, சென்னை: “எங்களை மாதிரி காலேஜ்ல படிக்கிறவங்களுக்கும் விவசாயத்துல ஆர்வமிருக்கு. நான் பத்திரிகைத் துறை குறித்துப் படிக்கிறேன். எனக்கு இந்தப் பயிற்சி ரொம்பவே உபயோகமாக இருந்தது. தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகவே ஒரு பயிற்சியை பசுமை விகடன் ஏற்பாடு பண்ணணும்.”

செல்வக்குமார்-ஆர்த்தி தம்பதி, சென்னை: “மிகவும் நன்றாக இருந்தது. இதற்குத்தான் இவ்வளவு நாளாக காத்துக்கிட்டு கிடந்தோம். எங்களுக்குச் சுத்தமா எதுவும் தெரியாது, வயலில் வேலை செய்யுறப்போதான் விவசாயியோட கஷ்டம் புரிஞ்சது. எங்க முப்பாட்டன் காலத்துக்கு போன மாதிரி இருந்தது. கண்டிப்பா விவசாயியா மாறிடுவேன்ங்கிற நம்பிக்கை இருக்கு. முறையான விவசாயத்தை அறிமுகப்படுத்திய பசுமை விகடனுக்கு நன்றி.”

தேவராஜ், தனியார் நிறுவன மேலாளர், திருவள்ளூர்: “இந்த நாள் ரொம்ப உபயோகமா இருந்தது. என் தாத்தாகாலத்துக்கே போனமாதிரியான உணர்வு இருந்துச்சு. விவசாயத்துல இது புது அணுகுமுறை.”

காவ்யா, கல்லூரி மாணவி, சென்னை: “எனக்கு பொதுவாவே விவசாயத்தின் மேல ஆர்வம் அதிகம். ஆனா, காலேஜ்ல படிக்கிறப்போ இந்த வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கலை. ஒருநாள் வயல்ல இறங்கினதே ரொம்ப சந்தோசமா இருக்கு.”
நீங்களும் ஒருநாள் விவசாயி,ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை சனி, ஞாயிறு விடுமுறை) மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.
பண்ணையின் சிறப்புகள்
* 25 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் ரககள்.
* 40 நாட்டு மாடுகள்.
* கோழி, புறா, வாத்து வளர்ப்பு.
* பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு.
* இயற்கை இடுபொருள் தயாரிப்பு.
* மரப்பயிர்கள் சாகுபடி.
* வெட்டிவேர் சாகுபடி.
-பயணம் தொடரும்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா? ‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை) மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.