மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!

மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!

‘‘ஆன்மிகத்துக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம்..? நாட்டுல இருக்கிற எல்லா சாமியாருங்களும், மரம் வளர்க்கிறோம், மாடு வளர்க்கிறோம், இயற்கை விவசாயம் செய்றோம்,
ஜீரோபட்ஜெட் பயிர் சாகுபடி செய்றோம்னு சொல்றாங்க’’னு அந்த நண்பர் நீளமான கேள்வியைக் கேட்டாரு.

ஆன்மிகத்துக்கும் விவசாயத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு. அந்தக் காலம் தொடங்கி, இந்தக் கால கார்ப்பரேட் சாமியார்கள் வரையிலும், தங்களோட ஆசிரமத்துல விவசாயம் செய்யறதை வழக்கமா வெச்சிருக்காங்க. இது நம்ம நாட்டுல மட்டுமில்ல, உலக அளவுல பிரபலமான புத்த மதத்தைச் சேர்ந்த ஜென் துறவிகள் மத்தியிலும் செடி கொடிகளை வளர்க்கிறது கலையாவே வளர்ந்திருக்கு. ஜென் துறவிங்க உருவாக்குற தோட்டத்துக்கு, ஜென் தோட்டம் (Zen Garden)னு பேரு. இந்த ஜென் தோட்டத்தைப் பல்கலைக்கழகத்துல படிச்சுட்டு வந்து போட முடியாது. இயற்கையை நேசிக்கும்போது, உருவாகுற அன்பு வெளிப்பாட்டு மூலமாத்தான் இந்த ஜென் தோட்டத்தை உருவாக்க முடியும். ஜென் புத்த மதப் பிரிவை, நம்ம காஞ்சிபுரத்துல இருந்து, சீனாவுக்குப் போன போதி தர்மர்தான் உருவாக்குனாரு. தியானம்ங்கிற சொல்தான் சீனா, ஜப்பான்காரங்க வாயில இருந்து வரும்போது, ‘ஜென்’னு உருமாறியிருக்கு. நம்ம ஊர்ல சித்தர் கதைகள் மாதிரி, ஜப்பான் நாட்டுல ஜென் கதைகள் பிரபலம்.

டோக்குசான்கிற ஜென் குரு (மாஸ்டர்) மூலிகையைப் பறிக்க மலைப்பகுதிக்குப் போனாரு. குன்று மேல அழகான சின்னக் குடிசை இருந்திருக்கு. அந்தச் சுற்றுவட்டாரத்துல வேற எங்கும் வீடுங்க இல்ல. இயற்கை சூழ்ந்த அந்த இடத்துல ஒரு ஞானம் அடைஞ்ச துறவிதான் இருப்பாருனு டோக்குசான் நினைச்சாரு. ‘இவ்வளவு தூரம் வந்துட்டோம், அந்த ஞானியைப் பார்த்துடலாம்’னு, அந்த வீட்டுக்குப் போய், கதவைத் தட்டினாரு.

உடனே வயதான ஒரு பாட்டி கதவைத் திறந்திருக்காங்க. ஜென் துறவிக்கு ஆச்சர்யம். உடனே அவர், “அம்மா, இந்த இயற்கை சூழ்ந்த வீட்டில் நீங்கள் மட்டும்தான் உள்ளீர்களா?’’னு கேட்டாரு.

“அய்யா, நான் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறேன். எனது தோட்டத்தில், விதவிதமான காய்கறிகளை விளைவிக்கிறேன். அந்தச் சுவையான, சத்தான காய்கறிகளைப் பக்கத்து ஊரில் கொண்டு சென்று விற்கிறேன். என்னோட உழைப்பிலும் இயற்கையோட கருணையிலும் விளைந்த காய்கறிகளை மக்கள் பசியாறும்போது, எனக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் உருவாகுது’’னு அந்தப் பாட்டி பூரிப்பா பதில்  சொன்னாங்க.

தன்னோட காய்கறித் தோட்டத்தைத் துறவிக்கு ஆசையாய் சுத்திக்காட்டினாங்க அந்தப் பாட்டி. ஜென் மடாலயத்துல இருக்கிற தோட்டம் போல, அழகாவும் பசுமையாவும் இருந்துச்சு பாட்டி தோட்டம்.

பசுமையான காய்கறிகளைப் பறிச்சு வந்து, ஜென் குரு சுவையான விருந்து வெச்சாங்க பாட்டி.

பாட்டி இவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறதைப் பார்த்து ரொம்பவே ஆச்சர்யமானாரு, ஜென் குரு.

‘‘தோட்டத்தில் வேலை முடிந்தவுடன், ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?’’னு சூப்பைக் குடிச்சுக்கிட்டே கேள்வியைக் கேட்டாரு ஜென் குரு.

‘‘காற்றின் வேகம், மழையின் ஓசை, நிலவின் அழகு, சுவர்க் கோழியின் சத்தம் என, என்னைச் சுற்றி உள்ள ஒவ்வொன்றையும் ரசிப்பேன்’’னு பாட்டி பளீர்னு பதில் சொல்லியிருக்காங்க.

அறுசுவை உணவு சாப்பிட்டவுடனே, ஜென் குரு, கொஞ்ச நேரம் அமைதியா தியானம் செஞ்சாரு. தியானம் முடிஞ்சு, கண் திறந்த ஜென் குருவோட பாதங்களை வணங்கின பாட்டி, ‘‘இயற்கையின் பேரருளை உணர்ந்து, புத்தரின் வழியில், போதி தர்மரின் வாழ்வியல்படி நடக்கும் ஜென் குரு, இந்தப் படிப்பறிவு இல்லாத, ஆன்மிகம் அறியாத, வயதான பாட்டிக்கு ஜென் போதனைகளையும், புத்தரின் அற உரைகளையும் சொல்லி, நல்வழிப்படுத்த வேண்டும்’’னு கோரிக்கை வெச்சாங்க.
 
‘‘ஜென் குரு தன்னைப் போன்ற, மற்றொரு ஜென் குருவுக்கு போதனை செய்யக்கூடாது. ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை”னு சொல்லிவிட்டு, அந்தப் பாட்டிக்கு, ஜென் குருக்களுக்குச் செலுத்தும் பிரத்யேக வணக்கத்தைச் சொல்லிவிட்டு, மூலிகை பறிக்க நடந்து போயிட்டாரு.
 
அந்தப் பாட்டி தன்னோட தனிமையையோ, வயது முதிர்வையோ ஒரு குறையா பார்க்காம, இயற்கையை ரசிச்சு, தோட்டத்துல விவசாயம் செய்யறதுதான் உண்மையான ‘ஜென் ஞானம்’னு சொல்றாங்க.

‘இயற்கை விவசாயத் தந்தை’னு சொல்லப்படற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசானபு ஃபுகோகாகூட ஜென் குரு போலத்தான் வாழ்ந்தாரு.
 
நம்ம ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அய்யாவும் ஜென் குருதான். இவ்வளவு ஏன், இயற்கையை நேசிச்சு, தன்னோட வேலையை தியானம் போல செய்ற ஒவ்வொருத்தரும் ஜென் குருதாங்க!