மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல் மருந்து - 2

நல் மருந்து - 2
பிரீமியம் ஸ்டோரி
News
நல் மருந்து - 2

தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: எல்.ராஜேந்திரன்ஆடாதொடை - நுரையீரல் நோய்களுக்கு அற்புத மருந்து!

நல் மருந்து - 2

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இந்தத் தாவரம் இந்த வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப்பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்க்க இருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால் இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். முதலாவதாக நாம் பார்க்க இருப்பது, ஆடாதொடை.

மருந்தகங்களில் அதிகமாக விற்கப்படும் பொருள் ‘இருமல் டானிக்’காகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ‘இருமல் என்றாலே டானிக் குடித்தால்தான் சரியாகும்’ என்று மக்கள் திடமாக நம்புவதுதான். இருமல் டானிக்குகள் அறிமுகம் ஆவதற்கு முன்னர், நம் முன்னோரின் அனைத்து விதமான இருமல் நோய்களையும் குணப்படுத்தி வந்தது ஆடாதொடை மூலிகைதான்.

அதனால்தான், ‘ஆடாதொடையின் பெயருரைக்கில் பாடாத நாவும் பாடும்’ என்ற சொலவடை சொல்லப்பட்டுள்ளது. ஆடாதொடையில் ஆடாதொடை (ஆடாதொடா வேசிக்கா), சிற்றாடாதொடை (ஆடாதொடா பொடோமி) என இரு வகைகள் உள்ளன. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாகக் காணப்படும் தாவரம். இது கோடை, குளிர் என அனைத்துப் பருவங்களிலும் பச்சைப் பசேல் என்று காணப்படும். புதர்த்தாவர வகையைச் சேர்ந்த இது, பல்லாண்டுகள் வாழும் இயல்புடையது.

ஆடாதொடைதான் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் காணக்கிடைக்கும். இது 3 அடி முதல் 6 அடி உயரம் வரை வளரும். சிற்றாடாதொடை, 2 அடி உயரம் வரை வளரும். இது, அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மையுடையது. இதன் இலைகள் ஆடாதொடை இலைகளைவிடச் சிறியதாக இருப்பதால், சிற்றாடாதொடை என அழைக்கிறார்கள். இச்செடியை ஆடுகள் உண்பதில்லை என்பதால், ‘ஆடு தொடா இலை’ என அழைக்கப்பட்டு மருவி, ஆடாதொடை என அழைக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இது வேலித் தாவரமாக வளர்க்கப்படுகிறது.

இந்திய மரபு வழி மருத்துவத்தில் இது, இருமல் தொடர்பான மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நேபாளத்தில், இதை மலேரியா காய்ச்சலுக்கான மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். இலங்கையில், பாம்புக்கடிக்கு ஆடாதொடை இலைச் சாற்றைப் பயன்படுத்துகிறார்கள். மியான்மர், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆடாதொடை இலைகளை ஆவிபிடிக்கப் பயன்படுத்துகிறார்கள். பங்களாதேஷில் குடற்புழு நீக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல நாடுகளில் மரபு வழி மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் அருமையான மூலிகைதான், ஆடாதொடை.

தற்போது இளைஞர் பருவத்தைக் கடந்த பெரும்பாலானோருக்கு உள்ள பரவலான பிரச்னை ரத்த அழுத்தம். ஆங்கில மருத்துவத்தில் இந்நோய்க்கு ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றுதான் பரிந்துரைக்கப்படுகிறது.

காரணமே இல்லாமல் வரக்கூடிய உயர் ரத்த அழுத்த நோயை, ஆங்கிலத்தில் ‘இடியோபதிக் ஹைப்பர் டென்ஷன்’ என்று சொல்வார்கள். தமிழ் சித்த மருத்துவத்தில் இதை ‘குருதியழல்’ என்று தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். அதற்குச் சரியான மருந்து ஆடாதொடை இலைப்பொடிதான். ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்துப் பொடித்து  (மிக்ஸியில் பொடிக்கலாம்) மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் உணவுக்குப் பிறகு 1 டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு சிறிது வெந்நீர் அருந்தி வந்தால், நாளடைவில் ரத்த அழுத்த நோய் முழுமையாகக் குணமாகும்.

சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, காசநோய் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆடாதொடை மணப்பாகு அருமருந்து. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒரு வேளைக்கு 15 மில்லி (3 தேக்கரண்டி) சாப்பிடலாம். 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 10 மில்லி கொடுக்கலாம். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வேளைக்கு 5 மில்லி கொடுக்கலாம். இதை அப்படியே சாப்பிடாமல், அரை டம்ளர் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 5 வேளைகூட உணவுக்கு முன்போ, பிறகோ சாப்பிடலாம். கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய மருந்து இது. சளி, இருமல், இருமலோடு கூடிய காய்ச்சல், பேதி முதலான குழந்தை நோய்களுக்கு இது சிறப்பான மருந்து.

குழந்தைகளுக்குப் பிரளி எனப்படும் ஒரு வகை கழிச்சல் நோய் வரும். மலம் பச்சை மற்றும் பல வண்ணங்களில் துர்நாற்றத்துடன் கழியும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரைக் கரைசலுடன் இம்மருந்தை 3 மணி நேரத்துக்கு ஒருமுறை நான்கு வேளைகள் கொடுத்தாலே பிரளி சரியாகிவிடும்.

அடுத்து ஆடாதொடை குடிநீர் குறித்துப் பார்ப்போம். நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆங்கில மருந்துகளை எடுத்து வருபவர்களும்கூட இக்குடிநீரைக் குடித்து நலம் காணலாம்.

100 கிராம் ஆடாதொடை இலை, 2 கிராம் சிற்றரத்தைப் பொடி,  2 கிராம் அதிமதுரப்பொடி ஆகியவற்றுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டினால், ஆடாதொடை  குடிநீர் தயார். ஒருநாள் முழுவதும் இக்குடிநீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். தினமும் இதுபோல காய்ச்சி, ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை குடித்துவந்தால், நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகத் துன்பங்கள் இன்றிக் குணமாகிவிடும்.

ஆடாதொடை வேர் மூலம் தயாரிக்கப்படும் குடிநீரை கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்ற எட்டாம் மாதத்திலிருந்து குடித்து வந்தால், சுகப்பிரசவம் சம்பவிக்கும். 400 மில்லி தண்ணீரில் 10 கிராம் ஆடாதொடை வேர்ப்போடியைச் சேர்த்து, அது 100 மில்லியாக வற்றும் வரை சுண்டக்காய்ச்சினால் ஆடாதொடை வேர்க் குடிநீர் தயாராகிவிடும். எனது களப்பணியில் இக்குடிநீரால் பயனடைந்த பலரை சந்தித்துள்ளேன். நரிக்குறவ பெண்கள் இக்குடிநீர் மூலம்தான் சுகமாகப் பிரசவித்துள்ளனர். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தையும் இது சரி செய்யும்.

பச்சை நிறத்தில் உள்ள ஆடாதொடை இலைகளைச் சுத்தமான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கும்போது கரைசல் மஞ்சள் நிறமாக மாறிவிடும். ஆடாதொடையில் உள்ள 68-க்கும் மேற்பட்ட தாவர வேதிப்பொருட்களே நிற மாற்றத்துக்குக் காரணம்.

இதில் உள்ள வஸிசினோன், டீ ஆக்ஸி வஸிசின், மெயின்டோன், வஸிசினோலன், வஸிசினால் ஆகிய வேதிப்பொருட்கள்தான் மூச்சுக்குழலை விரிவுபடுத்திச் சளியை வெளியேற்றுகின்றன. தவிர, காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக வினைபடும் தன்மை, புண்கள், ஆஸ்துமா முதலிய ஒவ்வாமை நோய்களைக் குணமாக்கும் தன்மை ஆடாதொடையில் உள்ளன என்று நவீன அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் தன்மையையும் கொண்டுள்ளது. இது வெள்ளெலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

-வளரும்

ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி!

டானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து.

ஆடாதொடை இலையை 1 கிலோ எடுத்துக் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு 6 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றிக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் ஒன்றரை லிட்டராகச் சுண்டிய பிறகு, 1 கிலோ பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாகுப் பதத்துக்குக் காய்ச்சி, வேறு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். பாத்திரம் மாற்றாவிட்டால் பாகு இறுகிவிடும். இது நன்கு ஆறினால், அதுதான் ஆடாதொடை மணப்பாகு. இதைப் பாட்டில்களில் காற்றுப் புகாதவாறு அடைத்துப் பத்திரப்படுத்த வேண்டும். ஓர் ஆண்டு வரை இது கெடாது.

வளர்ப்பது எளிது!

நல் மருந்து - 2

ஆடாதொடையை வீட்டுத் தோட்டத்தில் கூட எளிதாக வளர்க்கலாம். ஆடாதொடைக் குச்சிகளை வெட்டி, செம்மண் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்துத் தண்ணீர் தெளித்து வந்தால், 21 நாட்களில் துளிர்த்துவிடும். இப்படி இரண்டு மாதங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம். தொட்டிகளிலும் இதை வளர்க்கலாம்.

அது 1980 அல்ல, 1880-ம் ஆண்டு!

கடந்த இதழில் “1980-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஓலைச்சுவடிகளில் இருந்த மருத்துவ நூல்கள் அச்சுக்கு வர ஆரம்பித்தன” என்று தவறாக இடம் பெற்றுள்ளது. அதாவது, 1880-ம் ஆண்டு தொடங்கி பெரும்பாலான மருத்துவ ஓலைச் சுவடிகள், நூல் வடிவில் வெளிவரத் தொடங்கின. 1880-ம் ஆண்டுக்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில், சித்த மருத்துவ நூல்களே அதிகம். மக்களும் விரும்பி, சித்த மருத்துவ நூல்களைப் படிக்கத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.