
புறாபாண்டி, படம்: வீ.சிவக்குமார்
‘‘இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்து மண்ணில் உள்ள சத்துக்களைத்

தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அதற்கான மண் பரிசோதனை வழிமுறைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?’’
எம்.ஆர்.வேதாச்சலம், அச்சிறுப்பாக்கம்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க.வேல்முருகன் பதில் சொல்கிறார்.
‘‘இயற்கை விவசாயம் செய்தாலும், நம் மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றித் தெரிந்துகொண்டு விவசாயம் செய்வது நல்லது. மண் பரிசோதனை என்பதை மனிதர்களுக்கு உடல் பரிசோதனை போல அவசியமானதும்கூட. தமிழக அரசின், அங்ககச் சான்றளிப்புத் துறை வழங்கும், இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற, மண் பரிசோதனை மற்றும் நீர்ப் பரிசோதனை அறிக்கைகள் அவசியம். நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏனென்றால் மண்ணின் வேதியியல் குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். மண்ணின் தன்மைகளைக் கண்டறிய களர், உவர் மற்றும் அமில நிலங்களைக் கண்டறிந்து அவற்றைச் சீர்திருத்தவும், பயிருக்குக் கிடைக்ககூடிய சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடலாம்.
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மணற்பாங்கான பகுதி, கரிசல் மண் பகுதி, செம்மண் பகுதி ஆகியவற்றுக்கு மண் மாதிரியை தனித்தனியாக எடுக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்த பின்னர், நிலத்தை அடுத்த பயிருக்குத் தயார் செய்வதற்கு முன்பு மண்ணை பரிசோதனைக்கு எடுக்க வேண்டும். தற்போது நிலத்தில் உள்ளள பயிருக்கு உரமிட்டிருந்தால் 3 மாதங்களுக்குப் பிறகே மண் மாதிரி எடுக்க வேண்டும்.

எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்களின் நிழல் படரும் பகுதிகள், நீர்க் கசிவு உள்ள இடங்களில் மண் மாதிரிகள் சேகரிப்பதைத் தவிர்க்க வேண்டும். நெல், ராகி, கம்பு, கடலை போன்ற குட்டை வேர் கொண்ட பயிர்களைப் பயிரிட 15 செ.மீ அல்லது 6 அங்குல ஆழத்துக்கு மண் எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பருத்தி, கரும்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களைப் பயிரிட 22.5 செ.மீ அல்லது 9 அங்குலத்துக்கு மண் எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.
திராட்சை, மா, எலுமிச்சை போன்ற பழத்தோட்ட மற்றும் தென்னை மரப்பயிர்கள்களுக்கு 3 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி அதில் முதல் அடியில் ஒரு மாதிரியும், 2-வது அடியில் ஒரு மாதிரியும், 3-வது அடியில் ஒரு மாதிரியும் என 3 மண் மாதிரிகளைத் தனித்தனியாக எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். மண் மாதிரி எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் முதலியவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து மேற்கூறிய ஆழத்துக்கு நிலத்தில் ஆங்கில ‘V’ வடிவத்தில் (மண்வெட்டியால்) குழிவெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
வெட்டிய ‘V’ வடிவக் குழியின் ஓரமாகக் குழியின் மேலிருந்து கீழாக இரண்டு புறமும், ஒரே சீராக

மண்வெட்டியால் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து சுத்தமான வாளியில் போட வேண்டும். ஒரு வயலில் இதேபோன்று குறைந்தது 10 அல்லது 15 இடங்களில் மண்ணைச் சேகரித்து ஒன்றாகக் கலந்து அதில் இருந்து அரைக் கிலோ மண்ணைப் பகுத்தல் முறையில் எடுத்துத் துணிப்பையில் இட்டு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
என்.பி.கே என்று அழைக்கப்படும் தழை, மணி, சாம்பல் சத்துக்களும், கார, அமில நிலை, மின் கடத்துதிறன் (EC) மற்றும் அங்ககப் பொருட்களின் அளவு (OC) கண்டறிய ரூ.150 பரிசோதனைக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. மேலும், நுண்ணூட்டச்சத்துப் பரிசோதனை என்றால், அதற்குத் தக்கப்படி கட்டணம் கூடும். எங்கள் வேளாண்மை அறிவியல் மையத்தில், மண் மற்றும் நீர்ப் பரிசோதனையைச் செய்யும் வசதிகள் உள்ளன. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.
‘‘தேனீ வளர்ப்புக்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’
பிரபாவதி, வேலூர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் போன்றவை குறித்துப் பயிற்சி கொடுக்கப்படுகின்றன. பயிற்சிக் கட்டணம் 250 ரூபாய் மட்டுமே. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி: 0422 6611214
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.