மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

தலைமுடியைக் கறுமையாக்கும் கரிசாலை!மருத்துவம் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு, படங்கள்: எல்.ராஜேந்திரன்

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘கரிசாலை’.
 
விழியில் கரைந்து, ஈரலில் நுழைந்துஉடலையும் உயிரையும் வலுவாக்கும் மூலிகைகளில் ஒன்று ‘கரிசாலை’. இதன் இலக்கியப் பெயர்   ‘கரிசலாங்கண்ணி’. இதை கிராமப்புறங்களில் ‘கரப்பாந்தழை’, ‘கரிப்பான்’, ‘கையாந்தழை’ என்று குறிப்பிடுவார்கள். கேரள மக்கள் ‘கைதோணி’, ‘கையுண்ணி’ என்கிறார்கள். இதன் சாறு கறுமை நிறத்தில் இருப்பதால், பெயர்கள் அனைத்தும் கறுமையைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இது, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டி கண்ணோய்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது. ஈரலை வலுவாக்கி செரிமானத் தன்மையைச் செம்மைப்படுத்தும். தவிர, மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல மருந்து. தலை முடியைக் கறுகறுவென வளரச்செய்யும் தன்மை கொண்ட மூலிகை இது. பல நன்மைகள் கொண்ட இம்மூலிகையைத் தேடியலையத் தேவையில்லை. நெல் வயல்களிலும், காடுகளிலும் குறிப்பாகத் தண்ணீர் பாயும் இடங்களிலெல்லாம் தன்னிச்சையாகச் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை.

தமிழகத்தில், வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளை நிறப் பூப் பூக்கும் செடியை வெள்ளைக் கரிசலாங்கண்ணி என்பர். இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா ப்ரோஸ்ட்ராட்டா (எல்) லின்’ (Eclipta prostrata (L) Linn). இதுதான் அனைத்து இடங்களிலும் காணக்கிடைக்கும்.
 
மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்பர். இதைப் பொற்றலைக்கையான் என்றும் சொல்வார்கள். இதன் தாவரவியல் பெயர் ‘வேடெலியா சினேஸிஸ் (ஒஸ்பெக்) மெர்’ (Wedelia Chinensis (Osbeck) Merr ). இதை நாம் நடவு செய்துதான் வளர்க்க வேண்டும். இதுதான் அறிவு வளர்ச்சிக்காகச் சித்தர்களால் பாடப்பட்டுள்ள மூலிகை.

நடைமுறையில் கரிசாலை என்பது, இரண்டு வகைகளையுமே குறிக்கிறது. உடலின் உள்பகுதிகளுக்குச் சாப்பிடும் மருந்துகள் மஞ்சள் கரிசாலையிலும்; வெளிப்பகுதிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் வெள்ளைக் கரிசாலையிலும் தயாரிக்கப்படுகின்றன. சித்த மருந்துகளில் உயர் மருந்துகளான செந்தூரங்கள் தயாரிக்க மஞ்சள் கரிசாலையே சிறப்பாக உள்ளது. கரிசாலையை வடமொழியில் ‘பிருங்கராஜ்’ என அழைக்கிறார்கள். அதனால், ‘பிருங்க’ என்று பெயரால் வழங்கப்படும் அனைத்து மருந்துகளிலும் கரிசாலை சேர்க்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

கண் நோயைக் குணமாக்கும் கரிசாலை மை!

மூன்று நாட்களுக்கு ஒருமுறை, கரிசாலையில் தயாரிக்கப்பட்ட மையைக் கண்களுக்கு இடும் பழக்கத்தை நமது முன்னோர் கடைப்பிடித்து வந்தனர். கண் நோய்கள், பார்வைக் குறைவு, தலைவலி, மூக்கடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கத்தான் இதை ஆண்களும் பெண்களும் கடைப்பிடித்து வந்துள்ளனர். ஆனால், காலப்போக்கில் மையிடுவது அழகியல் பழக்கமாக நம்பப்பட்டுப் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும், பெண்கள் தற்போது இடுவது மூலிகை மையல்ல. ரசாயன கண் மைதான்.

மெல்லிய பருத்தித்துணியை வெள்ளைக் கரிசாலைச்சாற்றில் நன்கு மூழ்க வைத்து உலர விட வேண்டும். இப்படி ஏழுமுறை மூழ்க வைத்து உலர விட்டால், அந்தத் துணி கறுமை நிறத்துக்கு மாறியிருக்கும். அதைத் திரியாக்கி விளக்கெண்ணெயில் தீபமேற்றி... . மூடுகலனுக்குள் விளக்கெண்ணெயைத் தடவி வைக்க வேண்டும். தீபம் எரிந்து முடிந்தவுடன் மூடு கலனுக்குள் படிந்துள்ள கரிதான் மை. இதை, செப்புச்சிமிழில் பத்திரப்படுத்தி வைத்து,  மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை வேளையில், விளக்கெண்ணைய் கலந்து கண்களில் தீட்டி வந்தால், கண் பார்வை தெளிவாகும். கண் நோய்கள் வராது.

காமாலையை விரட்டும் கரிசாலை!

மக்களை அதிகம் பயப்பட வைக்கக்கூடிய நோய்களில் ஒன்று மஞ்சள் காமாலை. ஆனால், இது ஆரம்பத்திலேயே அறியப்படுமானால் மூலிகைகள் மூலம் எளிமையாகக் குணப்படுத்தக்கூடிய நோய்தான். 10 கிராம் வெள்ளைக் கரிசாலையுடன், 2 கிராம் மிளகு சேர்த்து அரைத்து காலை, மாலை இரு வேளைகளிலும் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர வேண்டும். இப்படிச் செய்தால், 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்குள் மஞ்சள் காமாலை குணமாகிவிடும். மஞ்சள் காமாலை நோய் தாக்கினால் உப்பு, புளிப்பு, கொழுப்பு நீக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

இளநரை போக்கும் இன்மருந்து!


இளநரை பலருக்கும் பெரிய பிரச்னை. ஆனால், உடலியலில் இது ஒரு நோயே அல்ல. இதற்கு வெள்ளைக் கரிசாலையை நிழலில் உலர்த்திப் பொடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் பொடியை எடுத்து, தேனில் கலந்து காலை, மாலை இரு வேளைகளிலும் உணவுக்குப் பிறகு 3 மாதங்கள் சாப்பிட வேண்டும்.

அதேபோல, கரந்தை இலைப் பொடியை 3 மாதங்கள் நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் இளநரை (40 வயதுக்கு மேல் ஏற்படும் நரையல்ல) மாறும். உள் மருந்தோடு, கரிசாலை சேர்த்துக் காய்ச்சப்படும் தைலங்களைக் காலைப்பொழுதில் தலைக்குத் தேய்த்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். கண்டிப்பாக இரவில் தைலம் தேய்க்கக் கூடாது. கரிசாலைச் சாற்றுடன் சம அளவு எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்ட வேண்டும். இத்தைலத்துடன் சம அளவு கரிசாலைச் சாறு சேர்த்து மீண்டும் காய்ச்ச வேண்டும். இப்படி 10 முறை காய்ச்சிய தைலத்துக்குப் பெயர் கரிசாலை மடக்குத் தைலம். இது, தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு அளிக்கும். மருதாணியை மட்டும் தனியாகத் தலைக்குப் பூசக்கூடாது. அதோடு கரிசாலை, அவுரி ஆகிய சாறுகள் சேர்த்துக் காய்ச்சப்படும் தைலங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இளநரை மறையும்.  என்னுடைய களப்பணிகளின் போது, ஒரு 85 வயது முதியவரை சந்தித்தேன். அவருக்கு 85 வயதிலும் ஒரு முடி கூட நரைக்கவில்லை. அதன் ரகசியத்தை கேட்டேன். எனக்கு சிறுவயது  முதல் வேபெண்ணெய் மட்டுமே தலையில் தேய்த்து வருவதாக சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

இயற்கையான இரும்புச்சத்து டானிக்!

 
1 லிட்டர் வெள்ளைக் கரிசாலைச் சாற்றில் 4 கிலோ பனைவெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கரைக்க வேண்டும். இதை, இண்டேலியம் கடாயில் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயில் வைத்துக் கிளறி பாகுப்பதத்தில் இறக்கி உலோகத்தட்டில் வார்த்தால்... கற்கண்டுகளாக உறையும். அவற்றை நன்கு ஆற விட்டுப் பொடித்து குழந்தைகள், பெரியவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இதனால், இரும்புச்சத்து அதிகரித்து, சோகை முதலான நோய்கள் குணமாகும். இதைத் தேநீர், காபி, பால் போன்றவற்றிலும் கலந்து குடிக்கலாம்.

இவ்வளவு சிறப்புமிக்க கரிசாலையை ‘மிக மோசமான களை’ எனச் சொல்லி அதை முற்றிலும் அகற்றுவதற்காகக் களைக்கொல்லியை விற்பனை செய்து வருகிறது, ஒரு பன்னாட்டு நிறுவனம். அதைப் பயன்படுத்துமுன் சற்று யோசியுங்கள் விவசாயிகளே. உங்கள் மண்ணையும் மலடாக்கி அருமருந்தான கரிசாலையையும் அழித்துவிடாதீர்கள்.  உங்கள் பண்ணையில் தோன்றும் கரிசாலையை உங்கள் வீட்டளவில், ஊரளவில் மருந்தாகவோ, உணவாகவோ பயன்படுத்தி, பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

- வளரும்

காலை நேரக் கரிசாலை பானம்!

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள் கடைப்பிடித்த வழலை வாங்கும் முறை (உடலில் படிந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் முறை). இதை  வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் உலகுக்கு அறிவித்தார்.
 
சித்தர்களுக்கு இதெல்லாம் முடியும், நம்மால் செய்ய முடியுமா என்று மலைப்பவர்கள், பின்வரும் காலை பானத்தை செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

* உலர்ந்த மஞ்சள் கரிசாலை  இலை - 100 கிராம்

* உலர்ந்த முசுமுசுக்கை இலை - 25 கிராம்

*
உலர்ந்த தூதுவளை இலை - 25 கிராம்

* சீரகம் - 25 கிராம்

ஆகியவற்றை வீட்டில் உள்ள மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு மெல்லிய சீலைத்துணியில் வடிகட்டி காற்றுப் புகாத ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். காலையில் இக்கலவையில் ஒரு தேக்கரண்டி (5 கிராம் அளவு) எடுத்து 100மில்லி பசும்பாலில் (பாக்கெட் பால் வேண்டாம்) கலந்து அதனுடன் 100மில்லி தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வரலாம்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பு (ஆஸ்துமா), மூக்கடைப்பு (சைனஸ்) முதலிய நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். இரும்புச்சத்துக் குறைபாடு, சோகை முதலிய பிணிகள் குணமாகும். நரம்புத்தளர்ச்சி நீங்கி உடலும், உள்ளமும் வலிமை அடையும்.

நமது நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி, இன்று அனைவரது வீடுகளிலும் நிறைந்து இருக்கும் காபி, தேநீர்க்குப் பதிலாக, இக்காலை பானத்தை பழக்கப்படுத்திப் பார்க்கலாம். இதோடு பாரம்பர்ய உணவுத் திருவிழாக்கள் கொண்டாடுவோர் இப்பானத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தலாமே?

போலி மஞ்சள் கரிசாலை!

நல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்!

எல்லாவற்றிலும் போலி உருவாகிவிட்டது போல, மஞ்சள்கரிசாலைப் பூவைப் போலவே பூக்கக்கூடிய Wedelia trilobata (L) hitch. என்ற ஒரு தாவரம் வெளிநாடுகளில் இருந்து நமக்கு அறிமுகமாகி, மஞ்சள் கரிசாலை என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த போலி மஞ்சள் கரிசாலை மிகவும் வேகமாக வளர்ந்து படர்ந்து இடத்தை எல்லாம் அடைத்துப் பிற தாவரங்களை வளரவிடாமல் தடுப்பதால் ‘இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்’ (International Union for Conservation of Nature) எனும் அமைப்பால் இந்தத் தாவரம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் போலி மஞ்சள் கரிசாலை படம் இடம் பெற்றுள்ளது.