மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!

புறாபாண்டி,

‘‘தேற்றான் கொட்டை மூலம் தண்ணீரைச் சுத்தம் செய்ய முடியும் என்று வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இது உண்மையா?’’

ஆர்.பிரியா, கோவைப்புதூர்.

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!


 
ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ‘பம்மல்’ இந்திரகுமார், பதில் சொல்கிறார்.

‘‘வாட்ஸ் அப்பில், உண்மையும், போலியும் கலந்த பல செய்திகள் உலா வருகின்றன. தேற்றான் கொட்டை தகவல் உண்மைதான். கலங்கிய, மாசுபட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க, நம் முன்னோர்கள் தேற்றான் கொட்டையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதைப் பேச்சுவாக்கில் தேத்தான் கொட்டை என்றும் சொல்வார்கள். தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று.

இந்த மரத்துக்கும் நம் முன்னோர்கள் தெய்விக முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். தேற்றான் கொட்டை மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் இருந்து எட்டிக்குடி செல்லும் சாலையில் உள்ள திருக்குவளையில் திருக்கோளிலிநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள பிரம்மபுரீஸ்வரருக்கு இணையாகத் தேற்றான் கொட்டை மரத்தை, தல விருட்சமாக வணங்கி வருகிறார்கள்.

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!

தேற்றான் கொட்டை அடிப்படையில் மருத்துவத் தன்மை கொண்டது. இதன் மூலம் சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தேற்றான் கொட்டை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில் தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். பாத்திரத்தின் அடிப்பகுதியில் அசுத்தம் தங்கி இருக்கும். மேல்பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி, குடிக்கலாம். குடிநீர்க் கிணறு உள்ளவர்கள் ஒரு கிலோ தேற்றான் கொட்டையை, கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். அந்தக் கிணற்று நீர், தெளிந்த ஊற்று நீர் போல இருக்கும். யுரேனியத்தின் கழிவுகளைச் சமன் செய்யும் தன்மை தேற்றான் கொட்டைக்கு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.’’
 
தொடர்புக்கு, செல்போன்: 99410 07057.

“நாங்கள் அரிசி மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டிய உணவுப் பொருட்களாகத் தயாரித்து விற்பனை செய்ய விரும்புகிறோம்.

இதற்கான வழிமுறைகளைச் சொல்லவும்?’’

இளஞ்செல்வி செல்வமணி, திருச்சி-21

அரிசி மற்றும் சிறுதானியங்களையும் மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். குறிப்பாகச் சிறுதானியங்கள் பற்றி விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. அதற்குத் தக்கபடி சிறுதானியங்களைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம், புட்டு... எனப் பாரம்பர்ய உணவுகள், பிரட், பிஸ்கெட், நூடுல்ஸ்... போன்ற அடுமனை உணவுகள், உடனடியாகத் தயாரித்துச் சாப்பிடும் ‘ரெடி டூ ஈட்’ உணவு வகைகள் தயாரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் கட்டண அடிப்படையில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பதிவு முக்கியம்.

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!


பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றால், ‘ஃபுட் சேப்டி அண்டு ஸ்டாண்டர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ (Food Safety and Standards Authority of India) என்ற அமைப்பிடம் அனுமதியும், சான்றும் பெற வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் துறையின் அலுவலகங்கள் உள்ளன. இந்த அமைப்பிடம் இருந்து எப்படிச் சான்றிதழ் பெற வேண்டும், பொருட்களை வணிக ரீதியாக விற்பனை செய்யும் வழி முறைகள் போன்றவற்றிற்கு வழிகாட்டி வருகிறார்கள்.
 
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422 6611340/6611268.

‘‘நோனி சாகுபடி..  ஏக்கர் கணக்கில் வேண்டாம்!’’

நீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை!



பசுமை விகடன் அக்டோபர்- 10 தேதியிட்ட இதழில், நீங்கள் கேட்டவை பகுதியில், ‘நோனி மரம் வளர்ப்பு’ குறித்து, தூத்துக்குடி மாவட்டம், காளாம்பட்டியைச் சேர்ந்த மூத்த வேளாண் வல்லுநரும், முன்னோடி நோனி விவசாயியுமான சீனிவாசன் பதில் சொல்லியிருந்தார்.

அதில் நோனி மர வளர்ப்பை பிரபலபடுத்தி வரும் பாபநாசம் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, நோனி மரம் வளர்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘பசுமை விகடனில், நோனி மரத்தின் அருமை, பெருமைகள் வெளியானவுடன், ஏராளமான விவசாயிகள் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைக் கேட்ட வண்ணம் உள்ளனர். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதாவது, நோனி என்பது ஹவாய் நாட்டுத் தாவரம். 2001-ம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவுக்கு அறிமுகமானது என்று சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சித்த மருத்துவ அறிஞர் சாம்பசிவம் பிள்ளை, வெள்ளை நுணா என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். அது நோனியாகத்தான் இருக்கும். நம் தமிழ்நாட்டு மண்ணில் நோனிக்கு இணையாக மஞ்சணத்தி என்ற நுணா மரம் உள்ளது. இந்த நுணாவின் வேர்ச் செல்லாகத்தான், நோனி அழைக்கப்படுகிறது. வீட்டுக்கு வீடு முருங்கை, துளசி... போன்றவற்றை நம் உடல் நலத்துக்காக வளர்ப்பதைப் போல, நோனி மரங்களை வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படாது. இது நீரிழிவு முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் விரட்டும் தன்மை கொண்டது.

‘நுணாவின் ஊறுகாய் நுகரவே அடாவி வரும் நோயெல்லாம் போகும்...’ எனச் சித்தர்கள் சொல்லியுள்ளார்கள். இது நோனிக்கும் பொருந்தும். இதனால்தான், ‘வீடு தோறும் நோனி’ என்று நோனி வளர்ப்பை இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறோம்.
 
நோனி மரம் என்பது, நடவு செய்த ஓர் ஆண்டு முதல் காய்க்கத் தொடங்கிவிடும். சமீப காலங்களில் நோனியை எம்.எல்.எம் என்று அழைக்கப்படும் அமைப்புகள் மூலமே லிட்டர் ரூ.1600-க்கு விற்பனைச் செய்கிறார்கள்.
 
ஒரு சில விவசாயிகள் தங்களது நோனி மரங்களில் இருந்து கிடைக்கும், பழங்கள் மூலம் நோனிச்சாறு தயார் செய்து குறைந்தபட்சம் ஒரு லிட்டர் ரூ.600 முதல் விற்பனை செய்து வருகிறார்கள். நோனிச் சாறு அருந்தும் பழக்கம், நம் நாட்டில் இன்னும் அதிகரிக்கவில்லை. ஆகையால், விவசாயிகள் அவசரப்பட்டு, ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய வேண்டாம்.
 
நோனி உற்பத்தி அதிகரித்தால், அதை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், சாகுபடி செய்தவர்களுக்கு நஷ்டம் உண்டாகும். தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகளும், தங்களுடைய உடல் நலனுக்காக இரண்டு, மூன்று மரங்கள் வளர்த்து, நோனிப் பழச்சாறு உண்டு நோயின்றி வாழும்படி கேட்டுக் கொள்கிறேன்.’’
 
தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128  என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.