மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!

மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!

மாத்தியோசிஓவியம்: ஹரன்

ண்பர் ஒருத்தர், மா மரம் வளர்த்த அனுபவத்தைப் பாடம் போல சொன்னாரு.
 
‘‘என்னோட வீட்டுத் தோட்டத்தில ஒரு மா மரம் இருந்துச்சு. எங்க அப்பா, தாத்தா காலத்து மரம் அது. சுவையான மாம்பழங்கள் காய்க்கும். மா காய்க்குற நேரத்துல, எங்கள் வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்களுக்குப் பை நிறையப் பழத்தைப் பறிச்சு கொடுத்து அனுப்புவோம்.
 
எங்க வீட்டுக்குபக்கத்துல ஒருத்தர் புதுசா வீடு கட்டி, குடிவந்தார்.
 
‘உங்க மா மரத்து இலைங்க, எங்க வீட்டில கொட்டிக்கிட்டே இருக்கு. மரம் முழுக்கவே, எங்க வீட்டுப் பக்கம்தான் கிளை பரப்பி இருக்கு. தயவு செஞ்சு மரத்தை வெட்டிப் போட்டிருங்க’னு சொல்லிட்டுப் போனார்.

மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!

அன்னைக்கு ராத்திரி முழுக்க தூக்கம் வரல.

மறுநாள் காலையில மா மரத்தை ஒட்டி நிழல்வலை கட்டிவெச்சா, உங்க வீட்டுல இலைங்க விழாதுன்னு சொல்லிப் பார்த்தேன். அந்த வேலையெல்லாம், எங்களுக்கு எதுக்குங்க... மரத்தை வெட்டிப் போட்டுட்டா பிரச்னை முடிஞ்சிடும்னு சிடு சிடுனு பேசினாரு பக்கத்து வீட்டுக்காரர்.
 
மறுநாள் காலையில, ‘அய்யா, தப்பா நினைக்காதீங்க. இந்த மா மரம், எங்க அப்பா காலத்துல இருந்தே இங்க இருக்கு. இதை வெறும் மரமா நினைக்கல. எங்க குடும்பத்துல ஒருத்தராவேதான் நினைக்கிறோம். நீங்க மட்டும், இந்த மரத்தோட பழத்தை சாப்பிட்டா, வாழ்நாள் முழுக்க, அதோட ருசியை மறக்க மாட்டீங்கன்னு சொன்னேன். கூடவே, இன்னொரு விஷயத்தையும் சொன்னேன்.

மரம் உங்க வீட்டுப் பக்கம் சாய்ஞ்சிருக்கு. அதனால, அடுத்த பருவத்துல இருந்து, காய்க்குறதுல பாதி உங்களுக்குச் சொந்தம்னு, மரத்துக்கு உரிமையும் கொடுத்தேன்.

அப்போ இருந்து, அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் என்னைப் பார்த்தா முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போவாரு. அந்த வீட்டுக் குழந்தைகளும், எங்க குழந்தைகளும் ஒரே பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், அந்தக் குழந்தைகளும்கூட எங்க வீட்டுப்பக்கம் எட்டிப்பாக்குறதில்ல.

ஒரு நாள் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர், ‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மா மரத்துக் குப்பையைப் பொறுக்கிறதோ’னு சத்தமா திட்டிக்கிட்டிருந்தாரு.
 
எனக்குச் சரியான கோபம் வந்திடுச்சு. உடனே, எனக்குத் தெரிஞ்ச மர வியாபாரியை, செல்போன்ல கூப்பிட்டு, ‘நாளைக்குக் காலையில, எங்க வீட்டுல இருக்குற, மா மரத்தை அறுத்துத் தள்ளுங்க’னு அந்த மா மரத்து அடியில நின்னுக்கிட்டு தகவல் சொன்னேன்.
 
அடுத்த நாள் காலையில, ரம்பத்தோட மா மரத்தை அறுக்க ஆளுங்க வந்தாங்க. அந்த ஆளுங்க, மரத்தைத் தட்டிப் பார்த்தாங்க.
 
‘ரொம்ப வயசான மரம் சார், கல்லு மாதிரி இருக்கு. இந்த ரம்பம் பத்தாது. பெரிய ரம்பம் எடுத்துக்கிட்டு, இன்னும் ரெண்டு ஆளுகளையும் கூட்டிக்கிட்டு வர்றோம். நாளைக்கு மரத்தை அறுத்து சாய்ச்சுப் புடலாம்’னு மரம் அறுக்க வந்த ஆள், சொல்லிட்டுப் போனாரு.
 
அடுத்த நாள், அவசரமா அலுவலக வேலைக்காக, ஒரு வாரம் மும்பை போக வேண்டிய சூழ்நிலை. என்னோட மனைவியையும் குழந்தைகளையும் சொந்தக்காரங்க வீட்டுல விட்டுட்டு வீட்டைப் பூட்டிட்டுக் கிளம்பிட்டோம். இதனால, மரம் அறுக்குற வேலையைத் தள்ளிப்போட்டோம்.

ஒரு வாரம் கழிச்சு, வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடனே வேக வேகமா வீட்டுல இருந்த சின்னச் சின்ன வேலைகள பாக்க ஆரம்பிச்சேன். அந்த ஒரு வாரத்துல மாமரத்தைப் பத்தின நினைவே மறந்து போச்சு. வீட்டுத்தோட்டம் பக்கம் போன என்னோட மனைவி, ‘என்னங்க... இங்க வந்துபாருங்க’னு சொன்னா, உடனே வேகமா ஓடிபோய்ப் பார்த்தேன். முதல் நாள் பெய்த மழையில, மா மரம் வேரோட சாஞ்சி கிடந்துச்சு. எனக்குத் துக்கம் தொண்டையை அடைச்சது.
 
அந்த மரத்தை அறுத்துடணும்னு திட்டம் போட்டவுடனே, மரமே தன்னோட உயிரை மாய்ச்சுக்கிடுச்சு. மரத்துக்கு மனுஷனைவிட, தன்மான உணர்வு அதிகம்ங்கிறது புரிஞ்சிக்கிட்டேன். அந்த நொடியே கைகூப்பி மரத்தை வணங்கி நின்னேன். என்னோட மனைவி, குழந்தைகளும் கண்கலங்கி நின்னாங்க. அந்த மா மரத்தை அறுத்து வெளியில விற்பனை செய்ய மனசு வரல. அதனால ஒரு பெட்டி செஞ்சி, அந்த மாமரம் நினைவா வீட்டுல வெச்சிருக்கோம்’’னு சொல்லி முடிச்சாரு. இது ஏதோ காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை இல்லீங்க. இதே மாதிரி, மாதுளை மரம் பட்டுப்போனது, மல்லிகைச் செடி வாடிப் போனதுன்னு ஏராளமான உண்மைச் சம்பவம் நடந்திருக்கு.

மரங்களுக்கும் மனுஷங்க மாதிரியே உணர்வு உண்டுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. ‘தி சீக்ரெட் லைப் ஆஃப் பிளாண்ட்ஸ்’ (The Secret Life of Plants) என்கிற புத்தகத்துல, இது சம்பந்தமா விளக்கமா சொல்லியிருக்காங்க. இதை இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே திருவள்ளுவர் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காரு
.
‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்’

அதாவது, நிலத்துக்குச் சொந்தக்காரர், நிலத்தைப் போய்ப் பார்க்கலைன்னா, நிலம் மனைவியைப் போல கோபிச்சுக்கும்னு உருவகமா திருவள்ளுவர் சொல்லியிருக்காரு. நிலம் கோபிச்சுக்கும்னா, நல்ல விளைச்சல் கிடைக்காது என்பதல்ல அர்த்தம்.

காய்க்காத மரத்தை, அன்பா தடவிக் கொடுத்து, ‘நல்ல மரம், ஏன் இன்னும் காய்ப்புக்கு வரல’ன்னு தண்ணி ஊத்தினா, அடுத்த பருவத்துல காய்ச்சுத் தொங்குறத பார்த்த அனுபவம் பலருக்கும் இருக்கும். தென்னந் தோப்புல, மனுஷங்க பேசுற சத்தம் கேட்ட தென்னை நிறைய குலைத்தள்ளும்னும்கூட சில அனுபவ விவசாயிங்க சொல்லியிருக்காங்க. முருங்கை மரத்தை வீட்டுக்கு முன்னாடி வளர்க்கக் கூடாதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆனா, வீட்டுக்கு முன்னாடி உள்ள, மனுஷங்க பேச்சு ஒலியைக் கேட்டு வளர்ற முருங்கை மரம், அதிகமா காய்ச்சுக் குலுங்குறதை இப்பவும்கூட பார்க்கலாம். இது முருங்கைக்கு மட்டுமல்ல, எல்லா மரம் செடி கொடிகளுக்கும்கூடப் பொருந்தும்.