
பயணம்துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள், தனியார் நிறுவன ஊழியர் மோகன், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் பார்த்திபன், தனியார் நிறுவன கணக்காளர் செந்தில், பட்டதாரி ரஞ்சித், கல்லூரி மாணவிகள் யாழினி, சிந்து ஆகியோர். அனைவரும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை நாம் அழைத்துச் சென்றது, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே புண்ணமை கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ‘முன்னோடி இயற்கை விவசாயி’ முரளியின் பண்ணைக்கு!

முரளி, சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ‘சண்டே மார்க்கெட்’ என்ற பெயரில் இயற்கை அங்காடியை ஆரம்பித்தவர். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கெடுத்தவர். இயற்கை விவசாயம் செய்துவரும் முரளி, தற்போது சென்னையில் ‘இயற்கை அங்காடி’யை நடத்தி வருகிறார். ‘பசுமை விகடன்’ ஏற்பாடு செய்த பல கருத்தரங்கு மற்றும் பயிற்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இயற்கைக் காய்கறிகள் மற்றும் பழச் சாகுபடி குறித்த விவரங்களைத் தேடி டில்லி, கல்கத்தா எனச் சுற்றி வந்தவர். மொத்தமுள்ள 60 ஏக்கர் நிலத்தில் 52 ஏக்கரில் மா பயிரிட்டுள்ளார். நான்கரை ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல், அரை ஏக்கர் நிலத்தில் வாழை, ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னை, அரை ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் எனச் சாகுபடி செய்து வருகிறார்.

காலை 9.30 மணிக்கு முரளியின் பண்ணையை அடைந்தோம். வழக்கம் போல வாட்டியெடுத்த வெயில் அன்றும் தன் உக்கிரத்தைக் காட்டியது. முகத்தில் புன்னகையுடன் அனைவரையும் வரவேற்ற முரளி, ஒரு நாள் விவசாயிகளுடன் அறிமுகம் செய்துகொண்டார். அனைவருக்கும் இயற்கை முறையில் விளைந்த கொய்யாக்கனியைக் கொடுத்து ருசிக்கச் சொன்னார். ருசித்த அனைவருமே ‘நல்ல இனிப்புச் சுவையில் உள்ளது’ என்றனர்.
“அதுதான் இயற்கையின் மகிமை” என்ற முரளி, “இயற்கையில விளைஞ்ச எல்லா பொருளுக்குமே ஒரு சுவை இருக்கும்” என்றவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு பண்ணையைச் சுற்றிக்காட்ட ஆரம்பித்தார்.

முதலில் மாந்தோப்புக்கு அழைத்துச் சென்ற முரளி, “மாமரத்துல சரியான நேரத்துக்குக் கவாத்து செய்யணும். சரியான முறையில ஊட்டம் கொடுக்கணும். இப்படிச் செய்தால் பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்காது. ஆனா, சரியா கவாத்து செய்யாட்டி தண்டுத்துளைப்பான் தாக்க வாய்ப்புண்டு. இது தாக்குச்சுனா மரமே வீணாப்போயிடும். மாமரத்தில் கிளைகள் தரையில படுற மாதிரி இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாமரத்துக்கும் 12 அடி இடைவெளி விட்டிருக்கேன். இந்த இடைவெளியில் ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம்” என்றார்.
“நீங்க ஏன் ஊடுபயிர் சாகுபடி செய்யலை” என்று கேட்டார், மோகன். “ஊடுபயிரா உளுந்து போட்டிருந்தேன். அப்போ என்னால மாமரங்கள்ல கவனம் செலுத்த முடியாமப் போயிடுச்சு. அதனால ஊடுபயிர் சாகுபடியை நிறுத்திட்டேன்” என்றார், முரளி.

மாந்தோப்பில் மாடுகள் மேய்வதைப் பார்த்த செந்தில், “தோட்டத்தில் மாடுகள் மேயுது, அதை விரட்ட மாட்டீங்களா” என்றார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த முரளி “என் மாடுகள் மாந்தோப்புலதான் எப்பவும் மேயும். அதுக போடுற சாணம்தான், இந்த மண்ணுக்கு உரம். இந்த மாடுகள்ல பால் கறக்கமாட்டேன்” என்றவர், மாடுகளிடம் அழைத்துச் சென்றார். நம்ம ஊரு நாட்டு மாடுகள், ராஜஸ்தான் மாநில தார்பார்க்கர் மாடுகள் எனப் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.
“இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை மாடுகள்தான். அதுலயும் நாட்டு மாடுகள் இருந்தால் இன்னும் சிறப்பு. இதெல்லாம் நான் பார்த்து பார்த்து வாங்கின மாடுகள்” என்றார், முரளி.
“நாட்டுமாடுகளை எப்படிக் கண்டுபிடிக்கிறது” என்று கேட்டார், ரஞ்சித். “திமில், சதைப் பிடிப்பை வெச்சுதான் கண்டுபிடிக்கணும்” என்று சொன்ன முரளி, நாட்டுமாடுகளின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே மேட்டுப்பாத்தியில் கீரை, காய்கறிகள் பயிரிட்டிருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். “வயல்ல சதுரப்பாத்தி அமைச்சுதானே காய்கறி, கீரையெல்லாம் பயிர் செய்வாங்க” என்று கேட்டார், கார்த்திகேயன்.
“அதிகமான மழையால பயிர் அழிஞ்சிடக் கூடாதுனுதான் மேட்டுப்பாத்தி அமைச்சிருக்கேன். தரையில இருந்து 2 அடி உயரத்துல, 5 அடி அகலத்துல வடிகால் வசதியோட பாத்திகள அமைச்சிருக்கேன். மேட்டுப்பாத்திக்கு அடியுரம் ரொம்ப முக்கியம். மாட்டு எரு, இலைதழைகள், மண்புழு உரம் எல்லாத்தையும் போட்டு மட்க விடணும். இலைதழைங்களைச் சாணம் கரைச்ச தண்ணியில முக்கி எடுத்துப் போடணும். மேட்டுப்பாத்தியில தக்காளி, கீரைனு எல்லாத்தையும் பயிர் செய்யலாம்.
இதுல சாகுபடிப்பரப்பு கம்மியா இருந்தாலும், மகசூல் அதிகமா கிடைக்கும். பொதுவா நாம வாங்குற கீரை பச்சைபசேல்னு இருக்கணும்னு நினைப்போம். முக்கியமா பூச்சி சாப்பிடாத கீரையா இருக்கணும். இதுதான் நம்மோட எதிர்பார்ப்பு. இங்கதான் நம்ம அறியாமை ஒளிஞ்சிருக்கு. பூச்சிங்களே சாப்பிடாம ஒதுக்குன கீரையை நாம சாப்பிடுறோம்னா, நமக்கு எவ்வளவு அறியாமை. பூச்சி சாப்பிடாத கீரைங்கள்லதான் ரசாயனம் அதிக அளவில் கலந்திருக்கும்.
இப்போ தெருவுக்கு நாலு டாக்டருங்க இருக்குறதுக்குக் காரணம், இயற்கை குறித்த விழிப்பு உணர்வு இல்லாததுதான்” என்ற முரளி, பயோ டைனமிக் உரங்கள், பயோ டைனமிக் காலண்டர், கொம்புசாண உரம் ஆகியவை குறித்து விளக்கினார். அதை அனைவரும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர்.
பிறகு, 8 கிராம் கொம்புசாண உரத்தை எடுத்து சாணக் கரைசலில் கலந்தார். அவரைத் தொடர்ந்து அனைவரும் அதேபோலக் கலந்தனர். கல்லூரி மாணவி சிந்து கலக்கும்போது நெடி தாங்காமல் தும்ம ஆரம்பித்தார். சற்று நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் களமிறங்கினார்.
அடுத்து வயலில் இருந்த புற்கள், இலை தழைகளை அறுத்து அக்கரைசலில் முக்கி எடுத்து மேட்டுப்பாத்தியில் பரப்பி விதைப்புக்குத் தயார் செய்தனர். அந்த நேரம் உச்சி வெயில் அடிக்க, அனைவரும் நிழல் பார்த்து ஒதுங்கினர். அனைவருக்கும் பண்ணையில் கறந்த பால், வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட சுவையான காபியை வழங்கினார், முரளி. அதை ருசித்துப் பருகினர், அனைவரும். அப்போது இயற்கைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது குறித்துக் கேட்டார், ரஞ்சித்.
அதுகுறித்து, அடுத்த இதழில் பார்ப்போம்.
-பயணம் தொடரும்
நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே
044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை சனி, ஞாயிறு விடுமுறை)
மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.