
ஓவியம்: ஹரன்

நாற்றாங்கால் அமைப்பதற்காக நெல் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் இருந்த திட்டில் அமர்ந்து ஏரோட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. வங்கிக்குச் சென்றிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் சற்று நேரத்தில் வந்துவிட, அன்றைய மாநாடு ஆரம்பமானது.
“வருஷா வருஷம் மகன், மகள் இருக்குற ஊருக்கெல்லாம், பேரப்பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போய்த் தீபாவளிக்குத் துணி எடுத்துக் கொடுப்பேன். இப்போதைய சூழ்நிலைக்கு அலையறதுக்குத் தெம்பில்லை. அதனால, இந்த வருஷ தீபாவளிக்காக மூணு பிள்ளைங்க வங்கிக் கணக்குலயும் பணத்தை அனுப்பிட்டு வந்தேன்” என்று தாமதமாக வந்ததற்குத் தானாகவே விளக்கம் கொடுத்தார், வாத்தியார்.
“உங்களை மாதிரி மாசாமாசம் வருமானம் வர்றவங்க கொண்டாட வேண்டியதுதான். எங்களை மாதிரி விவசாயிகளுக்கெல்லாம் ஒரே பண்டிகை பொங்கல்தான்” என்று சொன்னார், ஏரோட்டி.
வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். “ஆழியாறு டேம்ல இருந்து வர்ற தண்ணி மூலமா பொள்ளாச்சி, ஆனைமலை சுத்து வட்டாரப் பகுதிகள்ல கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்புல நெல் சாகுபடி நடக்குது. முன்னாடி இந்தப் பகுதியில அரசு கொள்முதல் மையம் இல்லாததால, இங்க விளையுற நெல்லை இடைத்தரகர்கள் மூலமா வியாபாரிகள் கிட்டதான் விற்பனை செஞ்சுட்டு இருந்தாங்க. ‘வியாபாரிகள் குறைவான விலைக்குக் கொள்முதல் பண்றாங்க, இடைத்தரகர்கள் ஏமாத்துறாங்க’னு அடிக்கடி பிரச்னை கிளம்பவும் ‘அந்தப்பகுதியில ஒரு கொள்முதல் நிலையம் அமைக்கணும்’னு கேட்க ஆரம்பிச்சாங்க, விவசாயிகள். அதன்படி, மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்தப்பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல தற்காலிக கொள்முதல் மையத்தை அமைச்சாங்க.
இந்த வருஷம் ஜூலை மாசம் விதைச்ச நெல் இப்போ அறுவடையாகிட்டு இருக்கு. அதனால ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துல நெல் கொள்முதலை ஆரம்பிச்சாங்க. ஆனா, நெல்லுக்கான விலையை நிர்ணயிக்காம விவசாயிகளுக்கு டோக்கன் மட்டும் கொடுத்திட்டு இருந்தாங்க. அதனால விவசாயிகள் நெல்லை மையத்துல பாதுகாத்து வெச்சிருந்தாங்க. இப்படிப் பணத்துக்காக, ‘இலவு காத்த கிளி’யாட்டம் உக்காந்திருக்க முடியாத விவசாயிகள், தனியார் வியாபாரிகளுக்கு வந்த விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. வியாபாரிகள் சன்ன ரகத்தை கிலோ 15 ரூபாய் 20 காசுக்கும், மோட்டா ரகத்தை கிலோ 14 ரூபாய் 60 காசுக்கும் கொள்முதல் பண்ணுனாங்க. பெரும்பாலான விவசாயிகள் விற்பனை செஞ்சுட்ட நிலைமையில் இப்போ கொள்முதல் மையத்துல, சன்ன ரகத்துக்கு கிலோ 16 ரூபாய் 50 காசுன்னும், மோட்டா ரகத்துக்கு கிலோ 15 ரூபாய் 80 காசுன்னும் விலை நிர்ணயிச்சிருக்காங்க. அதனால நிறைய விவசாயிகள் ஏமாந்துபோயிட்டாங்க. கொள்முதல் மையத்துல காலாகாலத்துல விலை நிர்ணயம் செஞ்சிருந்தா ஏக்கருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை கூடுதல் விலை கிடைச்சிருக்கும்னு வருத்தப்படுறாங்களாம்” என்றார், வாத்தியார்.
“அதிகாரிகள் செய்யவேண்டிய வேலையை ஒழுங்கா செஞ்சாத்தான் நாடு என்னிக்கோ முன்னேறியிருக்குமே” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சீத்தாப்பழங்களை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.
“ஈரோடு மாவட்டத்துல முன்னாடி 25 ஆயிரம் ஏக்கர் பரப்புல மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடந்துச்சாம். கிழங்குக்கு நல்ல விலை கிடைச்சதால நிறைய விவசாயிகள் ஆர்வமா சாகுபடி செஞ்சுட்டு இருந்தாங்க.
முன்னாடி விவசாயிகள் சேகோ ஆலைகள், ஸ்டார்ச் தயாரிக்கிற ஆலைகள்ல நேரடியாவே விற்பனை செஞ்சாங்க. அதுலயும் இடைத்தரகர்கள், வியாபாரிகள் பெருகி குழுக்கள் அமைச்சுக்கிட்டு கொள்முதல் விலையைக் குறைக்க ஆரம்பிச்சாங்க. போன ரெண்டு, மூணு வருஷமா ரொம்பவும் குறைவான விலைக்கு மரவள்ளியைக் கொள்முதல் செஞ்சதால விவசாயிகள் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டாங்க. நிறைய பேர் மரவள்ளிச் சாகுபடியையே விட்டுட்டாங்க. அதனால கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஏக்கர் அளவுல சாகுபடிப் பரப்பு குறைஞ்சுடுச்சாம். போன வருஷம் ஒரு டன் கிழங்கு 5 ஆயிரம் ரூபாய் வரைதான் விற்பனையாகியிருக்கு. இப்போ, வரத்து குறைஞ்சு போனதால ஆலைகள்லயே நேரடிக் கொள்முதலை ஆரம்பிச்சுட்டாங்களாம். அதனால ஓரளவுக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருக்குதாம்.
இந்த நிலையில மாவட்ட நிர்வாகம் சார்பா, ஆலை நிர்வாகிகள், விவசாயிகள், அதிகாரிகள் கலந்துகிட்ட முத்தரப்புக் கூட்டம் நடந்தது. அதுல, ஸ்டார்ச் தன்மை 28 புள்ளிகள் இருக்குற மரவள்ளிக் கிழங்கை, ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்னு கொள்முதல் செஞ்சுக்கிறதா ஆலை நிர்வாகிகள் ஒத்துக்கிட்டாங்க. அதேமாதிரி கிழங்குல குறையிற ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு டன்னுக்கு 320 ரூபாய் மட்டும் குறைச்சுக்கிறதா சொல்லியிருக்காங்க. வழக்கமா ஈரோடு மாவட்டத்துல விளையிற கிழங்குல ஸ்டார்ச் தன்மை 24 புள்ளி முதல் 32 புள்ளிகள் வரை இருக்கும். அதனால இந்த வருஷம், விவசாயிகளுக்குக் கட்டுபடியான விலை கிடைக்குமாம்” என்றார், ஏரோட்டி.
“இன்னொரு முக்கியமான விஷயம்யா” என்று ஆரம்பித்த வாத்தியார், “தமிழ்நாட்டுல கால்நடை பராமரிப்புத் துறை மூலமா, 2 ஆயிரத்து 550 மருந்தகங்கள், 22 பெரிய மருத்துவமனைகள், 56 நடமாடும் மருத்துவமனைகள், 6 பன்முக மருத்துவமனைகள் இயங்கிட்டு இருக்கு. இதுல 800 மருத்துவர் பணியிடங்கள் காலியா இருக்குதாம். அதேமாதிரி கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள்னு கிட்டத்தட்ட 2 ஆயிரம் பணியிடங்கள் காலியா இருக்குதாம். அதனால கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்குறதுல நிறைய பின்னடைவுகள் இருக்குதாம்.
இப்போ பருவமழை தொடங்குற சமயத்துல ஆடு, கோழி, மாடுன்னு எல்லாத்துக்கும் தடுப்பூசி போடுவாங்க. அதனால எல்லா மருந்தகங்கள், மருத்துவமனைகள்ல அதிக கூட்டம் வருது. ஆனா, ஆள் பற்றாக்குறையால விவசாயிகளை அலைக்கழிக்கிறாங்களாம். சில இடங்கள்ல சிகிச்சைக்காகப் பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியிருக்குதாம். இந்த விஷயத்தை அமைச்சர் கண்டுக்குற தேயில்லையாம். கால்நடை மருத்துவம் படிச்சுட்டு உதவி மருத்துவரா வேலைக்குச் சேருற கனவுல, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துட்டு இருக்குறாங்களாம். உதவி மருத்துவர் நியமனம் தொடர்பா நிலுவையில இருக்கிற ஒரு வழக்கைக் காரணம் காட்டி மருத்துவர் பணியிடங்களை நிரப்புறதை அரசாங்கம் தள்ளிப் போட்டுட்டு இருக்குதாம்.
அந்த நேரத்தில் வெயில் சற்று உறைத்து அடிக்க ஆரம்பிக்கவும், “ஆடு, மாடுகளைத் தண்ணி காட்டி நிழல்ல கட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து போக, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
வாத்தியார் சொன்ன கொசுறு: “காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்”
கால்நடை பராமரிப்புத் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்கள் குறித்த விஷயம் பசுமை விகடன் நிருபரின் கவனத்துக்குச் சென்றது. இதுசம்பந்தமாக அந்த துறையின் இயக்குநர் ஆபிரகாமிடம் பேசினோம். “வழக்கமாக சுமார் 2,800 பணியிடங்களுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்கள்தான் வரும். அதுவும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்திருப்பவர்கள் மட்டும்தான் வரும்.
இந்தமுறை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி நேரிடையாக விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கு. அதனால்
7 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று நடத்தி, அதிலிருந்து பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அது முடிந்தவுடனே காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும். மற்றபடி வேறெந்த காரணங்களும் இல்லை.”
இந்த இதழில் ‘சந்தைக்கேற்ற சாகுபடி’ தொடர் இடம் பெறவில்லை.