மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

மக்காச்சோளத்துக்கு மாறும் நெல் விவசாயிகள்...

##~##

மாடுகளுக்காக வாங்கி வந்த வைக்கோலை, போர் வைத்துக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் நின்று ஏரோட்டிக்கு கோளாறு சொல்லிக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

''வைக்கப்போரு மேல ஏறி, என்னய்யா செஞ்சுக்கிட்டிருக்கே?'' என்று கேட்டுக்கொண்டே 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, அமர்க்களமாக ஆரம்பித்தது, அன்றைய மாநாடு.

''வைக்கப்போரு மேல ஏறி ஓடிப்பிடிச்சா விளையாடுவாய்ங்க... அவனவன் மழைக்கு முந்தி போரை வெச்சு முடிச்சுடணும்னு அவசர அவசரமா வேலை பாத்துக்கிட்டிருக்கான். ஒனக்கு நக்கலாக்கும்'' என்று கடுப்பாகக் கேட்டார் ஏரோட்டி.

''யோவ் விடுய்யா... சும்மாதானே கேட்டுச்சு. அதுக்குப்போய் கோவிச்சுக்குறே'' என்ற வாத்தியார், ''போன மாசம் வாங்கின வைக்கோலே இன்னும் தீரலையே. அதுக்குள்ள என்னய்யா அவசரம்?'' என்றார்.

மரத்தடி மாநாடு

''திடீர் திடீர்னு மழை வந்துடுது. ஆடு, மாடுகள சரியா மேய்க்க முடியல. வைக்கோலைத்தான போட வேண்டியிருக்கு. அதுக்குத் தோதா நம்ம காட்டுக்கு மேக்க இருக்குற சின்ராஜ் நெல் அறுத்தான். பக்கத்துலேயே கிடைக்கவும், ரேட் பேசி எடுத்துட்டு வந்துட்டேன். நம்ம காட்டுல அறுத்த கடலைக் கொடியையும் போர் கட்டி வெச்சுருக்கேன். இதை வெச்சே ரெண்டு, மூணு மாசத்துக்கு ஓட்டிடலாம்ல'' என்று பெருமிதத்தோடு சொன்னார் ஏரோட்டி.

''அதுவும் சரிதான். எப்பன்னாலும் நாமதான வாங்கிப் போடணும்'' என்ற வாத்தியார்,

''கொஞ்சம் மழை விழுகவும் ஆடு, மாடு விலையெல்லாம் ஏறிப்போச்சாம். அதில்லாம பக்ரீத் பண்டிகை வந்ததால நவம்பர் மாசம் ஆரம்பத்துலேயே ஆடு விலை 'சர்’னு ஏறிப்போச்சாம். கிருஷ்ணகிரிக்குப் பக்கத்துல குந்தாரப்பள்ளின்ற ஊர்ல, நவம்பர் 3-ம் தேதி கூடுன சந்தையில ஒரே நாள்ல 7 கோடி ரூபாய்க்கு ஆடுக விற்பனை நடந்துருக்கு. ஒரு கிடா 4 ஆயிரம் ரூபாயில இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு.

மழையால பொட்டல் காட்டுலகூட புல், பூண்டு முளைச்சுக் கிடக்குது. அதனால, வளர்க்கறதுக்காவும் குட்டி ஆடுகள அதிகமா வாங்கிட்டுப் போறாங்களாம். 40 நாள் குட்டியே 2 ஆயிரத்து 500 ரூபாய் வரைக்கும் விலை போகுதாம்'' என்று குஷியான தகவல் தந்தார்.

''ஆடு, மாடுகளுக்கு விலை ஏறுனது வாஸ்தவம்தான். ஆனா, காய்கறி விலையெல்லாம் அடிமட்டத்துக்குப் போயிடுச்சே. தமிழ்நாடு முழுக்க அங்கங்க வாழை, மஞ்சள், வெங்காயம், நெல்னு பூராம் மழையில முங்கிப்போச்சு. தேனி மாவட்டத்துல திராட்சைக்கெல்லாம் பயங்கர பாதிப்பாம். கொடியிலேயே பழம்லாம் வெடிச்சுப் போயிடுதாம். பாவம் விவசாயிகளெல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க'' என்று தானும் புலம்பினார் காய்கறி.

உடனே, ''அதான் அரசாங்கத்துல நஷ்டஈடு கொடுப்பாங்கள்ல்ல'' என்று ஏரோட்டி எதிர்பார்ப்பை எகிறவிட...

''ஆமா... கொடுத்துட்டாலும். இவங்க கொடுக்குற நஷ்டஈடு, 'யானைப் பசிக்கு சோளப்பொறி' மாதிரிதான். அதுவுமில்லாம நெல்லுக்கு மட்டும்தான் ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய்னு அறிவிச்சுருக்காங்க. மத்தப் பயிர்களைப்பத்தி ஒண்ணும் சொல்லலையே'' என்ற வாத்தியார்,  

''இந்த மாதிரியெல்லாம் ஆகறதுனாலயோ, என்னவோ... ஆத்துப்பாசனத்துல நல்லா நெல்லு விளையுற பூமியிலகூட இப்போ விவசாயிகளெல்லாம் மக்காச்சோளம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மதுரை மாவட்டத்துல அலங்காநல்லூர், பாலமேடு பக்கமெல்லாம் மக்காச்சோளத்துக்கு மாறிக்கிட்டிருக்காங்க'' என்று சொன்னார்.

''ஆமா, வம்பாடு பட்டு நெல்ல விதைச்சு, வெயில்ல விளைய வெச்சு வெள்ளத்துக்குதான் பலி கொடுக்க வேண்டியிருக்கு. அப்படியே காப்பாத்தினாலும், கொள்முதல் மையத்துல பிரச்னை. வியாபாரிககிட்டப் போய் கெஞ்சிக் கூத்தாடி மூட்டைக்கு அம்பது ரூவா சேத்து வாங்குறதுக்குள்ளாற தாவு தீந்துடுது.

மக்காச்சோளம் போட்டு விட்டா வெயில், மழைக்கு பிரச்னையில்ல. பாடும் கம்மி. சாகுபடி செலவும் கம்மி. விளைஞ்சு நிக்கிறப்பவே வியாபாரிக சாக்கத் தூக்கிட்டு வந்துடறாங்க. நெல்லைவிட லாபமும் அதிகமா கிடைக்குது. அப்பறம் எவன் நெல்லை சாகுபடி பண்ணுவான்?'' என்ற வாத்தியாரின் தகவலை, தலையாட்டி ஆமோதித்தார் ஏரோட்டி.

''எல்லாரும் இப்படியே மாறிட்டாங்கனா... அப்பறம் சோத்துக்கு என்னய்யா பண்றது?'' என்று பதறல் கேள்வியைப் போட்டார் காய்கறி.

'நல்லாக்கேளு... இந்த அறிவு, அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமில்ல இருக்கணும். கூட்டு சேந்துக்கிட்டு கொள்ளயடிச்சு நாட்டைக் கெடுத்து குட்டிச்சுவரா மாத்திக்கிட்டு இருக்காய்ங்க. விவசாயிகளெல்லாம் விவசாயத்தை விட்டதுக்கப்பறம், சோத்துக்குப் பஞ்சம் வந்தாத்தான் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் புத்தி வரும். அப்ப கூட இறக்குமதி பண்ணிக்கலாம்னுதான் சொல்வாய்ங்களே ஒழிய திருந்த மாட்டாய்ங்க.

ஆனா, என்னை மாதிரி சம்சாரிகளுக்கு கவலையேயில்லை. கால் ஏக்கர் இருந்தாப் போதும் வீட்டுக்கு தக்குன அளவுக்கு விளைய வெச்சுத் தின்னுக்குவோம். உனக்கும் வேணா அரிசியும், காய்கறியும் நான் தர்றேன்... நீ கவலைப்படாதே'' என்று ஆவேசத்தையும் அக்கறையையும் மாற்றி மாற்றிப் பொழிந்தார் ஏரோட்டி.

''அட, இது கிடக்கட்டும்யா... வழக்கம்போல அம்மா அதிரடி வேலையை ஆரம்பிச்சதுல... சிலருக்கு மந்திரி பதவி பறிபோயிருக்கு... சிலர், புது இடத்துக்கு குடி போயிருக்காங்க'' தெரியுமோ என்று கேட்டார் வாத்தியார்.

''அட நாங்கூட கேக்கணும்னுதான் இருந்தேன்ய்யா... விவசாய மந்திரியையும், கால்நடை மந்திரியையும் மாத்திட்டாங்களாம்ல... அவங்க ரெண்டு பேரும் என்ன நொம்பலத்த பண்ணினாங்க'' என்று ஆர்வத்தோடு அக்கப்போரை காய்கறி கிளற, தானும் தயாராக காது கொடுத்தார் ஏரோட்டி!

''வேளாண்மைத் துறை அமைச்சரா இருந்த செங்கோட்டையன், இப்ப தகவல் தொழில்நுட்பத் துறைக்குப் போயிருக்கார். வேளாண்மைத் துறைக்கு கிணத்துக்கடவு எஸ். தாமோதரன் அமைச்சராகியிருக்கிறார். கால்நடைத் துறையை, சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.கே.எம். சின்னையாகிட்ட பறிகொடுத்திருக்கார் சிவபதி. கால்நடைத்துறை, கைத்தறி மற்றும் ஜவுளித்துறையை வெச்சுருந்த பி.வி. ரமணா சுற்றுச்சுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அமைச்சராகியிருக்கார்''

''இந்த சங்கதியெல்லாம்தான் பேப்பர்ல, டி.வி-யில எல்லாம் சந்தி சிரிக்குதே... எதுக்காக வேளாண்மைத்துறை அமைச்சர மாத்தினாங்க... அதைச் சொல்லுய்யா வாத்தியாரே!''

''ம்... ம்... சொல்லாம எங்க போயிட போறேன். அந்தம்மா பதவி ஏத்த கையோட, 'தமிழ்நாட்டுல விவசாயத் துறையை முதன்மைத் துறையா கொண்டு வருவேன்னு பிரமாதமா அறிவிச்சாங்க. ஆனா, அதுக்குத் தகுந்த மாதிரி விவசாயத்துறையில எந்த முன்னேற்றமும் பெருசா இல்லை. சொல்லப் போனா... முந்தைய ஆட்சியைவிட கீழ போயிக்கிட்டிருக்குங்கற மாதிரி புகார்கள் பறந்திருக்கு. விருப்பமே இல்லாம அந்தத் துறையில ஒட்டிக்கிட்டிருக்கற மாதிரிதான் இருக்காரு செங்கோட்டையன்னு வேற சொல்லியிருக்காங்க. அதான், டமால்னு தூக்கி அடிச்சுட்டாங்க' அப்படிங்கறது, செங்கோட்டையனோட எதிர்கோஷ்டி சொல்ற காரணம்''

''அப்ப, ஆதரவு கோஷ்டி சொல்ற காரணம் ஒண்ணும் இருக்குமே!''

''இல்லாமலா, அதாவது, 'விவசாயத் துறைங்கிறது எந்நேரமும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான துறை. அதனால, கட்சி விஷயங்கள்ல தீவிரமா அவரால கவனம் செலுத்த முடியல. அதோட, சீக்கிரமே சொத்துக் குவிப்பு வழக்குல அம்மா உள்ள போனாலும் போயிடுவாங்க. அந்த சமயத்துல கட்சி வேலைகளைப் பார்க்க அனுபவசாலிங்க தேவைப்படுவாங்க. அதனாலதான், பெருசா வேலையில்லாத தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அவர மந்திரியாக்கியிருக்காங்க' அப்படினு ஆதரவு கோஷ்டி சொல்லுது'' என்ற வாத்தியார்,

''அமைச்சருங்க மட்டுமில்ல... அதிகாரிக மட்டத்துலயும் பந்தாடியிருக்காங்க அம்மா. கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரா இருந்த மணிவாசன் ஐ.ஏ.எஸ்., இப்ப வேளாண்மைத்துறை ஆணையர் பதவிக்கு வந்திருக்கார். வேளாண்மைத்துறை ஆணையரா இருந்த சந்தீப் சக்சேனாவை, வேளாண் உற்பத்தி ஆணையர் பதவிக்கு மாத்தியிருக்காங்க'' என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒன்றிரண்டுத் தூறல்கள் விழ ஆரம்பிக்க,

''வைக்கப்போரை தார்ப்பாய் போட்டு மூடிட்டு வந்துடறேன்'' என்று ஏரோட்டி எழுந்து ஓட... முடிவுக்கு வந்தது, மாநாடு.