
சோற்றுக்கற்றாழை...- மகளிர் பிணித் தீர்க்கும் மாமருந்து! மருத்துவம் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் குறிப்பிடப்படும் தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘சோற்றுக்கற்றாழை’.
சோப்பு, ஷாம்பு, அழகு கிரீம்கள் போன்ற பொருட்களில் பலவற்றில் ‘ஆலோவேரா’ (Aloevera) சேர்க்கப்பட்டது என்று விளம்பரப்படுத்துவதைப் பார்த்திருப்போம். இந்த ஆலோவேராதான் சோற்றுக்கற்றாழை. தமிழ் மருத்துவத்தில் மிகவும் இன்றியாமையாத மூலிகை. இது குமரிப் பெண்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் மூலிகையாக இருப்பதால், இதற்கு ‘குமரி’ என்று பெயரிட்டுள்ளனர், சித்தர்கள். அந்தளவுக்கு மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... சோற்றுக்கற்றாழையை வெளி மருந்தாகப் பிரயோகிப்பதில் பெரிதாக நன்மை கிடைப்பதில்லை. அதை உள்மருந்தாக எடுத்துக் கொள்ளும்போதுதான் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

18 வகை கற்றாழைகள்!
த.வி.சாம்பசிவம்பிள்ளை எனும் மாபெரும் தமிழறிஞர், அவருடைய அகராதியில்... கருங்கற்றாழை, நார்க்கற்றாழை, இலைக்கற்றாழை, சோற்றுக்கற்றாழை, காட்டுக்கற்றாழை, செங்கற்றாழை, எருமைக் கற்றாழை, மலைக்கற்றாழை, ஆணைக்கற்றாழை, வெண்கற்றாழை, பேய்க்கற்றாழை, மருள்கற்றாழை, வரிக்கற்றாழை, துலுக்கக்கற்றாழை, சிறு கற்றாழை, சீமைக்கற்றாழை, சிவப்புவரிக் கற்றாழை, நாகப்படக்கற்றாழை என 18 வகையான கற்றாழைகள் குறித்து விவரித்துள்ளார்.
ஆனால், இன்றைய நிலையில், சோற்றுக்கற்றாழை, ரயில் கற்றாழை, நார்க் கற்றாழை ஆகிய மூன்று வகைகளைத்தான் மக்கள் அறிந்துள்ளனர். இவற்றில் நார்க்கற்றாழையை வேலிப்பயிராகப் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து நார் எடுத்துப் பலவிதங்களில் உபயோகப் படுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்கள் அருகே சில இடங்களில் பெரிதாக வளர்ந்திருப்பவை, ரயில் கற்றாழை. இந்த இரண்டு வகைகளும் அமெரிக்காவில் இருந்து 19, 20-ம் நூற்றாண்டுகளில் இங்குக் கொண்டு வரப்பட்டவை. தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டது, சோற்றுக்கற்றாழை. இது சுமார் மூன்றடி உயரம் வரை வளரக்கூடியது. இதில், சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், போலிக் அமிலம், சுண்ணாம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், சிறியளவில் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

சூட்டைத் தணிக்கும்!
சித்த மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான தைலங்கள், லேகியங்கள், பற்பங்கள் ஆகியவை சோற்றுக்கற்றாழை கொண்டு செய்யப் படுகின்றன. சோற்றுக்கற்றாழையிலிருந்து எடுத்த சோற்றை (சோற்றுக்கற்றாழையின் தோலைச் சீவிய பகுதியைச் சோறு என்று அழைப்பர்) கழுவி அப்படியே பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடற்சூடு தணியும். ஆனால், குளிர்ச்சி உடம்பினர் இப்படிச் சாப்பிடுவது ஏற்புடையதல்ல. சோற்றுக்கற்றாழை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பைப் பலவீனம், குழந்தையின்மை ஆகிய மூன்று முக்கிய வியாதிகளுக்கு மருந்தாக விளங்குகிறது. அதோடு, சூதகவாயுவை சீர்ப்படுத்தி மேகச்சூடு மற்றும் மூலச்சூடு ஆகியவற்றைத் தன்னிலைப்படுத்தும் இயல்பு கொண்டதாகவும் இருக்கிறது.

வந்த நோய்களைக் குணமாக்குவது மருந்து. நோய்கள் வராமல் காப்பது, காயகற்பம். இந்தக் காயகற்ப முறைகள், சித்தர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் அறிவுக்கொடை. அந்த வகையில் தேரன் என்னும் சித்தர், ‘வற்றாக்குமரி தன்னை வற்றலென வுண்ணின்’ எனத் தொடங்கும் பாடலில் கற்றாழையை உலர்த்தி உண்டு வர இளமையாகவும், வன்மையுடனும் நூறாண்டுகள் வாழலாம் என எழுதியுள்ளார்.
நன்கு கழுவி எடுக்கப்பட்ட கற்றாழைச் சோற்றை 3 முதல் 5 கிராம் அளவு வரை திரிகடுக சூரணத்துடன் (சுக்கு, மிளகு, திப்பிலி பொடிகள்) சேர்த்து நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து காலையில் மட்டும் 48 நாள்கள் உண்டு வந்தால் தோல்பிணிகள், மூலம், பௌத்திரம் ஆகியவை நிரந்தரமாகக் குணமாகும்.
கற்றாழைச் சாறு!

மற்ற மூலிகைகளைப்போல, தண்ணீர் சேர்த்து இடித்தோ, பிழிந்தோ கற்றாழையில் சாறு எடுக்க முடியாது. கற்றாழைச் சோறு வழவழப்பாக இருப்பதால், இடிபடாது. இதற்கெனப் பிரத்யேக முறையைக் கையாண்டிருக்கிறார்கள், நம் முன்னோர். நன்றாகக் கழுவப்பட்ட கற்றாழைச் சோறுடன் சிறிது நெல் உமி சேர்த்துப் பிசைந்து ஒரு துணியில் பொதிந்து கட்டித் தொங்கவிட்டு, கீழே ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டால், 5 மணி நேரத்தில் சோற்றில் உள்ள சாறு முழுவதும் வடிந்துவிடும். உமிக்குப் பதிலாகக் கடுக்காய்ப்பொடி அல்லது படிகாரப் பொடியும் சேர்க்கலாம். படிகாரப் பொடி சேர்த்து எடுக்கப்பட்ட கற்றாழைச் சாற்றை கண்வலியின்போது கண்களில் விட்டால் ஒரே நாளில் குணமாகும். இம்மருந்தில் ‘மெட்ராஸ் ஐ’ நோய் குணமாவதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
கற்றாழை குறித்து இன்னும் கூடுதல் விவரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
-வளரும்.
சுளுக்கு நீக்கும் மூசாம்பரம்!

சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம். இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம்.
இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு, சுளுக்குச் சதைச்சிதைவு ஆகிய நிலைகளில் மூசாம்பரத்தை வெந்நீரில் கரைத்துக் குழம்புப் பக்குவத்தில் இளஞ்சூட்டில் பூசினால் குணமாகும். 2 கிராம் மூசாம்பரத்துடன் 5 கிராம் குல்கந்து சேர்த்து அரைத்து காலை, மாலை இருவேளை உணவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் உண்டு வந்தால், முறை தவறிய மாதவிடாய், குறைந்த மாதவிடாய் ஆகியவை குணமாகும். கரியபவளம் கசப்பாகவும், குமட்டலான மணத்துடனும் இருப்பதால் குல்கந்து சேர்த்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இதை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
வயிற்றுளைச்சல் நீங்க கற்றாழைச் சாறு!

நெல் உமி சேர்த்து எடுக்கப்பட்ட 50 மில்லி கற்றாழைச் சோற்றுடன், 10 கிராம் பசுவின் வெண்ணெய், 5 கிராம் பனங்கற்கண்டு, 2 கிராம் வால் மிளகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து குடித்தால் சிறுநீர் எரிச்சல், உடல் அரிப்பு, உடற்சூடு ஆகியவை உடனே நீங்கும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 வேளை என 3 நாட்களுக்கு உண்டு வந்தால் நன்மை கிடைக்கும்.
இரத்தமும் ஜலமுமாக மலம் கழியும் வயிற்றுளைச்சல் நோய்க்கு... ஒரு தேக்கரண்டி சோற்றுக் கற்றாழைச் சோறு, அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை கொடுத்தால் குணமாகும். அமீபிக் சீதபேதி நோயும் இம்மருந்தில் குணமாகும்.
மேக நோயைத் தீர்க்கும் குமரித் தைலம்!
குமரித்தைலம் (உள் மருந்து):
விளக்கெண்ணெய்-200 மில்லி
கற்றாழைச் சாறு- 200 மில்லி
வெங்காயச் சாறு- 100 மில்லி
பனங்கற்கண்டுப் பொடி- 100 கிராம்
இந்த நான்கையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்கு காய்ச்சி நீர் வற்றிய பதத்தில் இறக்கவும். இதை தினமும் இரவில் 10 மில்லி அளவு உண்டு வர மந்தம், வயிற்றுவலி, ரணம், குன்மக்கட்டி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை தீரும். 5 மில்லி அளவு தினமும் இருவேளைகள் உண்டு வர அரிப்பு, தினவு, தாது இழப்பு, மேகநோய், பலவீனம், எரிச்சல், அக புற புண்கள் ஆகியவை தீரும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும்.
குமரித்தைலம் (புறமருந்து) :
கற்றாழைச் சோற்றை விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துத் தலைமுழுகி வந்தால் நன்கு முடி வளரும். தூக்கம் உண்டாகும்.
தமிழ் மருத்துவக் காவலர்!

த.வி.சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டுள்ள தமிழ் அகராதியைப் புரட்டாமல் தமிழ் மருத்துவத்தில் ஓர் ஆய்வுக்கட்டுரைகூட எழுத முடியாது. அந்தளவுக்கு ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனி ஆளாகச் சாதித்தவர் இவர். தமிழ் மருத்துவம் மட்டுமல்லாது, தமிழின் தொல் அறிவியல் சார்ந்த அனைத்து சொற்களுக்கும் அகராதி படைத்தவர்.
1880-ம் ஆண்டு பிறந்த இவர் காவல்துறையில் எழுத்தராகப் பணி புரிந்தார். 1908-ம் ஆண்டு முதல் 1933-ம் ஆண்டு வரை உழைத்துத் தேடி வெளியிட்டதுதான் இந்த அகராதி. 1,200 பக்கங்களில் 80 ஆயிரம் கலைச்சொற்களைக் கொண்டது, இவ்வகராதி. சொத்துகளை விற்று, ஓய்வூதியப்பணத்தை முன்னரே பெற்று இவ்வகராதியை உருவாக்கிய சாம்பசிவம் பிள்ளை, 1952-ம் ஆண்டில் இயற்கை எய்தினார். தமிழ் மருத்துவச் சொற்களுக்கு வழிகாட்டிய இவரைத் ‘தமிழ் மருத்துவக்காவலர்’ என்று அழைப்பது மிகையாகாது. இவரது அகராதியைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அகராதித் தொகுதிகள், சென்னை, அரும்பாக்கம் இந்திய மருத்துவத்துறை நூலகத்தில் கிடைக்கின்றன.
தேரையர்!

இவர் தமிழ் மரபில் வந்த சித்தர். தேரையர், தேரன், தேரர் என்று அழைக்கப்படுகிறார். சித்தர் பாடல்களிலே, சிறப்பான இலக்கண அமைதியும், உயர்ந்த இலக்கிய நடையும் உடைய பாடல்கள் இவருடையவை. தேரன் கரிசல், தேரன் வெண்பா, தேரன் மருத்துவப்பாரதம்... என இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள், தேரையர் பெயரால் வழங்கப்படுகின்றன. அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் என்னும் பொருளில் தேரர் என்றும், பௌத்த குருக்களுக்கு தேரர் என்ற பட்டம் வழங்கப்படுவதும் ஆய்வுக்குரியது. எது, எப்படியாயினும் தேரர் நூல்களில் சிறந்த, தெளிந்த மருத்துவமுறைகள் பதிவாகியுள்ளன. தேரையர்தான் கற்றாழையைக் கற்பமாக உண்பது பற்றி அதிகம் எழுதியுள்ளார்.