மற்ற எபிசோடுகள்
Published:Updated:

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2
பிரீமியம் ஸ்டோரி
News
“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

பயணம்துரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

சென்ற இதழ் தொடர்ச்சி...

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள், தனியார் நிறுவன ஊழியர் மோகன், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் பார்த்திபன், தனியார் நிறுவன கணக்காளர் செந்தில், பட்டதாரி ரஞ்சித், கல்லூரி மாணவிகள் யாழினி, சிந்து ஆகியோர். அனைவரும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை நாம் அழைத்துச் சென்றது, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள புண்ணமை கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ‘முன்னோடி இயற்கை விவசாயி’ முரளியின் பண்ணைக்கு!

கடந்த இதழில் இயற்கை விளை பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்துக் கேட்டிருந்தார், ரஞ்சித். அதற்கு பதிலளித்த முரளி,  “இப்போது இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்துறது அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. 17 வருஷத்துக்கு முன்னாடி இயற்கை அங்காடி ஆரம்பிச்சப்போ விளைபொருட்கள கொண்டு வர்றது சுலபமான காரியமில்ல. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செஞ்சு இயற்கை காய்கறிகளைத்தேடி அலைஞ்சிருக்கேன். ஆனா, இப்போ செல்போன் இருக்கிறதால வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாவே  விவசாயிகள்கிட்ட என்ன இருக்குதுனு உடனடியா தெரிஞ்சுக்க முடியுது. அத வெச்சு வாடிக்கையாளர் கேக்கற பொருட்களையும் தருவிச்சுக் கொடுக்க முடியுது. இயற்கை விளைபொருட்கள மார்க்கெட் பண்றது இப்போ எளிமையாகி இருக்கு. ஆனா, இதுல கவனத்துல வெச்சுக்கிறது  ஒண்ணே ஒண்ணுதான்.

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2



இதப் பத்தி நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வாரு. ‘விவசாயியும் நல்லா இருக்கணும், அவன்கிட்ட வாங்கி விற்பனை செய்யுற கடைக்காரனும் நல்லா இருக்கணும், அதை வாங்கிச் சாப்பிடுற மக்களும் நல்லா இருக்கணும். இதுல எது விட்டுப் போனாலும் விவசாயிக்குத்தான் பாதிப்பு’னு அடிக்கடி சொல்வார்” என்று முரளி சொல்லி முடிக்கவும், மதிய வேளை நெருங்கவும் சரியாக இருந்தது.

அனைவருக்கும் சைவ உணவு பரிமாறப்பட்டது. உண்ட களைப்பில் ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் சற்று ஓய்வெடுத்தனர். பிறகு மரம் நடத் தயாராக இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்த இடத்தில் நின்ற முரளி, கன்றுகளைச் சுற்றி மூடாக்கு இடப்பட்டிருப்பதைக் காட்டி அதுகுறித்து அனைவருக்கும் விளக்கினார்.

“மண்ணுல ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறதுக்கு மூடாக்கு முக்கியம். இயற்கை விவசாயத்துக்குத் தண்ணீர் மேலாண்மை எப்படி முக்கியமோ, அதே மாதிரி முக்கியமானது, மூடாக்கு. வயல்ல விழுகிற இலை தழைங்களை எடுத்து தென்னையோட அடிப்பகுதியில போட்டுட்டா போதும். அதுதான் மூடாக்கு. இந்த இலைங்க மட்கி தென்னைக்கு உரமாயிடும்” என்ற முரளி, ஒரு நாள் விவசாயிகளின் பண்ணைக்கு வந்ததன் நினைவாக ஒரு புளியமரக்கன்றை சிந்துவும் யாழினியும் நட. “மரக்கன்று  நட்டதும் சுத்தி இருக்குற மண்ணை நல்லா இறுக்கமா இருக்குற மாதிரி மிதிச்சு விடணும். அப்போதான் நல்லா வேர் பிடிச்சு வளரும்” என்றார் முரளி.

அதே முறையில் அனைவரும் கன்றுகளை நடவு செய்தனர். அடுத்து அனைவரையும் நெல் வயலுக்கு அழைத்துச் சென்ற முரளி, கோனோ வீடர் மூலம் களைகளை அழுத்தி விடும் முறையைக் கற்றுக்கொடுத்தார். அனைவரும் நெல் வயலின் ஒரு பகுதியில் களைகளை அழுத்திவிட்டனர்.

இதில் களைப்படைந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து களைப்பைப் போக்கினார், முரளி. அந்த நேரத்தில் சூரியன் மேற்கே சரியத்தொடங்க அனைவரும் முரளியிடம் விடைபெற்றனர்.

-பயணம் தொடரும்  தொடர்புக்கு, முரளி செல்போன்: 93806 91203.

பண்ணையின் சிறப்புகள்!

 52 ஏக்கரில் மாமரங்கள்...  ஊடுபயிராக பல வகை பழ மரங்கள்

 15 நாட்டு மாடுகள்

 பண்ணையிலேயே இடுபொருட்கள் தயாரிப்பு

 வாழை, நெல், காய்கறி, கீரை சாகுபடி

 சூ
ரிய சக்தி மின் விளக்குகள், பம்ப்செட்கள்

சதுரப்பாத்தியும், மேட்டுப்பாத்தியும்!

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

கடந்த இதழில் ஒரு நாள் விவசாயி பகுதியில் இடம் பெற்ற புகைப்படத்தில், சதுர வடிவ பாத்தி அமைப்பது குறித்து முரளி விளக்கம் கொடுக்கிறார் என்று தவறாக இடம் பெற்றுள்ளது. சதுர வடிவ மேட்டுப்பாத்தி என்பதே சரியானது.

நீங்களும் ஒருநாள் விவசாயி, ஆக வேண்டுமா?

‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே
044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி
வரை சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக் கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.

ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்!

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

மோகன், தனியார் நிறுவன ஊழியர், சென்னை: “ரொம்ப புது விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். புது அனுபவம் கிடைச்சிருக்கு.  இந்த ஒரு நாள்லயே விவசாயம் பண்ணலாங்கிற முடிவுக்கு வந்திட்டேன்.”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

ரஞ்சித், பட்டதாரி, சென்னை: “விவசாயத்த நல்லா தெரிஞ்சுக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு இது. இயற்கைப் பொருட்களையும் வாங்கி விற்பனை செய்யலாம்னு யோசனையில் இருந்தேன். அது குறித்தும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்பத்துறை, சென்னை: “விவசாயம் சம்பந்தமா நிறைய தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். இந்த நாள் ரொம்ப அருமையான நாளா இருந்தது. ஏற்பாடு செய்த ‘பசுமை விகட’னுக்கு ரொம்ப நன்றி”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

செந்தில்குமார், கணக்காளர், சென்னை:  “சம்பந்தமே இல்லாத துறையில இருக்குற எனக்கு விவசாயத்தைக் கத்துக்கறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கீங்க. எனக்கும் விவசாயம் செய்யணும்னு ஆசை வந்திருச்சு.”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

பார்த்திபன், தகவல் தொழில்நுட்பத்துறை, சென்னை: “ஒரு நாள் விவசாயியா என்னைத் தேர்ந்தெடுத்ததுக்கு ரொம்ப நன்றி. எனக்கும் விவசாயத்து மேல அதிக ஆர்வம் வந்திடுச்சு.”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

யாழினி, கல்லூரி மாணவி, சென்னை: “பசுமை விகடனின் நல்ல முயற்சி, இந்த ஒருநாள் விவசாயி திட்டம். விவசாயம்னா என்னன்னு தெரியாத எனக்கு, இவ்வளவு இருக்குனு முரளி ஐயா சொல்லிக் கொடுத்திருக்கார்.”

“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

சிந்து, கல்லூரி மாணவி, சென்னை: “சொந்த ஊர் மதுரைப்பக்கம். இப்போ இருக்குறது சென்னை. விவசாயத்துல எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நாள் வயல்ல  இறங்கினதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு காரணமா இருந்த பசுமை விகடனுக்கு நன்றி.”