
மாத்தியோசிஓவியம்: ஹரன்
அது ஒரு சனிக்கிழமை மதிய நேரம். செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்குப் போகும் மின்சார ரயில் வண்டியில் உட்கார்ந்திருந்தேன். செங்கல்பட்டுக்கு அடுத்து, கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்கள் இருக்கிற, மகேந்திரா சிட்டி பக்கத்துல உள்ள பரணூர் ரயில் நிலையத்துல வண்டி நின்னுது.

அப்போ, சராசரியா 30 வயசு மதிப்புள்ள நாலு இளைஞர்கள் வண்டியில ஏறினாங்க. சொல்லி வெச்ச மாதிரி, அந்த இளைஞர்கள் என்னோட எதிர்ப்பக்க இருக்கையில வந்து உட்கார்ந்தாங்க.
‘‘பழனிவேல், நீ ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். மாசமானா, சொளையா, ஒரு லட்சத்து இருபது ஆயிரம் சம்பளம் கிடைக்குது. வாரத்துல ரெண்டு நாள் விடுமுறை. 24 மணி நேரமும் இணைய வை-பை. இன்னும் ஒரு வருசத்துல, கல்யாணம். சொந்தமா வீடு, கார் வாங்கி வாழ்க்கையில செட்டிலாயிடலாம். இது போதாதுன்னா, அமெரிக்காவுக்குப் போனா, இன்னும் பல வசதிகளோட இருக்கலாம். சரி, இதுதெல்லாம் வேண்டாம்்னா... இங்கேயே இன்டர்நெட் மூலமா, ஒரு ஸ்டார்ட் அப்
(Start Up) (புதிய கருத்துருவை உருவாக்கி, அதைத் திட்டமாகத் தீட்டி, தொழில் தொடங்குபவை ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்) தொடங்கலாம். ஆனா, நீ எடுத்திருக்கிற முடிவு’’னு அந்த இளைஞர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள சத்தமா சிரிப்பு வந்து விழுந்துச்சு. பெட்டி, படுக்கையோட இருந்த, பழனிவேல்தான் அதுன்னு புரிஞ்சிகிட்டேன்.
‘‘நீங்கள் எல்லாரும், என் மேல வெச்சிருக்கிற அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. ஆனா, என்னோட முடிவுல உறுதியா இருக்கேன். நானும் ‘ஸ்டார்ட் அப்’தான் தொடங்கப்போறேன். ‘ஸ்டார்ட் அப்’ன்னா கம்யூட்டர் சம்பந்தமாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை. மாட்டுப் பண்ணையை உருவாக்கி, லாபகரமா மாடு வளர்க்கிறதும், மரங்கள் வளர்க்கிறதும்... கூட ஸ்டார்ட் அப் தான்.
என்னோட கம்ப்யூட்டர் அறிவை நான் தொடங்கப் போற நாட்டு மாட்டுப் பண்ணைக்கும் பயன்படுத்தப் போறேன்.
தர்மபுரி பக்கத்துல இருக்கிற, எங்க ஊருக்கு இன்னும்கூட பேருந்து வசதி கிடையாது.
தினமும் ஆறு கிலோமீட்டர் நடந்து போய்த்தான் படிச்சேன். பள்ளிக்கூடம் போயிட்டு வந்து, எங்க வீட்டுத் தோட்டத்துல களையெடுப்பேன்; ஆடு மாடுகளுக்குத் தீவனம் போடுவேன். அதனால, மாட்டுப் பண்ணை தொடங்கி, அதை வெற்றிகரமா நடத்த முடியும்ங்கிற நம்பிக்கையை, என்னோட கல்வியும், இளமைக்கால வாழ்க்கையும் அனுபவப் பாடம் கொடுத்திருக்கு.
கடந்த ஒரு வருஷமா, நாட்டுமாடுகள் வளர்ப்பு சம்பந்தமான தகவல்களை, விவசாயப் பத்திரிகைகள், இணையதளங்கள் மூலமா திரட்ட ஆரம்பிச்சேன். பல பண்ணைகளுக்கு நேராவே போய்ப் பார்த்தேன். பல்கலைக்கழகங்களுக்கும்கூட போனேன். மாடு வளர்ப்புங்கிறது, பாலுக்காக மட்டும்தான்னு பல்கலைக்கழக விஞ்ஞானிங்க சொன்னாங்க.
ஆனா, அனுபவ விஞ்ஞானிகளான நம்ம விவசாயிங்க, மாட்டைப் பால் கொடுக்கும் இயந்திரமா பார்க்கக் கூடாது. அதை அள்ள அள்ளக் குறையாத செல்வம் கொடுக்கும் உழைப்பாளியா பார்க்கணும். இதனாலதான், நம்ம முன்னோருங்க, பசு மாடுகள, ‘காமதேனு’னு பேரு வெச்சாங்க. மாடுன்னு சொன்னா, செல்வம்னுகூட பொருள் உண்டு.
நம்ம நாட்டு மாட்டுப் பால்ல, ஒப்பீட்டளவுல, வெளிநாட்டு இன மாட்டுப்பாலைவிட, கூடுதல் சத்து இருக்கு. ‘நாட்டு மாட்டுப் பால்’னு பாக்கெட் போட்டு, விற்பனை செய்யப் பெரிய வாய்ப்பிருக்கு. நம்ம நாட்டு மாட்டுப் பால்ல நிறைய மருத்துவ குணம் இருக்கு. நாட்டு மாடுகளோட சிறுநீர் மூலமா ‘அர்க்’ங்கிற மருந்தை உருவாக்க முடியும். புற்றுநோய் தொடங்கி, பல விதமான நோய்களைக் குணப்படுத்தக் கூடிய திறன் இதுக்கு உண்டு. அதனாலதான், பல நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்யுறாங்க. பசுஞ்சாணம் மூலமா பஞ்சகவ்யா, அமுதகரைசல், ஜீவாமிர்தம் தயாரிக்கலாம்.
மயிலாடுதுறை பக்கத்துல, பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் எடுக்குற, பால் பண்ணையைக்கூட பார்த்திருக்கேன். பசுஞ்சாணம் மூலம் உருவாகுற திருநீற்றுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கு. பசு மூலமா பால், சாணம், சிறுநீரைப் பயன்படுத்தி... குளியல் சோப்பு, பற்பொடி, ஷாம்பு எனப் பல வகையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். பசுப் பொருட்கள் மூலமா 25-க்கும் மேலான ஆயுர்வேத மருந்துகளும்கூடத் தயாரிக்க முடியும். டாக்டர், இன்ஜினீயர், வழக்கறிஞர்களோட உதவி அடிக்கடி தேவைப்படாது. ஆனா, ஒரு நாளைக்கு மூணு வேளையும், உணவு உற்பத்தி செய்யுற விவசாயிகளோட உதவி தேவை.
இதனாலதான், ‘உழவே தலை’னு திருவள்ளுவர்கூட சொல்லி வெச்சிருக்காரு. நம்ம நாட்டுல உள்ள இயற்கை வளத்தையும், நாட்டு மாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கிட்டா மக்களோட வாழ்க்கைத் தரமும் உயரும். நாடும் முன்னேறும். இயற்கைய நம்பி நான் தொடங்குற இந்த முயற்சிக்கு, நீங்கள் எல்லோரும், வாய் நிறைய வாழ்த்து சொல்லக்கூடிய நாளும் வரும்’’னு அந்த இளைஞர் சொல்லி முடிக்கவும், ரயில் வண்டி சென்னை, கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து சேரவும் சரியா இருந்துச்சு.