
ஓவியம்: ஹரன்

வயலில் விதைப்பதற்காக விதை வெங்காயத்தை வாங்கி மாட்டு வண்டியில் கொண்டு வந்துகொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வழியில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் நடந்து வர... இருவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார், ஏரோட்டி. தோட்டத்துக்கு வந்தவுடன், வெங்காய மூட்டைகளை இறக்கி பத்திரப்படுத்திவிட்டு வந்து அமர்ந்த ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கிவைத்தார்.
“தமிழ்நாட்டில் 24 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருக்குதாம். நல்ல மண் வளம் இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாததால அந்த நிலங்கள் வீணா கிடக்குதாம். அதுல பல லட்சம் ஏக்கர் நிலத்துல சீமைக்கருவேல முள் மரங்கள்தான் மண்டிக்கிடக்குதாம். அந்த மாதிரி தரிசு நிலங்கள்ல சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், சாமை, தினை, வரகுனு சிறுதானியங்களை உற்பத்தி செய்றதுக்காகத் தமிழக வேளாண்துறை புதிய திட்டத்தைப் போட்டிருக்கு.
வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உள்ளிட்ட துறைகள் இணைந்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போகுதாம். முதற்கட்டமா தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடினு ஐந்து மாவட்டங்கள்ல இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போறாங்க. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுற பகுதிகள்ல உள்ள விவசாயக்குழுக்களை ஒருங்கிணைச்சு மண் வளம், நீராதாரத்தை மேம்படுத்திச் சிறுதானிய விதைகளைக் கொடுத்து விதைக்க ஏற்பாடு செய்யப் போறாங்களாம்” என்றார், ஏரோட்டி.
“ஆமாய்யா... நானும் கேள்விப்பட்டேன். இதேமாதிரி இன்னொரு செய்தியும் எங்கிட்ட இருக்கு” என்ற வாத்தியார்,
“இப்போலாம் எங்க பார்த்தாலும் மக்கள், இயற்கை விளைபொருட்களைத் தேட ஆரம்பிச்சிருக்கிறதால, தமிழ்நாட்டுல இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வும் பெருகிட்டு இருக்கு. நிறைய விவசாயிகள் இயற்கைக்கு மாறினாலும், அவங்களோட இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க.
சரியான விலை கிடைக்காம வழக்கமான சந்தைக்குக் கொண்டு போய் ஏலத்துலதான் விடுறாங்க. அதனால அந்தப் பொருளோட மதிப்பு வீணாகிடுது. அதனால, அரசாங்கம் இதுக்கு ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாளா இயற்கை விவசாயிகள் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு இப்போ ஒரு வழி பிறந்திருக்கு. இயற்கை விவசாயிகளுக்கு உதவி செய்ற நோக்கத்துல தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, இயற்கை விவசாயிகளோட பட்டியலைத் தயார் செஞ்சுட்டு இருக்கு.
இப்படி அடையாளம் காணப்படுற இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைச்சு குழுக்களை உருவாக்கி, அந்தக் குழுக்கள் மூலமா, இயற்கை அங்காடிகள் அமைச்சு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப் போறாங்களாம். அதோட மானியங்கள் உள்ளிட்ட இன்னும் நிறைய திட்டங்களையும் செயல்படுத்தி, இயற்கை விளைபொருட்களை ஏற்றுமதி செய்றதுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரப் போறாங்களாம். இயற்கை விவசாயிகள் அவங்க பகுதியில இருக்குற வட்டார அலுவலகங்கள்ல அவங்களோட பெயர்களைப் பதிவு செஞ்சிட்டா பட்டியல்ல இடம் பெற முடியுமாம். இப்போதைக்கு இயற்கை விவசாயச் சான்று இல்லாதவங்களும் பெயர் பதிவு செஞ்சுக்கலாமாம். சான்று இல்லாத விவசாயிகளோட தோட்டத்தை ஆய்வு செஞ்சு அவங்களுக்கு இயற்கை சான்றிதழ் வாங்கித் தர்றதுக்கான வேலைகளையும் தோட்டக்கலைத்துறையே செய்யப் போகுதாம்” என்றார்.
“பரவாயில்லையே... நல்லாருக்கே” என்ற காய்கறி, ஏரோட்டியைப் பார்த்து, “நீ பதிவு செஞ்சுட்டியாய்யா?” என்று கேட்டார்.
“நான்லாம் எப்பவோ பதிவு செஞ்சாச்சு” என்ற ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“தமிழ்நாட்டுல நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர் மாவட்டங்கள்ல அதிகளவிலான கறிக்கோழி, முட்டைக்கோழிப் பண்ணைகள் இருக்கு. இந்த மாவட்டங்கள்ல இருந்துதான் அதிக அளவுல கறிக்கோழிகளும், முட்டைகளும் கேரளாவுக்குப் போகுது. கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, நாகர்கோவில், புளியரைனு நிறைய ஊர்கள் வழியாக கேரளாவுக்குக் கோழிகள் போகுது. கேரளாவுல கொஞ்ச நாளா பறவைக்காய்ச்சல் பரவினதால, அங்க ஆயிரக்கணக்கான கோழிகளையும் வாத்துகளையும் அழிச்சாங்க. பறவைக்காய்ச்சல் பயத்தால கேரளாவிலும் தமிழ்நட்டிலும் கறிக்கோழி விற்பனை சரிஞ்சிருக்கு. அதனால, கறிக்கோழி விலையும் சரிஞ்சிட்டே இருக்கு. கேரளாவுக்குப் போயிட்டு வர்ற வாகனங்கள் மூலமா தமிழ்நாட்டுல பறவைக்காய்ச்சல் பரவுற அபாயம் இருக்குனு அதிகாரிகள் எச்சரிச்சிருக்காங்க.
அதனால் கேரளாவுல இருந்து வர்ற வாகனங்களைத் தமிழ்நாட்டு எல்லைகள்ல நிறுத்தி, மருந்து தெளிக்கிற வேலைகளை அதிகாரிகள் செய்துட்டு இருக்காங்க. அதோட, இங்க இருக்குற பண்ணைகள்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கறதுக்கும் அதிகாரிகள் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்க. முக்கியமா ‘கேரளாவுல இருந்து வாத்துகளையோ, வாத்து முட்டைகளையோ கண்டிப்பா கொண்டு வர வேணாம்’னு அதிகாரிகள் எச்சரிச்சிருக்காங்களாம்” என்றார் “ஆமாய்யா, நான்கூட பயந்துகிட்டு கோழிக்கறியே வாங்குறதில்லை. தீபாவளிக்குக்கூட ஆட்டுக்கறிதான் எடுத்தேன்” என்ற காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு அன்னாசி பழக் கீற்றுகளை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.
“பொள்ளாச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கிற வேலைகள் நடந்துட்டு இருக்கு. இதுக்காகப் பொள்ளாச்சி ஆச்சிபட்டியில இருந்து ஈச்சனாரி வரைக்கும் இருக்குற 26.85 கிலோ மீட்டர் சாலை ஓரங்கள்ல இருக்குற பசுமையான 2 ஆயிரத்து 200 மரங்களை வெட்டுறதுக்கான முயற்சியில நெடுஞ்சாலைத்துறை இறங்குச்சு. இந்த மரங்களை வெட்டக்கூடாதுனு அந்தப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதனால, வேரோட பெயர்த்து வெச்சா வளரக்கூடிய மரங்கள் எவ்வளவு இருக்குதுனு பட்டியல் எடுத்தாங்க. அதுல முதல்கட்டமா 51 மரங்களை வேரோட பிடுங்கி வேற இடத்துல வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. போனவாரம் நாலு வேப்ப மரங்களை வேரோட பிடுங்கி வேற இடத்துல நடவு செஞ்சிருக்காங்க. முதல் வேப்ப மரத்துக்குப் பூஜை பண்ணி அதோட கிளைகள வெட்டி... கிரேன் மூலமா அந்த மரத்தை எடுத்து தயாரா இருந்த குழியில நடவு பண்ணினாங்க. அந்த மரத்தை சுத்தி வைக்கோலை திரித்துச் சுத்தி விட்டிருக்காங்க. முதல் கட்டமா பிடுங்கி நடற மரங்களோட வளர்ச்சியைப் பொறுத்து அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிப்பாங்களாம்” என்றார்.
அந்த நேரத்தில் வட கிழக்குப் பருவமழையின் உபயத்தால்... சடசடவென மழைத் தூறல் ஆரம்பிக்க, மூவரும் எழுந்து கூரைக் கொட்டகைக்குள் ஓடினர். அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது...!
வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந்தேதி தொடங்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவில்லை. இதனால் பருவமழை தாமதமானது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை அண்மையில் தொடங்கியது.
இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் பேசும்போது. ‘‘ஈரப்பதம் நிறைந்த கிழக்குத் திசைக் காற்று தென்னிந்தியப் பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்குப் பருவமழை, அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை 3 மாதங்களுக்கு இருக்கும். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ வரை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.