மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!

மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

வம்பர் 8-ம் தேதி, ராத்திரி 8 மணி இருக்கும், ஓட்டலுக்குச் சாப்பிடப் போனேன். சாப்பிட்டு, முடிக்கிறதுக்குள்ள, ‘‘ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது”னு, பிரதமர் அறிவிச்சிட்டாரு. சாப்பிட்டதுக்கு எல்லாரும், சில்லறையா கொடுங்கன்னு, குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு  ஓட்டல் கேசியர். அப்ப ஓட்டல்ல இருந்த டி.வியில இந்தச் செய்தி ஓடிக்கிட்டிருந்துச்சு.

மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!

மசால் தோசையை எடுத்துக்கிட்டு வந்த சர்வர், ‘‘பணத்தோட மதிப்பு வெறும் காகிதம்தான் சார். ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி, நூறு ரூபாய்க்கு இருந்த மதிப்பும் இப்ப இருக்கிற மதிப்பும் சமம் கிடையாது. ஆனா, ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியும் 100 கிலோ அரிசியில, 700 பேர் சாப்பிட்டாங்க. இப்பவும், அதே 100 கிலோ அரிசியில 700 பேர் சாப்பிட முடியுது. இந்த உலகத்துல எந்தக் காலத்திலேயும் மதிப்புக் குறையாத பொருள் உண்டுன்னா, அது விவசாய விளைபொருள்தான்’’னு பொருளாதார வல்லுநர் கணக்கா பாடம் சொன்னாரு அந்த சர்வர்.

இதைத்தான், ‘‘இந்தியா பல்லாயிரம் சிறிய ஊர்களைக் கொண்ட பெரிய நாடு. எனவே, சிறிய ஊர்களுக்கான ஒரு பொருளியலை உருவாக்குவதே, இங்குள்ள பொருளாதார மேதைகளின் பணியாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கூடியமட்டும் பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கை வேண்டும்’’னு ஜே.சி.குமரப்பா பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்காரு.

காந்தியப் பொருளாதாரத் தத்துவத்துக்கு வடிவம் அமைத்துத் தந்த ஜே.சி. குமரப்பா, நம்ம தஞ்சாவூர்க்காரர். விடுதலைப் போராட்டக் காலத்தில 1945-ம் வருஷம் ஜபல்பூர் சிறையில ‘நிலைத்து நீடிக்க வல்ல பொருளாதாரம்’ங்கிற (Economy Of Permanence) புத்தகத்தை எழுதியிருக்காரு. இதுக்கு, ஜே.சி.குமரப்பாவின் குருவான மகாத்மா காந்தி முன்னுரை எழுதியிருக்காரு. பொருளாதாரம் பத்தி எல்லாரும் பேசிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல, குமரப்பா இந்தப் புத்தகத்துல சொல்லியிருக்கிற  தகவல்களைப் பத்தி, கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கலாம் வாங்க....

மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!



‘‘ஒட்டுண்ணிப் பொருளாதாரம்: சில செடிகளில் வேறு செடிகள் ஒட்டுண்ணியாக ஒட்டிக்கொண்டு சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. ஆனால், மூலச்செடி வாடிப்போகிறது. ஆடு புல்லைத் தின்று நீரை அருந்தி அகிம்சை வாழ்க்கை மேற்கொள்கிறது. ஆனால், புலி அப்படி அல்ல. ஆட்டை அடித்து அதன் ரத்தத்தை உறிஞ்சுகிறது. ஆதலால், இம்சையே புலியினுடைய வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது. இப்படித்தான் இங்கிலாந்து நாட்டினர், இந்தியர் உழைப்பைக் கொள்ளையடித்துக் கொண்டு போக, கோடிக்கணக்கான இந்திய மக்கள் மடிய நேர்ந்தது.

அடாவடிப் பொருளாதாரம்:  மாந்தோப்புக்குள் ஒரு குரங்கு நுழைகிறது. மாம்பழங்களைப் பறித்து உண்கிறது. அந்தக் குரங்கு மா மரத்துக்குக் குழி தோண்டவில்லை; விதை போடவில்லை; நீர் ஊற்றவில்லை. வளர்ச்சியில் எந்தப் பங்கும் ஆற்றாது பலனை மட்டும் பறித்து, அது அடாவடியாக அனுபவிக்கிறது.

வணிகப் பொருளாதாரம்:
தேனீக்கள், தேனும் மகரந்தமும் சேகரிக்கும் பணியில் கருவுருதல் நடைபெற்று பயிர்கள் விளைகிறது. சுயநலத்துக்காகச் செய்யும் இந்தப் பணியில் பொதுநலமும் அடங்கியுள்ளது. இது இம்சை கலவாத பொருளாதாரம். விவசாயிகளும், கைவினைஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

பொதுநலப் பொருளாதாரம்:
தேனீக்கள் அடை கட்டிப் பூந்தேனை நறுந்தேனாக்கி சேமிக்கின்றன. பொது நலத்துக்காகவே இப்படித் தேனீக்கள் பணி செய்கிறது. குழுநலம் இங்கே பின்பற்றப்படுகிறது. இது ஒரு படி மேல். கூட்டுக்குடும்பத்தில் இந்த முறையைப் பார்க்கிறோம். கூட்டுறவுச் சங்கங்கள் இப்படிச் செயல்படுகின்றன.

சேவைப் பொருளாதாரம்: இயற்கையாகச் செயல்படும் பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்தது இந்தச் சேவைப் பொருளாதாரம். குஞ்சுக்கு இரைதேடித் தாய்ப் பறவை காடு முழுவதும் அலையும். குஞ்சுகளைக் காக்க தன் உயிரைப் பணயம் வைத்துத் தாய் போராடும். தன்னுடைய இன்றைய தேவைக்காகவோ நாளைய தேவைக்காகவோ பறவை போராடவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராது வரப்போகும் சந்ததிகளுக்காகத் தன்னை வருத்திக்கொள்கிறது. இம்சை இல்லாத நிலைத்த நீடித்த பொருளாதாரத்துக்கு நெருக்கமானது இது. இந்தப் பொருளாதாரம்தான் எக்காலத்திலும் நாட்டை நல்வழிக்குக் கொண்டு செல்லும்...’’

-இப்படிப் பொருளாதாரம் பத்தி, தெளிவா சொல்லி வெச்ச ஜே.சி.குமரப்பா தனக்கான வீட்டைக் கட்டும்போது, காந்தியடிகள் வசித்த வீட்டைவிடவும் குறைவான செலவில் வீட்டைக் கட்டினாரு. காந்தியே எளிமையான மனிதர். அவரைவிடவும், எளிமையான வீடு கட்டி, அதுல அடிப்படை வசதிகளோடும் வாழ்ந்திருக்காரு நம்ம ஜே.சி.குமரப்பா. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாம வாழ்ந்திருக்காரு, இந்தப் பொருளாதார மேதை.