மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5

சோற்றுக்கற்றாழை... அனைத்துமே மருந்துதான்!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழிலும் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘சோற்றுக்கற்றாழை’தான்.

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5

சோற்றுக்கற்றாழை குறித்து நமது சித்த மருத்துவத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் தூள் சேர்த்து தோசைக் கல்லில் வாட்டி இளஞ்சூட்டில் கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் அவை பழுத்து உடையும். உடலின் வெளிப்புறத்தில், எந்தப் பாகத்தில் கட்டிகள் இருந்தாலும் அவற்றை இது குணமாக்கும். இதுபோன்ற  வெளிப்புறக்கட்டிகளை தென் மாவட்டங்களில் ‘புறப்பாடு’ என்பர். கற்றாழைச் சோற்றை அப்படியே புண்கள் மீது இட்டு வந்தால், விரைவில் குணமாகும்.

ஆண்மையைப் பெருக்கும்!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் தேடுவது, ஆண்மையைப் பெருக்கி உடலுறவு நேரத்தை நீட்டிக்கக்கூடிய மருந்துகளைத்தான். இதை வைத்து கல்லா கட்டும் மருத்துவர்களும் பெருகிவிட்டனர். இனி இப்படிப்பட்ட வைத்தியர்களிடம் ஏமாற வேண்டியதில்லை. கற்றாழை வேரை நன்கு அலசி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் காய வைக்கவும். இட்லிக் கொப்பரையில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றி, காய்ந்த வேர்களை இட்லி அவிப்பது போல அவித்தெடுத்து, நன்கு காய வைத்துப் பொடி செய்து கொள்ளவும். இப்பொடியில் 3 முதல் 5 கிராம் அளவு எடுத்து 15 மில்லி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து, இரவு படுக்கும் முன்னர் குடித்து வந்தால், ஆண்மை பெருகும்.

பலர், சோற்றுக்கற்றாழையை வீட்டு முகப்பில் தொட்டியில் வைத்து கண் திருஷ்டிக்காக வளர்க்கிறார்கள். அந்த நம்பிக்கை ஒரு புறமிருந்தாலும், நீண்ட நாள் வாழப் பயன்படக்கூடிய ஒரு மூலிகையை இப்படி வெறுமனே வளர்க்காமல், அதைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். சோற்றுக்கற்றாழையை மணற்பாங்கான வேலியோரங்களில் ஒரு நாற்றை வைத்தாலே, போதும்.  சில ஆண்டுகளில் பண்ணைப் பண்ணையாக பெருகிவிடும். 

ஆய்விலும் நிரூபிக்கப்பட்டது!

கற்றாழை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில், ‘கற்றாழைச்சாற்றை தோலில் பூசினால் கதிர் வீச்சினால் வரும் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. புண்களை விரைவாக ஆற்றும் தன்மை, கட்டிகளை உடைக்கும் தன்மை, வைரஸ் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் ஆகியவற்றைக் கற்றாழை கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. தவிர, புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கற்றாழைக்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்துமே மருந்துதான்!

சோற்றுக் கற்றாழையிலே பல வகைகள் உண்டு. அதிக சதைப்பற்றுடன் வெள்ளை நிற வரிகளுடன் இளம்பச்சை நிறத்தில் காணப்படுவது ஒரு வகை. இதில் அதிக கசப்பு இருக்காது. இதுவே நற்குமரி. கிளிப்பச்சை நிறத்தில் தன்னிச்சையாக காடுகளில் காணப்படும். இன்னொரு வகை நமது தமிழகத்துக்குச் சொந்தமானது. கொல்லிமலைப் பகுதிகளில் 5 அடி நீளமுடைய  மடலுடன் காணப்படும் கற்றாழை வகை உண்டு. இவையனைத்துமே மருந்துகள் தயாரிக்கப் பயன்படுபவைதான். இருப்பினும் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் சோற்றுக்கற்றாழையைப் பயன்படுத்துவது சிறந்தது.

- வளரும்

தைலம்!

தைலம் என்பது தமிழ் மருத்துவத்தில் ஒரு முக்கியமான மருந்து வடிவம். மூலிகைச் சாறுகள், கஷாயங்கள், சில மருந்து சரக்குப் பொடிகள் ஆகியவற்றோடு குறிப்பிட்ட எண்ணெயைக் கலந்து பதமாகக் காய்ச்சுவதுதான் தைலம். அப்படி காய்ச்சும்போது மருந்துக் கலவையில் உள்ள நீர்ப் பொருள்கள் அனைத்தும் ஆவியாகி மூலிகையின் மருந்துச்சத்துக்கள் மட்டும் எண்ணெயில் கலந்துவிடும். காய்ச்சும்போது, நீர்ச்சத்துக் குறையக்குறைய... பாத்திரத்தின் அடியில் படியும் வண்டல், முதலில் குழம்புப் பதமாக மாறி, பின்னர் சிக்குப் பதமாக மாறும். பிறகு, மெழுகுப் பதமாக மாறும். கைகளில் ஒட்டாமல் உருளத் தொடங்கும் பதத்தில் அடுப்பை விட்டு இறக்கி வடிகட்டி ஆறிய பிறகு,  காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.

மாதவிடாயை சீராக்கும் ‘குமரி பக்குவம்’

குமரி பக்குவம் தயாரிப்பு முறை:

தேவையானவை:

•  சோற்றுக்கற்றாழைச் சோறு -  250 கிராம்

• பனைவெல்லம் - 500 கிராம்

 

• பூண்டு (விழுதாக அரைத்தது) - 50 கிராம்

• வெந்தயப்பொடி- 25 கிராம்

செய்முறை:

சோற்றுக்கற்றாழைத் தோலை காய்கறிகள் தோல் சீவும் கருவி கொண்டு இருபக்க முட்களை அகற்றி, ஒரு பக்க மேல் தோலை மட்டும் நீக்க வேண்டும். பிறகு, தேக்கரண்டி கொண்டு சுரண்டி எடுத்தால், கண்ணாடித் துண்டுகள் போன்ற சோறு கிடைக்கும். இதை, மீன் கழுவுவது போல ஏழு முறை புதிய புதிய தண்ணீரில் அலசிக் கழுவ வேண்டும். இப்படிக் கழுவுவதால் அதன் மஞ்சள் பிசுபிசுப்பு திரவம் நீங்கிவிடும். பிறகு இதை மிக்ஸியில் அரைத்து சாறாக்க வேண்டும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பனை வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து மண், தூசி இல்லாமல் வடிகட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சாறு, பனை வெல்லக் கரைசல், பூண்டு விழுது, வெந்தயப்பொடி ஆகியவற்றை இட்டு அடுப்பிலேற்றி நன்றாகக் கிளற வேண்டும். இது அல்வா பதம் வந்ததும் இறக்கி ஆற விட வேண்டும். இதுதான் ‘குமரி பக்குவம்’.

இதை இரண்டு தேக்கரண்டி அளவு தினமும்  இருவேளைகள் உண்டு வர மாதவிடாய் சுழற்சி சீராகும். கருப்பை பலப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். மூலச்சூடு குறைந்து மூலம், மலச்சிக்கல் ஆகியவை தீரும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதி சாப்பிட்டு வர, நன்மை கிடைக்கும். குறிப்பாக மகளிருக்கு வரும் பிணிகள் அத்தனைக்கும் அருமருந்து இது.

இனிப்பாக இருப்பதால் இதை ஜாம் போல பயன்படுத்தலாம். தொடர்ந்து எத்தனை நாட்கள் சாப்பிட்டாலும் நன்மையேயன்றி எள்ளளவும் தீமை இல்லை.  இதனால் முகமும் உடலும் பொலிவு பெறும். இதையே சித்தமருத்துவம் காயகல்ப முறை என்று விளக்கியுள்ளது. உடல் சூட்டினால் உண்டாகும் வாய்ப்புண், வயிற்றுப்புண், மூலச்சூடு, கண் எரிச்சல் போன்றவற்றையும் இது குணமாக்கும்.

செங்கற்றாழை... ஏமாற்று வேலை!

நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 5

செங்கற்றாழை என்று ஒன்று இருப்பதாகவும் அதன் சோறு ரத்தச் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் அதை  விற்பனை செய்தால் மிக அதிகமாகப் பணம் தருவதாகக் கூறி சிலர் தொடர்ந்து செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதைப்பற்றி நடுவண் அரசின் மூலிகை மருத்துவத்திட்டத்தில் 40 ஆண்டுகள் ஆய்வறிஞராகப் பணியாற்றிய மூலிகைப் பேராசான். வே.செல்லத்துரை கூறும்போது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன் செங்கற்றாழை மாதிரி (Specimen) என்று கூறி, என்னிடம் ஒரு செங்கற்றாழை மடலை அனுப்பி வைத்தார்கள். அதைத் தண்ணீரில் போட்டுப் பார்த்தபோது அதிலிருந்து சிவப்பு நிற பொட்டாசியம் பெர்மாங்கனேட் வெளியானது. எனவே, செங்கற்றாழை என்று யாராவது சொன்னால், அதை நம்ப வேண்டாம்’’ என்று எச்சரிக்கை செய்தார்.