
பயணம்துரை.நாகராஜன், ஜெ.சாய்ராம், படங்கள்: கா.முரளி
பண்ணையின் சிறப்புகள்!
• 12 ஏக்கர் நிலத்தில் மரப்பயிர்கள்... ஊடுபயிராகக் காய்கறிகள்
• சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர் மேலாண்மை
• முழு இயற்கை வேளாண்மை.
• இடுபொருட்கள் தேவைக்காகக் கால்நடைகள்
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனத்தில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள்... தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் விஜயராகவன், ரமேஷ், தனியார் வங்கி ஊழியர் ரகுராமன்-சரண்யா தம்பதி, பொறியியல் பட்டதாரி நவீன், கல்லூரி மாணவர் விஜய் ஸ்ரீனிவாஸ் மற்றும் பள்ளி மாணவர் சுப்பிரமணியன் ஆகியோர். அனைவரும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை நாம் அழைத்துச் சென்றது, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரைவாடி கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பெருமாள்சாமியின் பண்ணைக்கு!

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் விரிவாக்கப்பிரிவு இயக்குநராக இருந்தவர், ஜி.பெருமாள்சாமி. மதுராந்தகம் அருகே சித்திரைவாடி என்ற சிறிய கிராமத்தில் ஏழ்மைச் சூழ்நிலையில் பிறந்தாலும் பல தடைகளைத் தாண்டி... அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் உயர் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு உயர்ந்தவர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், தனது கிராமக்குழந்தைகளுக்காக ஒரு பள்ளி நடத்தி வருகிறார், இவர். அந்தப் பள்ளியை நடத்துவதற்கான நிதி ஆதாரத்துக்காக விவசாயத்தைக் கைக்கொண்டிருக்கிறார்.
மா, கொய்யா, சப்போட்டா, தேக்கு, காய்கறிகள், கால்நடைகள்... என அசத்தி வருகிறார், பெருமாள்சாமி.
காலை 9 மணியளவில், பெருமாள்சாமியின் பண்ணையை அடைந்தோம். இன்முகத்துடன் வரவேற்றவர் அனைவருக்கும் தேநீர் கொடுத்தார். அதைக் குடித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர். தேநீரைப் பருகிய ஒரு நாள் விவசாயிகள், “டீ சூப்பரா இருக்கு” என்றனர்.
“பெரும்பாலும் நீங்க பாக்கெட் பால்லதான் தேநீர் தயார் பண்ணி சாப்பிடுறீங்க. ஆனா, இது தண்ணி கலக்காத சுத்தமான நாட்டு மாட்டுப்பால்ல தயார் பண்ணது. அதுதான் இந்தச் சுவைக்குக் காரணம்” என்றவர், அவருடைய மாணவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான முனைவர் தனுசுவை அறிமுகப்படுத்தினார். தனுசு, அனைவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தைச் சுற்றிக்காட்ட ஆரம்பித்தார். “மக்கள் மோசமான மனநிலைக்குப் போய்ட்டாங்க. கடைக்குப் போனா அரிசியை எளிதா வாங்கிடலாம். ஆனா, அந்த அரிசி உற்பத்தியாகிறதுக்குப் பின்னாடி இருக்கிற விவசாயிகளின் கஷ்டம் யாருக்கும் தெரியறதில்லை. அதேபோல எதைச் சாப்பிடணும்னே நிறைய பேருக்குத் தெரியலை. சாப்பாடுனா உடம்புக்குத் தெம்பு கொடுக்கக் கூடியதா இருக்கணும். தொல்லை கொடுக்கிறதா இருக்கக் கூடாது” என்று உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து பேசியவரை இடைமறித்த ரகுராமன்,

“விவசாயத்துல ஆர்வம் அதிகம். ஆனா, அது குறித்து எதுவும் தெரியாது. விவசாயத்தைப் புதுசா ஆரம்பிக்க என்ன பண்ணணும்” என்று கேட்டார்.
“தண்ணீர் வளமும் மண் வளமும் இருக்கிற நிலத்துல விவசாயத்தை ஆரம்பிக்கலாம். மண்ணுக்கேத்த பயிரை தேர்ந்தெடுக்கணும். நிலத்துக்குள்ள அல்லது பக்கத்திலேயே வீட்டை அமைச்சுக்கணும். அப்போதான் நல்லபடியா விவசாயம் செய்ய முடியும்” என்றார், தனுசு. இப்படிப் பேசிக்கொண்டே நிலத்தை வலம் வந்தவர்களோடு இணைந்து கொண்டனர், பெருமாள்சாமியும் அவருக்கு உதவியாளராகப் பணிபுரியும் மாணிக்கமும்.
அனைவரும் மாந்தோப்புக்குள் புகுந்தனர். அங்கு மாமரங்களுக்கு இடையில் சணப்பு விதைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்துப் பேசிய பெருமாள்சாமி,
“பசுந்தாள் உரங்கள்ல மிக முக்கியமானது சணப்பு. மண்ணுல தழைச்சத்தை அதிகரிச்சு வளத்தைக் கூட்ட உதவி பண்ணும். சணப்பை விவசாயிங்க தனிப் பயிராவும் பயிரிடுவாங்க. சரியாக 40 நாள்ல இருந்து பூக்க ஆரம்பிச்சிடும். பூத்த உடனே மடக்கி உழ வேண்டும். இதை உழாமல் காய்க்க விட்டால், விதைகள் உருவாகிடும். அதுல இருந்து கிடைக்கிற விதை மூலமாவும் லாபம் பார்க்கலாம்.
இந்தச் சணப்பு மண்ணின் வளத்தை மேம்படுத்தும். மண் அரிப்பினால் நிலத்தில் ஏற்படும் சத்துக் குறைபாட்டைத் தடுக்கும். இந்தச் சணப்பை ஊடுபயிராக சாகுபடி செஞ்சா, அதுமூலமாவும் வருமானம் பார்க்கலாம். மடக்கி உழுது சமன் அடிச்சு மண்ணையும் வளப்படுத்தலாம். சணப்புக்குனு பட்டம், பருவம்னு எதுவும் கிடையாது. அதனால, எப்பவேணும்னாலும் விதைக்கலாம். சணப்பு விதைத்த பிறகு எந்தப் பயிரை விதைச்சாலும் விளைச்சலும் மகசூலும் அதிகமாகக் கிடைக்கும். இதை மாந்தோப்புக்கு மட்டும்னு இல்லாம எல்லா வகையான மரப்பயிர்கள்லயும், தரிசு நிலங்கள்லயும் விதைக்கலாம்.
இந்த மாந்தோப்பில் கொய்யா, சப்போட்டா, தேக்குனு கலந்து நட்டிருக்கோம். இதெல்லாத்தையும் தனித்தனியாவும் சாகுபடி செய்யலாம்” என்றவர், ஒரு நாள் விவசாயிகளை அங்கிருந்த பெருமாள்(நயா திருப்பதி) கோயிலுக்கு அழைத்துச் சென்றார். இக்கோயிலுக்குள் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தரிசனம் முடிந்து வந்துகொண்டிருந்தபோது அப்பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகளும் மரங்களும் இருந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே வந்தனர், ஒரு நாள் விவசாயிகள். ஓரிடத்தில் நின்ற விஜயராகவன், ஒரு மரத்தைக் காட்டி “இது என்ன மரம்” என்றார்.
“அது வெண்தேக்கு” என்றார் பெருமாள்சாமியின் உதவியாளரான மாணிக்கம். அருகிலிருந்த மகிழ மரம், சந்தன மரங்கள் ஆகியவற்றையும் அடையாளம் காட்டி, “சந்தன மரம் முழு வளர்ச்சியடைய 30 வருஷங்களுக்கு மேலாகும். அதை வெட்டும்போது மட்டும் வனத்துறையோட சில சட்டநடைமுறைகளைப் பின்பற்றினால் சந்தன மரத்தையும் தோட்டங்களில் வளர்க்கலாம்” என்றார்.
அடுத்து ஒரு நாள் விவசாயிகளைக் கத்திரி வயலுக்கு அழைத்துச் சென்ற மாணிக்கம், “இங்க சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கோம். கத்திரியில், முள்ளுக்கத்திரி, பச்சைக்கத்திரி, குண்டுக்கத்திரினு நிறைய வகை இருக்கு. கத்திரி விதைச்சு அறுவடைக்கு வர 2 மாசம் ஆகும். அதுக்கப்புறம் மூணு நாலு மாசம் வரை காய்கள பறிக்கலாம். இங்க இயற்கை பூச்சிவிரட்டிகளைத்தான் பயன்படுத்துறோம்” என்றார்.
“ஒவ்வொரு வகைக் கத்திரிக்காயும் ஏன் ஒவ்வொரு சுவையில் இருக்கு” என்று கேட்டார், நவீன். “எந்தப் பயிரா இருந்தாலும் அது விளையுற மண், அங்குள்ள தட்பவெப்ப நிலை, பயன்படுத்துற இடுபொருட்கள், பாசனம் பண்ற தண்ணீர் என இவற்றைப் பொறுத்துதான் அதோட தரமும் சுவையும் அமையும். ஒரே ரக விதையில விளையுற காய்கள் ஒவ்வொரு பகுதியிலயும் வெவ்வேற சுவையில இருக்குறதுக்கும் இதுதான் காரணம். குறிப்பா இயற்கையில விளைவிச்சா அந்தக் காய்க்கு சுவை அதிகமா இருக்கும்” என்ற மாணிக்கம், சொட்டுநீர்க் குழாய் மூலம் பாசனம் செய்வது மற்றும் களையெடுப்பது குறித்து ஒருநாள் விவசாயிகளுக்குச் சொல்லித் தந்தார். உடனே அனைவரும் கத்திரி வயலில் களையெடுக்க ஆரம்பித்தனர்.
அப்போது அங்கு வந்த மதுராந்தகம் பகுதி உதவித் தோட்டக்கலைத் துறை அலுவலர் பாலக்குமார், அனைவருடனும் அறிமுகமாகிக்கொண்டார். அவரிடம், “மண் மற்றும் நீர் பரிசோதனை, எங்கு துல்லியமாகச் செய்யப்படுகிறது” என்று கேட்டார், ரகுராமன்.
“ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் மற்றும் சில ஊர்களிலும் மண் ஆய்வு நிலையங்கள் இருக்கு. ஆனா, சென்னை தரமணியில் செயல்படும் ஆய்வகத்தில்தான் துல்லியமான பரிசோதனை முடிவுகளைப் பெற முடியும்” என்றார், பாலக்குமார்.
அதற்குள் மதிய வேளை நெருங்கிவிட, அனைவரும் உணவு அருந்தினர். சாப்பாட்டு வேளை முடிந்ததும் கேள்வி வேளை ஆரம்பித்தது.

“என்னோட சொந்த ஊர் தேனி மாவட்டம். அங்க மலையடிவாரத்துல எங்களோட நிலம் ஆறு வருஷமா தரிசா கிடக்கு. அங்க என்ன பயிர் சாகுபடி செய்யலாம்” என்று கேட்டார், ரமேஷ்.
“அக்கம்பக்கத்துல விளையுற பயிர்களைப் பார்த்துக்கணும். நமக்கு இருக்கிற தண்ணீர் வளம், மண் வளத்தைத் தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த பயிரைத் தேர்ந்தெடுக்கலாம். மலைப்பகுதிங்கிறதால திராட்சை நல்லா விளைய வாய்ப்பிருக்கு” என்றார், தனுசு.
சரண்யா, விஜயராகவன் மற்றும் ரமேஷ் ஆகியோர், அரசுத்திட்டங்கள் மானியங்கள் குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பாலக்குமார், “பல்வேறு திட்டங்கள் மூலமா ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அந்தந்த மாவட்டங்கள்ல உள்ள வேளாண்துறை அலுவலகத்துல விசாரித்தால், அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்துத் தெரிஞ்சுக்கலாம்” என்றார்.
“எனக்குப் பூர்விகம் ராமநாதபுரம். அங்க முருங்கைக்காய் பயிர் செய்யலாமா” என்று கேட்டார், வீரராகவன். “இயல்பாகவே வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில், முருங்கையைத் தாராளமாகப் பயிரிடலாம். 6 மாசத்திலேயே பலன் கிடைக்கும். இரண்டு வருஷத்துல பொருளாதார ரீதியில் பலன் கொடுக்க ஆரம்பிச்சிடும்” என்றார், பாலக்குமார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு பெருமாள்சாமி, அனைவரையும் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார். மேய்ச்சல் முடிந்து வந்திருந்த மாடுகள் தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தன. “இந்த மாடுகளும் என் குடும்ப உறுப்பினர்கள்தான். எங்களுக்குத் தேவையான 3 லிட்டர் பாலை மட்டும் கறந்துட்டு, மீதியை கன்றுக்குட்டிகளுக்கே விட்டுடுவோம்” என்றார்.
கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசிய மருத்துவர் பால மகேந்திரன் “இளைஞர்கள், ஆடு, மாடு, கோழி, முயல், பன்றினு ஆர்வத்துல வளர்க்க ஆரம்பிக்கிறாங்க. ஆனா, சின்னப் பிரச்னை வந்துட்டா அதைச் சமாளிக்க முடியாம அதை விட்டுடுறாங்க. எந்தப்பிராணியா இருந்தாலும் அதை வளர்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதுகுறித்துப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும். பல பண்ணைகளைப் பார்க்கணும்” என்றார்.
மாலை வேளை நெருங்கியதால், ஒரு நாள் விவசாயிகள் கிளம்ப ஆயத்தமாயினர். அவர்களிடம் பெருமாள்சாமி நிறைவாக, “இந்த பண்ணையில் மரப்பயிர்கள், காய்கறிகள், கால்நடைகள் என்று ஒருங்கிணைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும் என் பண்ணை எப்போதுமே திறந்திருக்கும். ஒரு நாள் விவசாயிகள் விரும்பினால், இங்கு எப்போது வேண்டுமானாலும் வந்து விவசாயம் கற்கலாம். அதோடு விவசாயமும் செய்யலாம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.
-பயணம் தொடரும்
தொடர்புக்கு,பெருமாள்சாமி,செல்போன்: 94432 40074
ஒருநாள் விவசாயிகளின் அனுபவங்கள்!

ரமேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை, சென்னை: “விவசாயத்தைச் சீக்கிரம் ஆரம்பிக்கணுங்குற ஆசை வந்திடுச்சு. விவசாயம் குறித்து அதிகமாகத் தெரிஞ்சுகிட்டேன். வாய்ப்புக் கொடுத்த பசுமை விகடனுக்கு நன்றி.”
நவீன், பொறியியல் பட்டதாரி, சென்னை: “புதுவித அனுபவம். அப்பா, அம்மா விவசாயம்தான் செய்றாங்க. ஆனா, நான் இதுவரை விவசாயத்தைக் கத்துக்கலை. அந்தக் குறை ஒருநாள் விவசாயி மூலமா நிறைவடைஞ்சிருக்கு.”
ரகுராமன் - சரண்யா தம்பதி, சென்னை: “எங்களுக்கு விவசாயம் குறித்துத் தெரிஞ்சுக்கக் கிடைச்ச வாய்ப்பு இது. எங்களுக்கும் பண்ணை ஆரம்பிக்கணும்னு ஆசை வந்திடுச்சு. கண்டிப்பா சீக்கிரம் ஆரம்பிச்சிடுவோம்.”

விஜயராகவன், சென்னை: “இந்தப் பயிற்சி ரொம்ப உபயோகமாக இருந்தது. முக்கியமா கால்நடை வளர்ப்பு குறித்து நிறைய தெரிஞ்சுகிட்டேன்.”
சுப்பிரமணியன், பள்ளி மாணவர், சென்னை: “விவசாயப் படிப்பு படிக்கிற எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். நேரடியா நிறைய விஷயங்களை பார்த்துத் தெரிஞ்சுகிட்டேன்.”
விஜய், கல்லூரி மாணவர், சென்னை: “இந்த நாள் ரொம்ப நல்லாவும், உபயோகமாவும் இருந்தது. விவசாயத்துல புது அணுகுமுறை, தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டேன். வழிகாட்டிய பசுமை விகடனுக்கு நன்றி.”
நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை)
மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.