மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?

நீங்கள் கேட்டவை:  குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?

புறாபாண்டி, படம்: கே.கார்த்திகேயன், வீ.சக்தி அருணகிரி

‘எங்களின் பண்ணைக்கு இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற விரும்புகிறோம். குறைந்த செலவில் சான்றிதழ் பெற முடியுமா?’’

பி.ஆர்.ஈஸ்வரி, பள்ளிப்பட்டு.

யற்கை வேளாண்மை செய்யும் பண்ணைகளை, ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பணியினை, ஏராளமான அமைப்புகள் செய்து வருகின்றன. பன்னாட்டு அமைப்புகளும்கூட இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வழங்கி வருகின்றன. சில அமைப்புகளிடம், இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற லட்ச ரூபாய் கூட செலவாகும். இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, அங்ககச்(இயற்கை வேளாண்மை) சான்றளிப்புத் துறையை உருவாக்கி, குறைந்த செலவில், இயற்கை வேளாண்மைச் சான்றிதழை வழங்கி வருகிறது.

நீங்கள் கேட்டவை:  குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?

கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டுச் செயல்பட்டு வரும் தமிழக அரசின் அங்ககச் சான்றளிப்புத் துறையின் ஆய்வாளர் எஸ்.பிரபாகரன் பதில் சொல்கிறார்.

‘‘இயற்கை வேளாண்மை மூலம் விளைந்த பொருட்களுக்கு, உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை விற்பனை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. சான்றிதழ் பெற்ற விவசாயிகளுக்கு, சந்தையில் கூடுதல் விலையும் கிடைத்து வருகின்றது. எனவே, அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பெறுபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தமிழக அரசின் அங்ககச் சான்றளிப்பு, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மைச் செயல்திட்டத்தின்படி அபீடா (APEDA) நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் (அங்கீகார எண்: (NPOP/NAB/0019) மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நீங்கள் கேட்டவை:  குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்பவர்கள் இத்திட்டத்தின்படி அங்ககச் சான்று பெற தனி நபராகவோ குழுவாகவோ மேலும் கால்நடைப் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் இதில் பதிவு செய்துகொள்ளலாம்.   பெரும் வணிக நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ள முடியும். அங்கக விளைபொருள்களை மதிப்புக்கூட்டி பதப்படுத்தும் தொழில் செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும்கூட பதிவு செய்யலாம். இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செய்பவர்களும் பதிவு செய்துகொள்ள முடியும்.

பதிவு செய்ய சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, பதிவு செய்யப்படும் நிலத்தில் அங்கக முறைப்படி இயற்கை வழி வேளாண்மை முறையில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ரசாயன நேர்த்தி செய்த விதைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அங்கக வேளாண்மை சாகுபடி செய்யும் பண்ணை தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களினாலோ அல்லது இதர சூழ்நிலைகளின் மூலமாகவோ அங்ககப் பண்ணை மாசுபடுவது தடுக்கப்படுகிறது.

அங்ககச் சான்றளிப்பிற்கு மாறுதல் காலம் (Conversion Period) கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கால அளவு சுற்றுச்சூழலையும் முந்தைய நிலப்பயன்பாட்டையும் பொறுத்து அமையும்.

நீங்கள் கேட்டவை:  குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?

இயற்கை உரம் மற்றும் தாவர பூச்சிக்கொல்லிகள் பண்ணைக்கு வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும்போது, சில விதிமுறைகளைக் கூடுதலாகப் பின்பற்ற வேண்டும். அதாவது, இயற்கை உரம் மற்றும் தாவர பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருட்கள் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் எழுத்துபூர்வமாகப் பெற்று, அங்ககச் சான்றழிப்புத் துறையின் அனுமதியைப் பெற்ற பின்பே பயன்படுத்த வேண்டும்.
அங்ககச் சான்றுக்கு விண்ணப்பிக்கும், பண்ணையில் பதிவு ஆவணங்கள் (Documentation) பராமரிக்க வேண்டும். பண்ணைக்கு உள்ளே வரும் இடுபொருட்கள், பண்ணையில் இருந்து வெளியில் செல்லும் பொருட்கள் பற்றியும், தினசரிப் பணிகள், ஆண்டுப் பயிர்த் திட்டம், பரிசோதனைகள் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இதை ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.

தொழிற்சாலைக் கழிவு நீர் செல்லும் ஓடைகள், அதிக உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் பண்ணைகளுக்கு அருகில் அங்ககச் சான்று பெறும் பண்ணைகள் இருக்கக்கூடாது. கால்நடைகள் பண்ணையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்குத் தீவனத்தை பண்ணையில் விளைந்தவற்றையே பயன்படுத்த வேண்டும். வெளியில் இருந்து தீவனம் வாங்கப்பட்டால் மாசு இல்லாத இடங்களில் விளைந்ததாக இருத்தல் வேண்டும்.

அங்கக வேளாண்மைக்குப் பயன்படுத்தும் பண்ணைக் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், டிராக்டர், லாரி இவற்றின் மூலம் அங்கக விளைபொருட்கள் மாசுபடாதவாறு, அவ்வப்போது சுத்தப்படுத்திப் பராமரிக்க வேண்டும். அங்கக விளைபொருட்கள் சேமிக்கும் இடங்கள் தனியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.
 
அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க, 1. விண்ணப்பப் படிவம் 2. பண்ணையின் பொது விவரக் குறிப்பு 3. பண்ணையின் வரைபடம் 4. மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம் 5. ஆண்டுப் பயிர் திட்டம் 6. துறையுடனான ஒப்பந்தம் 7. நில ஆவணம் (சிட்டா நகல்) 8. நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) அட்டையின் நகல் 9. ஆதார் அட்டை நகல் 10. பாஸ்போர்ட் புகைப்படங்கள்-2

நீங்கள் கேட்டவை:  குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா?இவற்றுடன் சிறு, குறு விவசாயிகள் என்றால் ரூ. 2,700. பிற விவசாயிகள் ரூ. 3,200 தொகையை ‘Director of Organic Certification, Coimbatore’ என்ற பெயருக்கு டி.டி எடுத்து, கோயம்புத்தூரில் உள்ள அங்ககச் சான்றளிப்புத் துறைக்கு அனுப்ப வேண்டும். குழுப்பதிவு, வணிக நிறுவனங்களுக்கான கட்டணம் மாறுபடும்.

ஆண்டுத்தோறும் புதிப்பித்தல் கட்டணமும் செலுத்த வேண்டும். உங்களின் விண்ணப்பம் தலைமை அலுவலகத்துக்குக் கிடைத்த பிறகு, பண்ணையை ஆய்வு செய்து, சான்று வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

நெல் மற்றும் காய்கறிகள் போன்ற பருவ காலப் பயிர்களுக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து அங்ககச் சான்றிதழ் வழங்கப்படும். மரப்பயிர்கள் போன்ற பல்லாண்டுப் பயிர்களுக்கு (Perennial Crops) பதிவு செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்துத்தான்அங்ககச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்டவுடன், ஒவ்வொரு ஆண்டும், வாய்ப்புச் சான்று வழங்கப்படும். மேலும், அங்ககச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tnocd.net என்ற இணையதளத்தின் மூலமும் பெறலாம்.’’

தொடர்புக்கு, இயக்குநர், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை, 1424ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர்-641013, தொலைபேசி: 0422 2435080, செல்போன்: 94863 65427.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’,

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.

சொட்டுநீர்ப் பாசனம்’, ‘சந்தைக்கேற்ற சாகுபடி’ ஆகிய தொடர்கள் இந்த இதழில் இடம்பெறவில்லை.