மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!

ஓவியம்: ஹரன்

தோட்டத்தில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்து வந்த ‘காய்கறி’ கண்ணம்மா வாத்தியாருடன் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில், வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் “அப்பப்பா... என்னா கூட்டம், என்னா கூட்டம்’’ என்று திரைப்பட நடிகர் பாலையா சொல்வதுபோல சொல்லிக்கொண்டே வந்தார்.

மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!

“விதை வாங்குறதுக்காக கையில இருந்த 500 ரூபாய் தாளை மாத்திடலாம்னு பேங்க்குக்குப் போனேன். ரோடு வரைக்கும் வரிசையில நின்னுக்கிட்டு இருந்தாங்க. நானும் கொஞ்ச நேரம் நின்னு பார்த்தேன். ஒண்ணும் கதையாகுற மாதிரி தெரியலை. போங்கடானு கிளம்பிட்டேன். நான் மாமூலா விதை வாங்குற கடைக்கு நேரா போய்க் கொடுத்தேன். பணத்தைக்கூட அடுத்த மாசம் கொடுங்கன்னு சொல்லிட்டு, விதையை கொடுத்துட்டாரு” என்றார், ஏரோட்டி.

“இந்த ரூபாய்த்தாளு முடக்கத்தாலதான்யா ஏகப்பட்ட பிரச்னைகள் வந்திடுச்சு” என்ற வாத்தியார், ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

“திடீர்னு 500 ரூபாய், 1,000 ரூபாய் செல்லாதுனு அறிவிச்சதால சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள்ல மஞ்சள் ஏலம் நின்னு போய், விவசாயிகள் கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. கையில இருக்கிற 500, 1,000 ரூபாய் நோட்டுகள்ல குறிப்பிட்ட அளவைத்தான் நூறு ரூபாயா மாத்திக்க முடியுமாம். அதுக்கு மேலன்னா பேங்க்லதான் டெபாசிட் பண்ணணும்.

அதேமாதிரி பேங்க்ல எடுக்குற தொகைக்கும் வாரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்னு கட்டுப்பாடு வெச்சுட்டாங்க. அதனால பணப்புழக்கமே இல்லாமப் போயிடுச்சு. பணப்புழக்கம் முடங்கிப்போய், வியாபாரிகள் வரலைங்கிறதால, சேலத்துல இருக்குற லீ பஜார் வர்த்தக மையம், ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக் கூட்டுறவுச் சங்க விற்பனைக்குழு, நாமக்கல் மாவட்ட வேளாண் விற்பனைக் கூட்டுறவுச் சங்க விற்பனைக்குழு மூணுக்கும் விடுமுறை விட்டுட்டாங்க.

இந்த மூணு மாவட்டங்கள்லதான் மஞ்சள் வரத்து அதிகமாக இருக்கும். இந்த மூணு மையங்கள்லயும் கிட்டத்தட்ட 12 நாளா ஏலம் நடக்காததால 20-ம் தேதி வரைக்கும் 1 கோடி மஞ்சள் மூட்டைகள் விற்பனை செய்ய முடியாம தேங்கிடுச்சாம். மார்க்கெட்டிங் கமிட்டி குடோன்கள்லயே கிட்டத்தட்ட 80 லட்சம் மஞ்சள் மூட்டைகள் இருக்குதாம். இப்படித் தேங்கியிருக்கிற மஞ்சளோட மதிப்பு கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி ரூபாயாம்” என்றார், வாத்தியார்.

“ஆமாய்யா நானும் கேள்விப்பட்டேன். அதைவிட இன்னொரு கொடுமையைச் சொல்றேன், கேளு” என்ற ஏரோட்டி,

“வடகிழக்குப் பருவமழை சரியா கிடைக்காததால, சம்பா பருவ நெல் பயிர்களுக்கெல்லாம் கட்டாயம் காப்பீடு பண்ணணும்னு அரசாங்கம் வலியுறுத்திட்டு இருக்கு. கிட்டத்தட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் இந்தப் பருவத்துல நெல் சாகுபடியில் ஈடுபடுவாங்களாம். நெல் சாகுபடி செய்ற விவசாயி, ஒரு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றதுக்குக் காப்பீட்டுத் தொகையா 378 ரூபாய் பிரீமியமா கட்டணும். ஒரு வேளை பயிர் பாதிப்படைஞ்சா பாதிக்கப்பட்ட விவசாயிக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு இருக்கு.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துல இணையறதுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கொடுத்திருக்கு. ஆனாலும் தமிழக அரசு, நவம்பர் 30-ம் தேதிக்குள்ள 9 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளையும் காப்பீட்டுத் திட்டத்துல சேர்க்கணும்னு வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கு. ஆனா, இதுவரை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள்தான் திட்டத்துல சேர்ந்திருக்காங்களாம். அதனால நவம்பர் 30-ம் தேதிக்குள்ள எப்படி மீதிப்பேரை சேர்க்கிறதுனு வேளாண்மைத்துறை அதிகாரிகள் முழி பிதுங்கிப்போய்க் கிடக்குறாங்க. இது தாமதமாகுறதுக்கும் ரூபாய் நோட்டு முடக்கம்தான் காரணம்.

ரூபாய் நோட்டு பிரச்னையால, தமிழ்நாட்டுல இருக்குற கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாமே செயல்பாடு இல்லாம முடங்கிப் போய்க் கிடக்கு. கூட்டுறவுச் சங்கங்கள், மக்கள்கிட்ட 500, 1,000 ரூபாயை வாங்கிக்கிட்டு 100 ரூபாய் நோட்டுகளா மாத்திக் கொடுக்கக்கூடாதுனு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கு. அதனால கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளைப் பூட்டி, அந்தந்த சார்பதிவாளர்கிட்ட சாவிகளைக் கொடுத்திட்டுப் போயிட்டாங்க.

அதனால, விவசாயிகளுக்குப் பயிர்க்கடனும் கிடைக்கலை. பயிர்க் காப்பீட்டுக்கான பணத்தையும் கட்ட முடியாமத் தவிச்சிட்டு இருக்குறாங்க. நவம்பர் 11-ம் தேதியில் இருந்து கூட்டுறவு வங்கி அலுவலர்கள் வேலை நிறுத்தத்துல இருக்காங்க. இடையில மூணு நாள் மட்டும்தான் வேலை பார்ப்போம்னு கூட்டுறவு வங்கி அலுவலர்கள் சொல்லிட்டாங்க. அதனால, மத்திய அரசு கொடுத்திருக்கிற அவகாசத்துக்குள்ளவும்கூட பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத்தைக் கட்ட முடியாது போலிருக்கு” என்றார்.

“எது நடந்தாலும் அதனால அதிகம் பாதிக்கப்படப்  போறது விவசாயிகளாத்தான் இருக்காங்க” என்று காய்கறி,  சொல்லிய நேரத்தில் கடலை விதைத்திருந்த நிலத்தில் பக்கத்துத் தோட்டக்காரரின் ஆடுகள் இறங்க, சத்தம் கொடுத்துக்கொண்டே எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்துடன் மாநாடும் முடிவுக்கு வந்தது.

கால்நடைகளுக்கும் செயற்கைக்கால்... தமிழ் மொழியிலும் கேட்கலாம்!

மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!

கடந்த இதழில், ‘கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்...’ என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, கட்டுரையில் இடம்பெற்றிருந்த ஜெய்ப்பூர், கால்நடை மருத்துவர் தபேஷ் மாத்தூரை, தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்கள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஆனால், மொழி பிரச்னை காரணமாக, அவர்களால் போதிய அளவுக்கு உதவ முடியாமல் போயிருக்கிறது. ‘‘எங்களால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசுபவர்களுக்கு, உரிய பதிலை கொடுக்க முடிந்தது. தமிழ் மொழியில் தகவல் கேட்டவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்க முடியவில்லை’’ என்று நம்மிடம் வருத்தத்துடன் தபேஷ் தெரிவித்தார்.

தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், பசுமை விகடன், அலுவலகத்தை 044 66802927 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், செயற்கை கால் குறித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை தபேஷிடமிருந்து பெற்றுத்தரக் காத்திருக்கிறோம்.

-ஆசிரியர்