
ஓவியம்: ஹரன்

தோட்டத்தில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார், ஏரோட்டி ஏகாம்பரம். சற்று நேரத்தில், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘காய்கறி’ கண்ணம்மாவும் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வரும்போது கடுகடுவென இருந்தார், ஏரோட்டி. “என்னய்யா கோபமா இருக்குற போல” என்று கேட்டார், காய்கறி.
அதற்காகவே காத்திருந்தார் போலப் பொரிய ஆரம்பித்தார், ஏரோட்டி. “கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஈரோட்டுல நடந்த கூட்டுறவு கடன் வழங்குற விழாவுல கலந்துகிட்ட அமைச்சர் கருப்பண்ணன், ‘இன்னிக்கு கோடிக்கணக்குல விவசாயிங்ககிட்ட பணமிருக்கு. கூட்டுறவு வங்கில கோடிக்கணக்குல பணம் போட்டிருக்காங்க. வட்டி வாங்குறாங்க, ஃபைனான்ஸ் பண்றாங்க, லாரி வெச்சிருக்காங்க, பல தொழில் பண்றாங்க. லட்சக்கணக்கான விவசாயிங்க கோடீஸ்வரனாத்தான் இருக்காங்க. இதையெல்லாம் விட்டுட்டு, கோவணத்தைக் கட்டிக்கிட்டு, ரோட்டுல படுத்துக்கிட்டு ‘தண்ணியில்ல... தண்ணி விட மாட்டேங்கறாங்க’னு போராட்டம் நடத்துறாங்க. ‘ஒரு சென்ட் நிலம் இல்லாதவனெல்லாம் விவசாயினு சொல்லிக்கிட்டு போராடுறான்’னு பேசி விவசாயிகளோட வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டார்.
இப்போ, அதேமாதிரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கூட்டுறவு கடன் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருக்கார். இவர், “மற்ற மாநிலங்களில் இல்லாத நிலையில், தமிழகத்தில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்த போதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பயிர்க்கடன் வழங்கி வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்”னு சொல்லியிருக்கார்.
வடகிழக்குப் பருவமழை சரியா பெய்யலை. நடா புயல் மூலமா மழை கிடைக்கும்னு பார்த்தா அதுக்கும் வழியில்லை. காவிரியிலயும் தண்ணியில்லை. விதைச்ச பயிரெல்லாம் கருகிப்போச்சுனு விவசாயிகள் செத்துக்கிட்டு இருக்குறாங்க. இந்த நிலைமையில, விவசாயிகள் சந்தோஷமா இருக்காங்கனு அமைச்சர் சொல்லியிருக்கிறதுல, விவசாயிகள் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாங்க. இதைக் கண்டிச்சு டிசம்பர் 21-ம் தேதி ஆர்பாட்டம் நடத்தப் போறதா உழவர் உழைப்பாளர் கட்சி விவசாயச் சங்க மாநிலத்தலைவர் நாராயணசாமி சொல்லியிருக்கார்” என்றார், ஏரோட்டி கடுப்புடன்.
“ஆமாய்யா, தென் மாவட்டங்கள்ல மழை இல்லாமப் போனதால கடுமையான வறட்சி நிலவுது. சாத்துார் பகுதியில கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஏக்கர் பரப்புல மானாவாரியாகப் போட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு எல்லாம் கருகிப்போச்சாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில அமைச்சர்கள் விவசாயிகளுக்கு ஆறுதலா பேசாம, நோகடிக்கிற மாதிரி பேசுறது வருத்தமான விஷயம்தான்” என்று கவலையுடன் சொன்னார், வாத்தியார்.
அங்கு சற்று அமைதி நிலவ, கூடையில் இருந்து ஆளுக்கு ஒரு சிவப்புக் கொய்யாவை எடுத்துக் கொடுத்தார், காய்கறி.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே பேசிய ஏரோட்டி, “ராமநாதபுரம் மாவட்டத்துல பொந்தன் புளிங்கிற ஒரு வகை மரங்கள் இருக்கு. இந்த மரத்தோட இலைகள், பழங்கள் குதிரைகளுக்கு நல்ல தீவனமாம். அதோட பல மருத்துவக் குணங்களும் இதுல இருக்குதாம். இதோட இலை, பட்டைகளை அம்மை, காய்ச்சல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துறாங்களாம். இந்த மரங்கள் ஆயிரம் வருஷத்துக்கு மேல கூட இருக்குமாம். அப்படி வயசான மரங்கள்ல பெரிய பொந்து உண்டாகுமாம். தவிர இதோட இலைகள் புளிப்புச் சுவையில் இருக்குமாம். அதனாலதான் இதைப் பொந்தன் புளினு சொல்றாங்களாம். ஆனா, இந்த மரம் நம்ம நாட்டு மரம் கிடையாதாம். ஆப்ரிக்காதான் இதோட பூர்விகமாம். இதுக்கும் நம்ம புளிய மரத்துக்கும் சம்பந்தம் கிடையாதாம்.
அந்த காலத்துல ராமநாதபுரம் முக்கியமான துறைமுகமா இருந்ததால ஆப்ரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா நாட்டு வணிகர்கள் அடிக்கடி ராமநாதபுரத்துக்கு வருவாங்களாம். அப்படி வர்றப்போ, உயர் ரக குதிரைகளையும் அதுக்குத் தீவனத்துக்காக, இந்த ரக கன்னுகளையும் இங்க கொண்டு வந்திருக்கலாம்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. இந்த மரங்கள் சிவகங்கை, மதுரை மாவட்டங்கள்லயும் இருக்குதாம். அமெரிக்கன் கல்லூரில இந்த ரக மரம் இருக்குதாம். இந்த மரத்துல ஏற்படுற பெரிய பொந்துல தண்ணீரைக் கூட சேமிச்சு வைக்க முடியுமாம்.
ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நாம கடல்வழி வாணிபம் செஞ்சதுக்கு வரலாற்றுச் சின்னமா இருக்குது இந்தப் பொந்தன் புளி மரங்கள். இப்போ அழிவு நிலையில் இருக்குறதால இதைக் காப்பாத்த நடவடிக்கை எடுக்கணும்னு தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க” என்றார் ஏரோட்டி.
“சேலம் மாவட்டம், ஓமலூர் சரகத்தில், கே.என்.புதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இருக்கு. இங்க, 427 விவசாயிகளுக்குக் கொடுத்திருந்த பயிர்க்கடனைத் தள்ளுபடி செஞ்சிருக்காங்க. அதுல, 359 விவசாயிகள், 835 ஏக்கர் நிலத்துல மல்பெரி சாகுபடி செஞ்சதாகவும் அவங்களுக்கான கடனைத் தள்ளுபடி செஞ்சதாகவும் சொல்லியிருக்காங்க. ஆனா, அவங்க யாருமே பட்டு வளர்ப்புலயும் ஈடுபடலையாம். மல்பெரி சாகுபடியும் செய்யலையாம். 427 பேர்ல சில பேர் மட்டும்தான் மல்பெரி சாகுபடி செஞ்சிருக்காங்கனு பட்டு வளர்ப்புத்துறை அதிகாரிகள் சான்று கொடுத்திருக்காங்களாம்.
இதைத் தெரிஞ்சுகிட்ட ரஜினிங்கிறவர், இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களைத் திரட்டியிருக்கார். அதுல 385 பேர், மல்பெரி பயிரிட்டதா போலியான அறிக்கை தயார் செஞ்ச விஷயம் வெளிய வந்துடுச்சு. மானாவாரி நிலத்துல மல்பெரி சாகுபடி செஞ்சதா கணக்குக் காட்டி கடன் கொடுத்து அதைத் தள்ளுபடியும் செஞ்சிருக்காங்களாம். இந்த விஷயம் குறித்துப் புகார் எழும்புனதும், இப்போ விசாரணை நடந்துட்டு இருக்குதாம்” என்றார், வாத்தியார்.
சற்று வெயில் உறைத்து அடிக்கவும், “ஆடு, மாடுகளுக்குத் தண்ணி காட்டி நிழல்ல கட்டிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து ஓட, அத்துடன் மாநாடும் முடிவுக்கு வந்தது.