
பயணம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’.
‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காக இந்த முறை தேர்வு செய்யப்பட்டவர்கள், 7 பேர். தனியார் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணன், தனியார் நிறுவன உரிமையாளர் சின்னராஜா-எலிசபத் ராணி தம்பதி, ஊட்டியைச் சேர்ந்த மலைத்தோட்ட அதிபர் கல்யாண சுந்தரம்-நிர்மலா தம்பதி, தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பாலாஜி பிரபு மற்றும் சசிக்குமார் ஆகியோர்.
இவர்களை நாம் அழைத்துச் சென்றது, கோயம்புத்தூர் அடுத்துள்ள அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி சுப்பையனின் பண்ணைக்கு!
2007-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளிவந்த ‘பசுமை விகடன்’ இதழில், ‘கட்டுக் கட்டு கீரைக்கட்டு’ என்ற தலைப்பில் வெளியான குறுந்தொடர் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். தவிர, 2012-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன் இதழில், சுப்பையன் கண்டுபிடித்த தேங்காய் வெட்டும் கருவி குறித்த செய்தியும் வெளிவந்துள்ளது.

தென்னை மரங்கள், குதிரை மசால் தீவனம், கீரை வகைகள், சோலார் உலர்கலன் அமைப்பு, தேங்காய் எண்ணெய் தயாரிப்பு... எனக் கலந்து கட்டி இருந்தது, சுப்பையனின் 20 ஏக்கர் பண்ணை. நாம் அழைத்துச் சென்ற ஒரு நாள் விவசாயிகள் அனைவரையும் வரவேற்ற சுப்பையன், அனைவருக்கும் இளநீர் கொடுத்து உபசரித்தார். ஒரு நாள் விவசாயிகள், உறிஞ்சு குழல்(ஸ்ட்ரா) இல்லாமல் இளநீர் குடிக்கச் சிரமப்பட்டனர். அவர்களுக்குச் சிந்தாமல் இளநீர் குடிக்கும் கலையைக் கற்றுக்கொடுத்தார். இயற்கை இளநீரின் சுவையை ருசித்து வியந்தவாறே, சுப்பையனிடம் அனைவரும் அறிமுகமாகிக் கொண்டனர்.
அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிய சுப்பையன், சாமான் வைப்பறையில் இருந்து ஆளுக்கொரு கருவியை எடுத்து வரச்சொன்னார். களைக்கொத்து, மண்வெட்டி, கருக்கரிவாள் என்று ஆளுக்கொரு கருவியை எடுத்துக் கொண்டு சுப்பையனைப் பின்தொடர்ந்தனர். முதல் பயிற்சியைத் தீவனப்புல் பாத்தியில் ஆரம்பித்தார், சுப்பையன்.
“இது கோ-5 ரகத் தீவனப்புல். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு. தென்னை மரங்களுக்கு இடையில இதை நடவு செய்யலாம். ஆளுயரத்துக்கு வளரும். கறவை மாடு வெச்சிருக்கிறவங்க தோட்டத்துல கண்டிப்பா இந்தத் தீவனப்புல் இருக்கணும். பால் உற்பத்தியப் பெருக்கப் பசுந்தீவனம் அவசியம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘‘இதோட விதைக்கரணை எங்கு கிடைக்கும்?’’ என்று கேட்டார், கல்யாணசுந்தரம்.

“வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருக்கிற தீவனப்பயிர்த் துறையில் முன்பதிவு அடிப்படையில் விதைக்கரணைகள் கொடுக்கிறாங்க. சாகுபடி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்தும் வாங்கிக்கலாம்” என்ற சுப்பையனிடம், “இது வறட்சியைத் தாங்குமா?” என்று கேட்டார், கண்ணன்.
‘‘இதுக்கு வாரத்துக்கு மூணு முறை பாசனம் கொடுக்கணும். வறட்சியைத் தாங்காது. வாய்க்கால் பாசனம் செய்யறவங்க, வாய்க்கால் ஓரத்துல இதை நடவு செய்யலாம்” என்ற சுப்பையன் அதை வெட்டும் விதத்தைச் சொல்லிக்கொடுத்தார்.
“இப்படித்தான் அறுக்கணுமா?” என்ற எலிசபத் ராணி, தீவனப்புல்லை அறுக்கத் தொடங்கினார். புல்லின் மேல்பகுதியை மட்டும் அவர் வெட்ட மீண்டும் அரிவாளை வாங்கிய சுப்பையன், “புல் அறுக்கும் போது மேலாக அறுக்கக்கூடாது. அப்படி அறுத்தா மறுதழைவு சரியா வராது. கட்டை அழுந்த அறுக்கணும்” என்று மீண்டும் வெட்டிக் காட்டினார். அதேபோல அறுத்தார், எலிசபத் ராணி.

அடுத்து சோலார் உலர்கலன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார், சுப்பையன். “இதென்ன வித்தியாசமா இருக்கு?” என்று ஆச்சர்யம் காட்டினார், நிர்மலா.
“இங்க கிடைக்கிற தேங்காய்கள்ல கொஞ்சத்தைக் கொப்பரையாக்கி தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்றோம். அந்தக் கொப்பரையைக் காய வெக்கத்தான் இந்தச் சோலார் உலர்கலன். வழக்கமா கொப்பரையைத் திறந்த வெளியில்தான் காய வெப்பாங்க. அப்படிக் காய வெக்கிறப்போ பூஞ்சணம் பிடிக்காம இருக்கிறதுக்காக ரசாயனத்தைப் பயன்படுத்துவாங்க. ஆனா, இதுல உலர்த்தும்போது அந்தப் பிரச்னை இல்லை. மழைக் காலத்திலயும் இதை உபயோகப்படுத்த முடியும். இதுக்கு மானியமும் கிடைக்கிது. இதுல 2 டன் அளவுக்குக் காய வெக்க முடியும். இதனால, தூய தேங்காய் எண்ணெயை எங்களால தயாரிக்க முடியுது. இதுல கொப்பரை மட்டுமல்ல, எல்லா விளைபொருளையும் காய வைக்கலாம். இப்போகூட இதுல குதிரை மசாலைத்தான் காய வெச்சிருக்கேன்” என்றார்.

“குதிரை மசால் தீவனப்பயிர்தானே... அதை ஏன் காய வெக்கணும்?” என்று கேட்டார், பாலாஜி பிரபு. “முதல்ல அதுக்கு ஏன் இந்தப் பேர் வந்துச்சுனு சொல்லிடுங்க” என்றார், சசிக்குமார்.
“இதைக் குதிரைங்க விரும்பிச் சாப்பிடுறதால இந்தப் பேர் வந்திருக்கலாம். இதுல நிறைய புரதம் இருக்கிறதால கறவை மாடுகளுக்குக் கொடுக்கிறப்போ பால் தரமாகக் கிடைக்கிது. இதை அப்படியே கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். சென்னை, ஊட்டி, பெங்களூரு, கொடைக்கானல் மாதிரியான ஊர்கள்ல குதிரை வளர்த்திட்டு இருக்கிறவங்களுக்கு உலர்ந்த குதிரை மசால் தேவைப்படுது. அந்த மாதிரி இதைச் சாகுபடி செய்ய வசதியில்லாதவங்களுக்கு இதை உலர்த்தி விற்பனை செஞ்சிட்டு இருக்கேன். பந்தயக்குதிரை வெச்சிருக்கிறவங்க சிலரும் இதை எங்கிட்ட வாங்கிக்கிறாங்க” என்றார். அடுத்து அப்படியே அனைவரும் நடந்து போக, அங்கு சோளத்தட்டைகளைத் தீவனம் வெட்டும் இயந்திரத்தில் வெட்டிக் கொண்டிருந்தனர் ஆட்கள்.
“ஏன் இதை நறுக்கிக் கொடுக்கிறீங்க. அப்படியே போட்டா மாடு தின்னாதா?” என்று சந்தேகத்தைக் கிளப்பினார், நிர்மலா.
“இப்படி நறுக்கிக் கொடுத்தா தீவனத்த மாடுங்க முழுசா சாப்பிடும். இல்லாட்டி பாதி அளவை மாடுங்க சாப்பிடாம கழிச்சுவிடும். அதனால தீவனம் நிறைய வீணாகும். தீவன மேலாண்மையில நறுக்கிக் கொடுக்குறது முக்கியமான விஷயம்” என்றார், சுப்பையன்.
ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் சோளத்தட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து நறுக்கிப் பழகினர். நறுக்கிய தீவனத்தைக் கூடைகளில் அள்ளிய எலிசபத் ராணியும் நிர்மலாவும் தொழுவத்தை நோக்கி நகர... அவர்களை நிறுத்திய சுப்பையன், “இதைப் பச்சையா மாடுகளுக்குக் கொடுக்கக்கூடாது. காய வெச்சுதான் கொடுக்கணும். அங்க காய்ஞ்சிருக்கிறதை எடுத்திட்டுப் போங்க” என்றதும், கூடையில் இருந்தவற்றைக் கொட்டிவிட்டு காய்ந்த தீவனத்தை மாடுகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்தனர்.
சோளத்தட்டைகளைக் காய வைப்பதற்காக, அவற்றைக் களத்தில் கொட்டி... குறுக்கும் நெடுக்குமாக நடந்து கால் தாம்பு ஓட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்ததும், ஒரு நாள் விவசாயிகளுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. உடனே, சின்னராஜா, பாலாஜி பிரபு, கண்ணன் ஆகிய மூவரும் களமிறங்கிவிட்டனர். அடுத்து அனைவரையும் தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றார், சுப்பையன்.
அங்கு அணி அணியாக நின்றன, தென்னை மரங்கள். காய்த்துத் தொங்கின காய்கள். தெளிப்பு நீர்ப் பாசன முறையில் தண்ணீர் தெளிக்கப்பட்டுக்கொண்டிருக்க... தோப்பு முழுவதும் குளுமை சூழ்ந்திருந்தது.
“அருமையா இருக்கு. இங்கேயே ஒரு குடிசை போட்டுத் தங்கிடலாம் போல” என்ற சின்னராஜாவிடம், “சொந்தமா தோப்பு வாங்கிக் குடிசை போட்டுக்கலாம். இப்போ மரத்துல ஏறி தேங்காய் பறிங்க, பார்ப்போம்” என்று கிண்டலடித்தார், அவரது மனைவி எலிசபத் ராணி.
“நான் தூத்துக்குடிக்காரனாக்கும். சின்ன வயசுல எத்தனை பனைமரம் ஏறி நுங்கு வெட்டி இருப்பேன்” என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத்தில் ஏற முயற்சி செய்தார், சின்னராஜா. ஆனால், பாதி மரம்கூட ஏற முடியாமல் இறங்கிவிட்டார்.
“பனைமரம் சொரசொரப்பா இருக்கிறதால சுலபமா ஏறிடலாம். தென்னை மரம் வழுக்கும். கொஞ்சம் பழக்கம் தேவை. தென்னை மரம் ஏற தென்னை வளர்ச்சி வாரியம் மூலமா பயிற்சி கொடுக்கிறாங்க” என்று சொன்னார், சுப்பையன்.

“கிணறு நிறைய தண்ணீர் இருக்கு, அப்புறம் ஏனுங்க சொட்டுநீர் போட்டிருக்கீங்க?” என்று கேட்டார், கல்யாண சுந்தரம்.
“தண்ணீர் சேமிப்புக்குச் சொட்டுநீர் ரொம்ப அவசியம். அதில்லாம ஒரே சீரா பாசனம் செய்ய முடியும். கிணத்துல தண்ணீர் இருக்குங்கிறதுக்காக வீணடிக்கக் கூடாது. வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர்ல கொடுக்கிற தண்ணீரை சொட்டுநீர்ப் பாசனம் மூலமா 3 ஏக்கருக்குப் பாசனம் பண்ணலாம். அதில்லாம களைகள் கட்டுப்படும்” என்று பதில் சொல்லிய சுப்பையா, “எல்லாரும் மண்வெட்டிய எடுங்க. தென்னை மரங்களைச் சுத்தி வட்டப்பாத்தி எடுப்போம்” என்றார்.
ஆண்கள் அனைவரும் மண்வெட்டியோடு களமிறங்கினர். “எப்பவுமே வேர்களை ஒட்டி வரப்புப் போடக்கூடாது. 5 அடி விட்டத்துல வட்டமா வரப்பு கட்டணும்” என்று சொல்லி வரப்பு அமைத்துக் காட்டினார். அனைவரும் அதேபோல வட்டப்பாத்தி அமைத்தனர்.
பெண்களை நோக்கி “வாங்க நாம மூடாக்கு போடுவோம்” என்று அழைத்த சுப்பையன், “தென்னை மரத்தைச் சுத்தியும் எடுக்கிற வட்டப்பாத்தியில், தென்னை மட்டைகளை ரெண்டு, மூணா வெட்டிப் போடுறதுதான் மூடாக்கு. இதைப் போடுறப்போ தண்ணீர் ஆவியாகாது. நிலத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். இந்தத் தென்னை ஓலைங்க மட்கி மண்ணுல உரமாகிடும்” என்றார். உடனே அவர்கள் அதேபோல மூடாக்கு அமைத்தனர்.
“அடுத்து தென்னை மரங்களுக்கு இயற்கை உரம் வெக்கிறது குறித்துச் சொல்லித் தரப் போறேன்” என்ற சுப்பையன், “ஆளுக்கு ஒரு கூடையும் மண்வெட்டியும் எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு ஆட்டு எரு, மாட்டு எரு, கோழி எரு என்று மூன்று உரங்களும் கலந்த உரக்குவியல் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
கூடையோடு வந்த ஒரு நாள் விவசாயிகளிடம், “இதை அள்ளிட்டுப் போய் மூடாக்கு போடாத வட்டப்பாத்திகள்ல சுத்திக் கொட்டிட்டு வாங்க பார்ப்போம்” என்றார். அனைவரும் அதேபோலச் செய்ய ஆரம்பித்தனர்.
அதைப் பார்த்துக்கொண்டே பேசிய சுப்பையன், “தென்மேற்குப் பருவமழை தொடங்குறதுக்கு முன்னாடியும், வடகிழக்குப் பருவ மழை தொடங்குறதுக்கு முன்னாடியும் தென்னைக்கு உரம் வைக்கணும். ஆக, வருஷத்துக்கு ரெண்டு தடவை. நெலத்து மண்ணுல மண்புழு உட்படக் கோடானு கோடி நன்மை செய்யுற நுண்ணுயிரிகள் இருக்கு. ரசாயன உரங்களை மண்ணுல கொட்டுனா நுண்ணுயிரிகள் அழிஞ்சிடும். அதனால மண்ணு செத்து உபயோகமில்லாமப் போயிடும். ஆனா, இயற்கை உரங்களைப் போடுற நெலம் வளமா மாறிட்டே இருக்கும். எந்த விதையைப் போட்டாலும் பங்கமில்லாமல் வளரும். அதனால இயற்கை உரம்தான் எப்பவும் நல்லது. தொடர்ந்து இயற்கை உரங்களைத் தென்னைக்குக் கொடுத்தா, ஒரு மரத்துல வருஷத்துக்கு 200 காய்கள்கூட கிடைக்கும். இயற்கை உரங்கள்ல ஒண்ணுதான் ஜீவாமிர்தம்” என்று சுப்பையன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “சாப்பாடு தயார்” என அவருக்குத் தகவல் வந்தது.
“பம்புசெட்ல கை, கால் கழுவிக்கிட்டு வாங்க. சாப்பாட்டை முடிச்சிட்டு பயிற்சியை ஆரம்பிக்கலாம்” என்றார், சுப்பையன். அனைவரும் கை, கால்களைக் கழுவ ஆரம்பித்தனர். தென்னை நடவு தொழில்நுட்பம், ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை
அடுத்த இதழில்...
நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை)
மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.