மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2
பிரீமியம் ஸ்டோரி
News
நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி! பருவம்-2

பயணம்ஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது, ‘பசுமை விகடன்’. ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனதில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

          எண்ணெய் ஆட்டும் முறை குறித்து ஒரு நாள் விவசாயிகளுக்கு வகுப்பெடுக்கும் சுப்பையன்

கோயம்புத்தூர் அடுத்துள்ள அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி சுப்பையனின் பண்ணையில்... ஒரு நாள் விவசாயிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணன், தனியார் நிறுவன உரிமையாளர் சின்னராஜா-எலிசபத் ராணி தம்பதி, ஊட்டியைச் சேர்ந்த மலைத்தோட்ட அதிபர் கல்யாண சுந்தரம்-நிர்மலா தம்பதி, தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் பாலாஜி பிரபு மற்றும் சசிக்குமார் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டது குறித்துக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

‘தொண்டருக்கும் உண்டு, உண்ட களைப்பு’ என்று சொல்வதுபோல மதிய உணவைச் சாப்பிட்ட ஒரு நாள் விவசாயிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

அவர்களிடம், “நான் செஞ்சு பார்த்து வெற்றி அடைஞ்ச தென்னை நடவு தொழில்நுட்பம் பத்தி சொல்றேன் வாங்க” என்று அழைத்தார், சுப்பையன். உடனே அனைவரும் தலையாட்டி எழுந்து கிளம்ப, அவர்களைத் தென்னந்தோப்புக்குள் அழைத்துச் சென்றார்.

“வழக்கமா 25 அடி இடைவெளியில்தான் தென்னையை நடுவாங்க. இங்க, மரத்துக்கு மரம் எட்டரை அடி இடைவெளியில சதுரப்பாத்தி எடுத்து மூலைக் கொன்றாக நட்டிருக்கோம். இதுல ஒரு சதுரத்துல இருக்குற நாலு மரங்களுக்கும் சேர்த்து, சதுரப்பாத்தி நடுவில் தண்ணீர் விட்டாலே போதுமானதா இருக்கும். ஒவ்வொரு மரத்துக்கும் தனித்தனியா வட்டப்பாத்தி எடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு சதுரப்பாத்திக்கும் இடையில் 50 அடி இடைவெளி விட்டிருக்கோம். இந்த மரங்களை நட்டு பத்து வருஷமாச்சு. இதுல ஒரு மரத்துக்குச் சராசரியா 140 காய்கள் கிடைக்கிது. ஒவ்வொரு சதுரப்பாத்திக்கும் இடையில் இருக்கிற 50 அடி இடைவெளியில் காய்கறி, கீரைனு ஊடுபயிர்களையும் சாகுபடி செய்யலாம்” என்ற சுப்பையன், அவர்களை எண்ணெய் ஆட்டும் செக்கு இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த கொப்பரைத் தேங்காய், அருகில் ஓடிக்கொண்டிருக்கும் செக்கு, பாட்டில்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் எனச் சிறிய தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்தது.

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

“சோலார் உலர்கலன்ல எந்தவித ரசாயனமும் சேர்க்காம காய வெச்ச கொப்பரையில் இருந்துதான் எண்ணெய் ஆட்டுறோம். அதனால, சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கிது” என்ற சுப்பையனிடம், “ஒரு கிலோ கொப்பரையில் எவ்வளவு எண்ணெய் கிடைக்கும்?” என்று கேட்டார், நிர்மலா.

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

“ஒரு கிலோ கொப்பரை போட்டு அரைச்சா 650 மில்லி எண்ணெய், 350 கிராம் பிண்ணாக்கு கிடைக்கும். பொருள் தரமா இருக்குறதால விற்பனைக்குப் பிரச்னையேயில்லை. தேடி வந்து எண்ணெய் வாங்கிக்கிறாங்க. மாசம் 100 லிட்டர் அளவுக்கு எண்ணெய் விற்பனை செய்றேன். இந்தத் தகவல் கிடைச்சதே ‘பசுமை விகடன்’லதான்.

‘உற்பத்தி செய்றதுல ஒரு பகுதியையாவது, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதை ஒரு தாரக மந்திரமா எடுத்துக்கிட்டு தேங்காயில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். அதுமாதிரி நிறைய வல்லுநர்கள் சொல்வதையும் செயல்படுத்திட்டு வர்றேன். இப்போ நல்லா போயிட்டிருக்கு” என்ற சுப்பையன், நிர்மலாவுக்கும் எலிசபத்துக்கும் ஆளுக்கொரு எண்ணெய் பாட்டிலைக் கொடுத்தார். ஆசையோடு அவர்கள் வாங்கிக்கொண்டனர்.

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

தேங்காய் வெட்டும் கருவி குறித்துப் பேசிய சுப்பையன், “மட்டை சிறுத்துப்போன காய்களை வியாபாரிகள் வாங்க மாட்டாங்க. அந்தமாதிரி கழிக்கிற தேங்காயைக் காய வெச்சுடுவோம். அந்தத் தேங்காய்களை வெட்டுறதுக்காக நானே வடிவமைச்சது இந்தக் கருவி” என்றார். அனைவருக்கும் சூடான தேநீர் வர,  பருகி விட்டு விடைபெற்றனர்.

தொடர்புக்கு, சுப்பையன், செல்போன்: 93632 28039

ஒரு நாள் விவசாயிகளின் அனுபவங்கள்

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

சின்னராஜா: “எனக்குச் சொந்த ஊரு தூத்துக்குடி. கடலோரங்கிறதால மீன்களைத் தெரிஞ்சளவுக்கு விவசாயம்  தெரியாது. ஆனா, விவசாயம் செய்யணும்னு ஆசை உண்டு. அதனாலதான், முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைப் படிச்சிட்டிருக்கேன். இந்தப் பயிற்சி மூலமா என்னைப்போல ஆர்வம் இருக்குற நண்பர்கள் கிடைச்சிருக்காங்க.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

எலிசபத் ராணி: “விவசாயியே மதிப்புக்கூட்டினா கூடுதல் லாபம் கிடைக்குங்கிறதை கண்கூடா தெரிஞ்சுகிட்டேன். அதேமாதிரி மூடாக்கு, தீவனப்பயிர்களை நறுக்கி மாடுகளுக்குக் கொடுக்கிறதுனு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

கல்யாண சுந்தரம்: “மலைத்தோட்டப் பயிர்களை மட்டுமே தெரிஞ்ச எனக்கு, சமவெளிப் பகுதி விவசாயத்த தெரிஞ்சுக்கக் கிடைச்ச வாய்ப்பு இது. குறிப்பா சதுரப்பாத்தி தென்னை நடவு முறை அருமையான விஷயம். சோலார் உலர்கலன் பத்தின தகவல் எனக்கு ரொம்ப உபயோகமானது.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

நிர்மலா: “கணவருக்குத் துணையாகத்தான் வந்தேன். ஆனா, இங்க நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. சொட்டுநீர்ப் பாசனம் பத்தின தகவல் ரொம்ப உபயோகமா இருந்துச்சு.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

கண்ணன்: “நான், வாழ்க்கையில மண்வெட்டிய முதல்முறையா இங்கதான் தொட்டேன். வட்டப்பாத்தி எடுத்தது, களை எடுத்தது, வயல்ல வேலை செஞ்சது மறக்க முடியாத அனுபவம். விவசாயிகளோட உழைப்பை நேரடியா உணர முடிஞ்சது.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

பாலாஜி பிரபு: “பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சிட்டிக்குள்ளதான். அதில்லாம எப்பவும் வேலை டென்ஷன். இந்த ஒரு நாள் நான் கிராமவாசியா இருந்ததுல ரொம்ப சந்தோஷம்.”

நம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம்! - ஒரு நாள் விவசாயி!  பருவம்-2

சசிக்குமார்: “கோயம்புத்தூர்ல அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில்தான் பசுமை விகடன் அறிமுகம். 5 வருஷமா தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன். பால் பண்ணை வைக்கிற யோசனை இருக்கு. அதுக்கான நிறைய தகவல்கள் இந்தப் பயிற்சியில் கிடைச்சது.”

நீங்களும் ஒருநாள் விவசாயி ஆக வேண்டுமா?
 
‘விவசாயத்தைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது, ஆனால், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? உடனே 044 66802927 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பெயர், வயது, படிப்பு, செய்யும் தொழில், ஊர், மாவட்டம் போன்ற விவரங்களைப் பதிவு செய்யுங்கள். (காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை)

மாணவர், வேலை தேடிக்கொண்டிருப்பவர், அரசு ஊழியர், ஆசிரியர், டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி ஊழியர் என்று எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒருநாள் விவசாயியாக அனுபவங்களைப் பெற பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம்.