மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!

மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!

மாத்தி யோசிஓவியம்: ஹரன்

‘தலைவர் புகழ் சென்னை... தருமம் மிகு சென்னையில்’னு அருட்பிரகாச வள்ளலார் சென்னை தங்கச்சாலை பகுதியில வாழ்ந்த காலத்துல, சென்னை நகரைப் புகழ்ந்து பாடியிருக்காரு.

மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’னு சொன்ன, இதே வள்ளலார் மட்டும், டிசம்பர் 13-ம் தேதி காலையில சென்னை மாநகரத் தெருக்கள்ல நடந்திருந்தார்ன்னா, கதறிக் கதறி கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா, சென்னை சாலைகள் முழுக்க மரங்களா விழுந்து கிடந்துச்சு. ‘சிவப்பு ரோஜா’ங்கிற வர்தா புயல் சென்னை மாநகரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் புரட்டிப் போட்டிருச்சு. புயல்ல விழுந்த முக்கால்வாசி மரங்கள் குல்மொஹர், தூங்கா வாகைனு வெளிநாட்டு மர வகைகள்தான். மீதி விழுந்த மரங்கள், சரியா வளர்க்கப்படாத மரங்கள். சென்னை மாநகர மக்களுக்குப் புயல் அடிக்கப் போகுதுன்னு மூணு நாளைக்கு முன்னால இருந்தே, வானிலை மையம் மூலமா, தொடர்ச்சியா அறிவிப்புக் கொடுத்தாங்க அதனால, மக்கள் வெளியில நடமாடல.

ஆனா, முறிஞ்சு விழுந்த மரத்துல கூடு கட்டி வாழ்ந்த பறவைகளுக்கு யார் தகவல் சொன்னாங்க?

சாலை முழுக்க முறிந்து கிடந்த மரத்துக்கு அடியில, தேடி தேடிப் பார்த்தேன். ஒரு பறவைகூட இல்லை. ‘வானிலை ஆய்வு மையம்’ அதிநவீன செயற்கைக்கோளைப் பயன்படுத்தி மனுஷங்களுக்குப் புயல் அறிவிப்பைக் கொடுத்துச்சு. ஆனா, தங்களோட நுண்ணுணர்வு மூலமா, பறவைங்க... சென்னையைத் தாக்கப் போற புயலை உணர்ந்திருக்கு. இதனாலத்தான், பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்து போயிருக்குங்க.

காட்டுப் பகுதியில வாழக்கூடிய மக்களுக்கு, பறவைகளும் விலங்குகளும்தான், இன்னும்கூட, புயல், நிலநடுக்கம் மாதிரியான பேரிடர் முன்னறிவிப்பு வேலைகளைச் செய்யுதுங்க. கடல் பயணத்துல, வழிகாட்டவும், திசைக்காட்டும் பறவைகளும், ஆமை மாதிரியான விலங்குகளும்தான், நம்ம முன்னோர்களுக்கு உதவியிருக்கு. இதனாலத்தான், பல நாடுகளுக்கு ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடி’ இருக்காங்க. கடல் நீரோட்டத்தை அறிய ஆமைதான் வழிகாட்டியிருக்கு. வெளிநாட்டுக்காரன்,  கண்டுபிடிச்ச ‘காம்பஸ்’ங்கிற (Compass) திசைகாட்டி புழக்கத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே, நம்ம தாத்தாக்கள் கடல் மார்க்கமா ஜாவா, சுமத்ரானு பல நாடுகளுக்குப் பயணம் செஞ்சிருக்காங்க. திசைகாட்டி இல்லாம, அது எப்படிச் சாத்தியமாயிருக்கும்?

இயற்கையைத் தெய்வமா வணங்குற மக்களுக்கு, இயற்கை எப்போதும் கைகொடுக்கும். ‘தேவாங்கு’ பெரிய கண்ணும், சின்ன உடம்பும் கொண்ட விலங்கு. யாரையாவது திட்டும் போதுகூட, ‘தேவாங்கு’னு சொல்றது உண்டு. ஆனா, இந்த தேவாங்கை தங்களுக்கு உதவியா கடல் மாலுமிகள் பயன்படுத்தியிருக்காங்க. இது எப்பவும் மேற்குத் திசையை நோக்கித்தான் உட்காரும். அதனால, தேவாங்குகளைக் கடற்பயணத்துல எடுத்துக்கிட்டு போயிருக்காங்க. கடல் மாலுமிக்கு திசை தேவைப்படும்போது,  தேவாங்குங்க உட்கார்ந்திருக்கிற கூண்டைப் பார்ப்பார். அதை மையமா வெச்சு வெற்றிகரமா கடற்பயணம் செய்திருக்காங்க.

அதிநவீனத் தொழில்நுட்பத்துல முன்னோடின்னு சொல்ற ஐரோப்பிய நாடுகள்லகூட, ஒரு காலத்துல பறவைகளைப் பயன்படுத்தியிருக்காங்க. பூமிக்கு அடியில சுரங்கம் தோண்டப் போகும்போது, ‘கேனரி’ங்கிற ஒரு பறவையைக் கூண்டுல அடைச்சு, எடுத்துக்கிட்டுப் போவாங்களாம். அந்தப் பகுதியில நில அதிர்வு உருவாகப் போகிற சூழ்நிலை தெரிஞ்சவுடனே, இந்த ‘கேனரி’ பறவைங்க கூண்டுக்குள்ள இருந்தே, றெக்கையை அடிச்சுக்குமாம். அதோட ரொம்ப படபடப்பா இருக்குமாம். இந்த அறிகுறியை வெச்சே, சுரங்கம் தோண்டுற ஆட்கள், அந்தப் பறவைகளோட மேல ஏறி வந்திருவாங்க. சரியா, அந்தப் பகுதியில நிலநடுக்கம் உருவாகி, சுரங்கம் இடிஞ்சு விழுமாம்.

சுனாமி வந்த சமயத்துலகூட, ஒரு அதிசயம் நடந்திருக்கு. அந்தமான் பகுதியில ‘மோக்கன்’ங்கிற பழங்குடி மக்கள் இருக்கிறாங்க. கடல் நாடோடிகளான இந்த மக்கள், படகிலேயே பெரும்பாலான நேரம் இருப்பாங்க. சுமார் ஆயிரம்பேர் கொண்ட இந்த இனம், சுனாமி வந்த சமயத்துல அழிஞ்சிருக்கும்னு நம்ம இந்திய அரசாங்கம் நினைச்சது. பத்திரிகைகளும்கூட, அந்தமான் ‘மோக்கன்’ இனம் சுனாமியால் அழிந்துவிட்டதுன்னுகூட செய்தி வெளியிட்டாங்க. ஆனா, சுனாமி வந்த மூணாவது நாளே, அந்த மக்கள் உயிரோட இருக்கிறாங்கங்கிற தகவலை நம்ம கப்பற்படை அதிகாரிங்க தெரிஞ்சிகிட்டாங்க.

2004-ம் வருஷம் சுனாமி வந்த சமயத்துல எப்படித் தப்பிச்சிங்கன்னு, பேரிடர் மீட்பு அதிகாரிங்க, அந்தப் பழங்குடி மக்கள்கிட்ட கேட்டிருக்காங்க. அந்த இனத்தோட தலைவர், சலே கலத்தலாய், ‘‘கடல்ல உருவான மாற்றமும், பறவைகளோட நடவடிக்கையும், ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு உணர்த்துச்சு. அதனால, எங்க மக்கள் எல்லோரும், அருகில் உள்ள மலைக்குன்றுல ஏறிட்டோம். இயற்கை காட்டிய முன்னெச்சரிக்கை சரிதாங்கிறதை பனைமரம் உயரத்துக்கு மேல, கடல் அலை உருவானதைப் பார்த்து உறுதிப்படுத்திக் கிட்டோம்’’னு சொல்லியிருக்காங்க.

அந்தக் காலம், இந்தக் காலம், அடுத்த காலம்னு முக்காலத்துக்கும் இயற்கைதான் நிலையானது. அதை உணர்ந்து வாழக் கூடியவங்களுக்கு பாதிப்பு வராது. அப்படியே வந்தாலும், அது பெருசா இருக்காது. இயற்கையை விட, மனுஷந்தான் பெரியவன்னு நினைக்கிறவங்களுக்கு ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’துங்க!