
புறாபாண்டி
‘‘நாங்கள் விவசாயத்துக்குப் புதியவர்கள். கிராமத்தில் நிலம் வாங்கி, அதில் மரப்பயிர்கள் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த வகையான மரங்களை வளர்க்கலாம்?’’
வி.கே.துர்கா, சோழிங்கநல்லூர்.
‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, 2013-ம் ஆண்டு, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் ‘மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்... ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் மரம் வளர்ப்பு குறித்துச் சொன்ன தகவல்கள் உங்களுக்குப் பதிலாக இடம்பெறுகின்றன.

‘‘இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது, பருவநிலை மாற்றம்தான். அதைச் சரிசெய்யணும்னா, கண்டிப்பாக காடுகளை வளர்க்கணும். அப்பதான் வருமானத்தோட, பல்லுயிர் பெருக்கத்தையும் நிலை நிறுத்த முடியும். அந்தக் காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழிய வைக்கும். மழைத் தண்ணியை மண்ணும், மரங்களோட வேரும் சேர்ந்து புவிஈர்ப்பு விசை மூலமா பூமிக்கு அடியில சேமிச்சு வெச்சுக்கும். மரங்களுக்குத் தண்ணி தேவைப்படுறப்ப வேர் மூலம் இலைகளுக்குப் போயிடும். 3 மாச பயிரும், 6 மாச பயிரும் தண்ணி இல்லாம காயும்போதுகூட, மரங்கள் மட்டும் வாடாம இருக்கிறதுக்கு இதுதான் காரணம். தென்னை மரத்தோட ‘சல்லிவேர்’ தண்ணியை அதிகமா உறிஞ்சி எடுத்துக்கிற குணமுடையது. அதனால, மத்த மரங்களுக்குத் தண்ணி பத்தாம போயிடும். ஆக, தென்னையைத் தேவைக்கு மட்டும் வெச்சு வளர்த்தால் போதும்.

விவசாயிக்கு மரம் வளர்ப்பு மட்டும்தான் நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும். வீட்டைச் சுத்தி இருக்கிற இடங்கள்ல வேம்பு, நெல்லி, கொய்யா, பப்பாளி, முருங்கையை வைக்கலாம். குளியல், பாத்திரம் கழுவும் தண்ணீர் போகுற இடங்கள்ல வாழை, தென்னை வைக்கலாம். வேலியில் சவுண்டல், சீத்தான்னு வெயில்படும் இடங்கள்ல எல்லாம் தேவையான மரங்களை நட்டு வளர்க்கலாம். நிழல் பகுதியில கறிவேப்பிலை வளர்க்கலாம். தேக்கு, வருமானம் கொடுக்கிறதுக்கு நீண்ட காலமாகும். ஆனா, வேப்ப மரம் 5 வருஷத்துல வருமானம் கொடுத்திடும். இதுவரைக்கும் மலைப் பகுதிகள்ல மட்டும் வளர்ந்த ரோஸ்வுட், செஞ்சந்தனம் மரங்கள் எல்லாம் இப்போ சமவெளியிலயும் நல்லா வளருது.
ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காம, காடுபோல பல அடுக்கு முறையில... பழங்கள் கொடுக்கும் மரம், தீவன மரம், உரங்களைக் கொடுக்கும் மரம், எரிவாயு கொடுக்குற மரம், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு உதவுற மரம், நார் மரம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம், வேலிக்கு உதவுற மரம், மருத்துவக் குணமுடைய மரம், இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான மரம்னு 10 வகையான மரங்களை நடவு செய்து தோட்டத்தைக் காடாக்கிட்டா போதும். நமக்குத் தேவையான எல்லாத்தையும் அது கொடுத்திடும். அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக் கிடைக்குற பென்ஷன் (ஓய்வூதியம்) மாதிரி... மரங்கள் வளர்ந்து நம்மோட கடைசிக் காலத்துக்குப் பென்ஷன் கொடுக்கும்’’ என்று நம்மாழ்வார் சொல்லியுள்ள இந்த மரம் வளர்ப்பு நுட்பங்கள் எக்காலத்துக்கும் கைகொடுக்கும்.

‘‘எங்கள் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்துவிட்டன. இதனால், மரத்தின் மீது ஏறி காய்கள் பறிக்கச் சிரமமாக உள்ளது. எனவே, தென்னை மரம் ஏறும் கருவி மூலம், காய்களைப் பறிக்க விரும்புகிறோம். தென்னை மரம் ஏற உதவும் கருவி எங்கு கிடைக்கும்?”
எம்.ஆறுமுகம், ராணிப்பேட்டை.
‘‘தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால், நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். பெண்கள்கூட எளிதாக இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏற முடியும். அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பானது, இக்கருவி. இதில் ஏறும்போது விழுந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படாது.

இரண்டு வகையான கருவிகள் உள்ளன. முதல் வகைக் கருவி. ரூ.2500-க்கும், இரண்டாம் வகை கருவி ரூ.3000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மாநிலம், பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மண்டல விவசாயத் தொழில் வளர்ச்சி கூட்டுறவுச் சங்கத்தில் (Regional Agro Industrial Development Co-Operative Of Kerala) தென்னை மரம் ஏறும் கருவியை விற்பனை செய்கிறார்கள்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தென்னை மரம் ஏறும் கருவியின் செயல்பாடுகள் பற்றிய பயிற்சியைக் கொடுத்து வருகிறார்கள். இங்கு பயிற்சி பெற்றவர்கள், தென்னை மரம் ஏறும் கருவி மூலம் தினமும் ரூ.500 வரை வருமானம் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.’’
தொடர்புக்கு, Regional Agro Industrial Development Co Operative Of Kerala Ltd, Palakkad. Phone: 0491 2566319.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.